Posted on : Thu Apr 17 9:20:00 2008
கிழக்கில் தேர்தல் முடிந்ததும் வடக்கில் உயர் நிர்வாகக் குழு! புலிகளிடமிருந்து முற்றாக மீட்கும் வரை அதுவே இயங்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த கையோடு உடனடியாக வடக்கின் நிர்வாகத்திற் கென உயர்மட்ட ஆலோசனைக் குழுவொன்றை அரசு நியமிக்கவுள்ளது.அரச தகவல் திணைக்களம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மே 10ஆம் திகதி கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்ற பின்னர், இலங்கையில் அதிகார பகிர்விற்கான அனைத் துக் கட்சிக் குழு பரிந்துரைத்தமைக்கு இணங்க, உயர்மட்ட ஆலோசனைக்குழுவொன்றை அரசு வட மாகாண நிர்வாகத் துக்கு நியமிக்கும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்புப் படையினர் வடமாகா ணத்தை விடுதலைப் புலிகளின் பிடியிலி ருந்து மீட்கும்வரை குறிப்பிட்ட உயர்மட்ட ஆலோசனைக்குழு செயற்படும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், இதன்மூலம் வடமாகாணத் தின் உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி ஜனநாயகத்தை முழுமையாக அமுல்படுத்தலாம் என்றும் குறிப் பிட்டுள்ளார். வன்னியின் மேற்குப் பகுதி மற்றும் வடமேற்கு மன்னார் பகுதிகளில் இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ள தற்போ தைய நிலையில் வடபகுதிக்கு இடைக் கால ஆலோசனைச்சபையை அமைக்கும் அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.1987 இந்திய இலங்கை உடன்படிக் கையைத் தொடர்ந்து இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் கடந்த வரு டம் பிரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Posted on : Thu Apr 17 9:15:00 2008
ராஜித சேனாரத்ன தலைமையிலான குழு நோர்வேயில் சொல்ஹெய்முடன் பேச்சு
நிர்மாண மற்றும் பொறியியல் சேவை கள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு ஒன்று நோர்வே சென்று அந்நாட்டு சர்வ தேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்துப் பேச்சுகளை நடத்தி யுள்ளதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்தப் பேச்சுகள் நேற்று முன்தினம் இடம்பெற்றதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் மற்றும் மன்னாரிலும் இடம்பெற்றுவரும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக வும் மேலும் அந்தப் பகுதிகளில் இனந்தெரி யாத ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடை யோர் மேற்கொள்ளும் சட்டத்துக்கு முர ணான கொலைகள் உட்படப் பல விட யங்கள் தொடர்பாகவும் இந்தப் பேச்சு களின் போது கலந்துரையாடப்பட்டுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது.நோர்வேயின் வெளிவிவகார அமைச்சில் செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் எரிக்சொல்ஹெய்முக்கும் இலங்கைத் தூதுக்குழுவினருக்கும் இடையில் நடை பெற்ற இந்தப் பேச்சுகள் சுமார் இரண்டரை மணித்தியாலம் நீடித்ததாகத் அறியப்படு கிறது.இந்தப் பேச்களின்போது நோர்வே வெளிவிவகார அமைச்சரின் தகவல் தொடர்பாளரும் கலந்து கொண்டார் .இந்தச் சந்திப்பைப் படம்பிடிக்க ஊடக வியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி நோர்வே நாட்டவர் ஒருவர் இலங் கையில் வைத்து காணாமல் போனமை தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அம்பாறையில் சிறுபோக நெற்செய்கை விதை நெல்லுக்கு பெரும் தட்டுப்பாடு
வீரகேசரி இணையம் 4/15/2008 7:46:49 PM
அம்பாறையில் சிறுபோக நெற்செய்கைக்கான விதை நெல்லுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெருமளவிலான நெற்காணிகள் சேதமடைந்ததன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. சுத்தமான நல்லின விதை நெல்லை பெறமுடியாத நிலையில் இப்பிரதேச விவசாயிகள் கமநல சேவை நிலையங்களை நாடிவருகின்றனர்.
தற்போது இம் மாவட்டத்தில் நல்லின விதை நெல்லை தனியார் வியாபாரிகள் ஒரு மூடை 2700 ரூபா தொடக்கம் 3000 ரூபா வரை விற்பனைசெய்து வருகின்றனர். இம் மாவட்டத்தில் புதியரக நெல்லினம் அறிமுகப்படுத்தப்படாத நிலையில் சுத்தமான விதை நெல்லையும் பெறமுடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நெற்காணிகள் அறுவடை செய்ய முடியாமல் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பி.க்குள் உட்கட்சி மோதல் மேலும் தீவிரம்
[17 - April - 2008]
சுனில் ஹந்துநெத்தி அரசு பக்கம் தாவுகிறார்? எம்.ஏ.எம். நிலாம்
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் உட்கட்சிப்பூசல் மேலும் உக்கிரமடையும் நிலை உருவாகியுள்ளது. கட்சி மூன்றாகப் பிளவுபடுமளவுக்கு பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்டமைக்காக ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்சவை கட்சியின் உறுப்புரிமை உட்பட சகல பதவி நிலைகளிலுமிருந்து இடைநிறுத்திய ஜே.வி.பி. மத்திய குழு அவருக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி மத்திய குழுவுக்கு பதிலளிக்குமாறு கேட்டிருந்தது.
விமல் வீரவன்ச கட்சிக்குப் பதிலளிக்காமல் பாராளுமன்றத்தில் கட்சியை விமர்சித்து அறிக்கை விடுத்ததையடுத்து நீண்டகாலமாக இருந்துவந்த உட்பூசல் பகிரங்கத்துக்கு வந்தது.
இதனையடுத்தே ஜே.வி.பி. தலைவர் கட்சிக்குள் நடந்தவற்றை வெளியே கொண்டு வந்து விமல் வீரவன்ச மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி பதிலளிக்கும் வரை கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து ஜே.வி.பி. இரண்டு அணிகளாக பிரிந்துவிட்டது. சோமவன்ஸ அமரசிங்க தலைமையிலான அணி எதிரணியிலும் விமல் வீரவன்ச தலைமையிலான அணி அரச ஆதரவு தனி அணியாகவும் இயங்கத் தொடங்கின.
இந்த நிலைமையில் கட்சி உடைவதை விரும்பாத சிலர் இவர்களை ஒன்றுபடுத்த எடுத்த முயற்சிகள் ஆரம்பத்திலேயே குழம்பிப்போனது. கட்சி மத்தியகுழு விமல் வீரவன்ச மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியதையடுத்து சோமவன்ஸவும் மற்றும் சிலரும் கட்சியை அழிக்க சதி செய்வதாகவும், தன்னை வெளியேற்றுவதே முதற் பணியெனவும் விமல் வீரவன்சவும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
விமல் வீரவன்சவுடன் பேச்சு நடத்த சிலர் மேற்கொண்ட முயற்சியை முற்றாக நிராகரித்த ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து தான் நிரபராதி என்பதை நிரூபித்தால் மட்டுமே அடுத்த கட்டமாக விமல் வீரவன்சவுடன் பேச முடியுமென உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்.
விமல் வீரவன்சவுடன் இணைந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கட்சியின் மத்திய குழுவை சோமவன்ஸ அமரசிங்க தன்னிச்சைப்படி வழிநடத்த முற்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். விமல் வீரவன்ச விடயத்தில் கட்சி உயர்பீடம் நேர்மையுடன் நடந்து கொள்ளத் தவறினால் கட்சி முற்றுமுழுதாக சீர்குலையலாமெனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கட்சியில் உள்ள சதிகாரர்கள் வெளியேற்றப்படாதவரை கட்சியை பாதுகாக்க முடியாது போகுமெனவும் அந்த எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இரண்டு அணிகளாக ஜே.வி.பி. பிளவுபட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியும் முரண்பட்டு அரசுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது.
ஏற்கனவே ஹந்துநெத்தி கட்சியிலிருந்து வெளியேற முயன்றபோது அவர் ஜே.வி.பி.யினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சோமவன்ஸ அமரசிங்க, விமல் வீரவன்ச ஆகியோர் இணைந்தே தம்மை சிறைப்படுத்தி வைத்திருந்ததாக சுனில் ஹந்துநெத்தி பாராளுமன்றத்தில் ஐ.தே.க.விலிருந்து அரசுபக்கம் தாவி அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த எம்.பி. ஆளும் தரப்புப்பக்கம் மாறும்போதே சுனில் ஹந்துநெத்தியும் அரசு பக்கம் தாவவிருந்ததாக அந்த அமைச்சரே குட்டை அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்த நிலைமையில் ஜே.வி.பி. யால் நாட்டு மக்களுக்கு இனிமேல் எந்த நன்மையும் செய்ய முடியாதெனக் கூறியிருக்கும் சுனில் ஹந்துநெத்தி ஐக்கிய தேசியக் கட்சியை விட நாட்டுக்கு பயன்தரக் கூடிய சேவையாற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவளித்து சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த கருத்துத் தெரிவிக்கையில் யார் கட்சியிலிருந்து வெளியேறினாலும் கட்சியை அழித்து விட முடியாதெனவும் ரோஹண விஜேவீர காலம் முதலே கட்சிக்குள் சதிசெய்து துரோகமிழைத்தோர் காணப்பட்டதாகவும் இன்று அவர்கள் முகவரியற்றுப் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
கட்சிக்குத் துரோகமிழைப்போர் வெளியேற்றப்பட்டபின்னர் கட்சியை மீண்டும் பலம் கொண்டதாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் லால் காந்த குறிப்பிட்டார்.
முஸ்லிம்களுக்குரிய ஒரேயொரு மாகாணமான கிழக்கிற்கு முஸ்லிமே முதலமைச்சராக வேண்டும்
Tuesday ,15 April 2008( Posted : 08:04:13GMT) Muslim Guardian
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குரிய ஒரேயொரு மாகாணம் கிழக்குத்தான். எனவே, இதன் முதலமைச்சர் முஸ்லிம் ஒருவராகவே இருக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் பிரதியமைச்சரும் கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
கடந்த திங்கள் மாலை கிண்ணியா புகாரிச் சந்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது;
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 40.1 வீதத்தினராகவும் தமிழ் மக்கள் 39.9 வீதத்தினராகவும் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி கிழக்கு மாகாணத்தின் ஆசனங்கள் 14 முஸ்லிம்களுக்கும் 14 தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
இத்தேர்தலில் எந்தச் சமூகம் அதிக ஆசனங்களைப் பெறுகிறதோ அந்தச் சமூகத்திற்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, முஸ்லிம் சமூகத்துக்கு மிக முக்கியமான தேர்தல் இது.
1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் நாம் ஒன்றுபட்டு வாக்களித்ததால் 17 ஆசனங்களைப் பெற்றோம். அதுபோன்றதொரு ஒற்றுமை இத்தேர்தலிலும் தேவை. ஆகையால் ஐ.தே.கட்சியிலுள்ள முஸ்லிம்களும் எம்மோடு இணைந்துகொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஏ.ஸி.அப்துல் நஸார், மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர்களான டாக்டர் ஏ.எம்.லாபிர், திடீர் தௌபீக் ஆகியோரும் உரையாற்றினர்.
யூஎஸ்எய்ட் இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவி
[17 - April - 2008]
தினக்குரல் கிழக்கு, வடமத்திய மாகாண பிராந்திய நிர்வாகங்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பான யூஎஸ்எய்ட் 12 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்தப் பிரதேசங்களின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகங்களின் பதிலளிக்கும் கடப்பாட்டை மேம்படுத்துதல், முரண்பாட்டுத் தீர்வு என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்காகவே இந்த உதவி வழங்கப்படுகிறது.
இன மோதல்களின் விளைவாக ஏற்பட்டிருக்கும் அபிவிருத்தி தேவைகளுக்கு உதவுவதற்காகவே இத்தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் புதிய நிகழ்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மோதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதும் இலங்கைக்கு உதவியளிக்கும் திட்டங்களை முன்னெடுப்பதில் யூஎஸ்எய்ட் ஈடுபாட்டுடன் இருப்பதாக யூஎஸ்எய்ட்/ இலங்கை குழுவின் பணிப்பாளர் ரெபேக்கா ஜோன் கூறியுள்ளார்.
ஜனநாயகம், நல்லாட்சிக்கு அமெரிக்கா நிதி உதவி
வீரகேசரி நாளேடு 4/17/2008 9:44:04 AM
இலங்கையில் ஜனநாயகம், நல்லாட்சியை வலுப்படுத்துவதற்காக 12 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் ஜனநாயகம், நல்லாட்சி, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஐந்தாண்டு செயற்திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்கா நிறுவனம் யு.எஸ். எயிட் 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிராந்தியத்தில் நல்லாட்சிக்காக உதவியளித்தல் என்ற செயற்திட்டத்தின் ஊடாகவே இந்த நிதி வழங்கப்படவுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முடிவிற்கு பின்னர் தொடரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியாகவே ஜனநாயகம் நல்லாட்சியை கட்டியெழுப்பும் இச்செயற்திட்டம் அமையவுள்ளதாக யு.எஸ். எயிட் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏ.ஆர்.டி. அமைப்புடன் இணைந்து இலங்கையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள யு.எஸ். எயிட் அமைப்பு, இனப்பிரச்சினையிலிருந்து மீட்சி காண்பதற்காக பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக கூறியுள்ளது.
இலங்கையில் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி சர்வதேச அமைப்பு வேதனை தெரிவிப்பு
வீரகேசரி இணையம் 4/15/2008 1:18:57 PM
இலங்கையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக சர்வதேச அமைப்பொன்று குற்றம் சாட்டி உள்ளது. போதுமான போசாக்கின்மை, குடும்ப வறுமை மற்றும் தொடரும் போரால் அவர்கள் பெற்றோர் பாதுகாவலர்களை இழத்தல் சிறுவர் துஷ்பிரயோகம் போர் கொடுத்துவரும் உடல் உள ரீதியிலான ஊனங்களினாலும் இலங்கையில் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான கண்காணிப்பு பட்டியல் என்னும் சர்வதேச அமைப்பு வேதனை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Posted on : Thu Sep 13 10:20:00 2007
படுவான்கரைப் பகுதிகளைச் சேர்ந்த அகதிகளின் 20ஆயிரம் மாடுகளை அரசுடைமையாக்குவதற்கு முயற்சி!
மட்டக்களப்பு படுவான்கரையில் அகதிகளாகியுள்ள மக்களின் 20 ஆயிரம் மாடுகளை கட்டாக்காலி மாடுகள் என்று குறிப்பிட்டு அவற்றைப் பொலன் னறுவை தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையிடம் ஒப்படைக்கப் பாது காப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பதுளை செங்கலடி வீதியான "ஏ 5' வீதியில் அமைந்துள்ள படையினரின் முகாம்களுக்கு இந்த மாடுகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வரு வதனாலேயே இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.இந்த மாடுகள் முகாம்களுக்குத் தொல்லை தருகின்றன என்று படையினர் தமது படை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க, அவர்கள் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கும் கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கும் முறைப்பாடு செய்திருக்கின்றனர்.இந்த மாடுகள் அனைத்தும் கட்டாக்காலி மாடுகள் என்றும் இவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் படை அதிகாரிகள் இந்த இரண்டு அமைச்சுகளுக் கும் வேண்டுகோள் விடுத்திருக்கின் றனர்.இதனைத் தொடர்ந்து இந்த மாடுகள் அனைத்தையும் பொலன்னறுவையில் உள்ள தேசிய கால்நடை அபி விருத்திச் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது எனத் தெரிகின்றது.
No comments:
Post a Comment