பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
[01 - April - 2008]
எஸ்.பி. திஸாநாயக்கா கூறுகிறார்
"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடமிருந்து கருணாவை பிரித்தெடுத்த பெருமை, எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே சாரும்.
அதனாலேயே கிழக்கு மாகாணத்தை இவ்வரசினால் மீட்க முடிந்தது. இந்த யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டால், நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவோம்.
தேர்தல் வேளையில் பிரபாகரன் மேற்கொண்ட நடவடிக்கைகளினாலேயே ரணில் விக்கிரமசிங்க தோல்வியை சந்தித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின்
தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை நூலகசேவை கேட்போர்கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, பதுளைத் தொகுதி அதிகாரசபைக் கூட்டத்தில் பிரதம விருந்தினராகக்
கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்சியின் பதுளை பிரதான அமைப்பாளர் றரின் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.
திசாநாயக்க தொடர்ந்து பேசுகையில்;
உலகிலேயே கூடுதலான அமைச்சர்களைக் கொண்ட நாடு எமது நாடாகும்.
சீன அமைச்சரவையில் 25 பேரும், இந்திய அமைச்சரவையில் 31 பேருமே அமைச்சர்களாக உள்ளனர். ஆனால், அமைச்சரவையில் உள்ள 108
அமைச்சர்களும் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 1400 கோடி ரூபா நிதி இவர்களுக்காக செலவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது,
நாட்டை அபிவிருத்தி செய்வதென்பது இயலாத விடயமாகும்.
இத்தகைய நிலையினாலேயே இந்நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. இந்த அமைச்சர்களும் அரசும் நீடிய நாட்களுக்கு ஆட்சியை
தக்கவைத்துக்கொள்ள முடியாது. மக்களின் சாபமே இதற்கு மூலகாரணமாகும். 108 அமைச்சர்களும், மனிதநேயமற்ற வகையில் செயல்பட்டுக்
கொண்டிருக்கின்றனர். இவ் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சுகளின் பொறுப்புகள் என்னவென்றும் இவர்களுக்குத் தெரியாது. பெரும்பாலான
அமைச்சர்களுக்கு குறைந்தபட்சம் அமைச்சு அலுவலகங்கள் கூட வழங்கப்படவில்லை.
கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டிருப்பது குறித்து அரசு, பெரும் தம்பட்டம் அடிக்கின்றது. பாதுகாப்புத்துறைக்கு பொறுப்பானவர்கள் பிரபாகரனிடமிருந்து
கருணாவைப் பிரித்தெடுத்ததனாலேயே கிழக்கு மாகாணத்தை தங்களால் மீட்க முடிந்ததென்றும் கூறுகின்றனர். உண்மை நிலையும் அதுவேயாகும்.
பிரபாகரனிடமிருந்து கருணாவை பிரித்தெடுப்பதற்கு பெரும் பங்களிப்பை செய்தவர் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே. அவர்
விடுதலைப்புலிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது, தனியானதோர் ஈழம் தமக்கு தேவையில்லையென்று ஒப்பந்தமொன்றில் கருணாவிடம்
கையொப்பத்தினை சூட்சுமமாகப் பெற்றுவிட்டார். இக்கையொப்பமே பிரபாகரனையும், கருணாவையும் இரு துருவங்களாக்கிவிட்டது. இதன் பயனால்
தான் கிழக்கு மாகாணத்தை எளிதில் மீட்க முடிந்தது. இதற்கு எமது தலைவர் ரணிலின் செயல்பாடே காரணமாகவிருந்தது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வினால் நாட்டு மக்கள் சொல்லொணா துயரை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். எதிர்வரும் 12 ஆம், 13
ஆம் திகதிகளில் சித்திரைப் புத்தாண்டைக் கூட மக்களினால் கொண்டாட முடியாத அவலம் ஏற்பட்டிருக்கின்றது. இனியும் பொறுமையாக இருக்க
முடியாது. வீதிக்கு இறங்கிப் போராட வேண்டிய அவசரமும், அவசியமும் ஏற்பட்டிருக்கின்றது.
உலக நாடுகளின் மார்க்கோஸ் மற்றும் இடி அமீன் போன்ற தலைவர்கள் மக்கள் போராட்டத்தின் மூலம் நாட்டைவிட்டு ஓடிய வரலாறுகள் இருந்து
வருகின்றன. அதுபோன்று, மக்களுக்கும், நாட்டிற்கும் துரோகமிழைக்கும் இன்றைய ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இவ்வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பிரபாகரனை கொன்றொழிப்பதற்கான திட்டத்தினை அரசு முன்னெடுப்பதாகத் தெரியவருகின்றது. அரசின் அத்திட்டம் சாத்தியமானால், நாமே அதிக
மகிழ்ச்சியடைவோம். ஐ.தே.க.வின் தோல்விக்கு பிரபாகரனே முக்கிய காரணமாவார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரபாகரன் நெகிழும் தன்மையை
கடைப்பிடித்திருப்பாரேயானால் ரணில் விக்கிரமசிங்கவே, தற்போதைய ஜனாதிபதியாக இருந்திருப்பார்.
மக்கள் விடுதலை முன்னணியினரைப் பொறுத்தவரை, அவர்கள் நரித் தந்திரம் கொண்டவர்கள். அவர்கள் இரட்டை வேடம் பூண்டு வருகின்றனர்.
இன்றைய அரசு வீழ்த்தப்படாமல் பாதுகாத்து வருபவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரே. நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் மக்களுக்கு
பெரும் துரோகமிழைத்தவர்களும் அவர்களேயாவர். இம் முன்னணியினரின் மனிதாபிமானமற்ற செயல்பாடுகளை மக்கள் மறந்துவிடவில்லை.
இன்றைய ஆட்சியாளர்கள் அதிமுக்கிய மூன்று விடயங்களை நிறைவேற்றிக்கொள்வதே அவர்களின் இலக்காக இருந்து வருகின்றது. அமைச்சுப் பதவி
மோகம், பெருமளவு சொத்து சேகரிப்பு, காம இச்சை போன்றவையே மூன்று அதிமுக்கிய விடயங்களாகும்" என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும். பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தமதுரையில்;
"நாட்டு மக்கள் இன்றைய அரசு மீது ஆத்திரம் கொண்டுள்ளனர். அம்மக்களின் அலை, இன்றைய நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் பக்கம்
திரும்பியுள்ளது.
நாடு இன்று வங்குரோத்து நிலையினை அடைந்துவிட்டது. அரச ஊழியர்களுக்கான சம்பளத்தினை வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தளவிற்கு
பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகின்றது.
கிராமத்திற்கு கிராமம், வீட்டிற்கு வீடு என்ற ரீதியில் ஐ.தே.கட்சியின் பங்குதாரர்கள் நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் தெரிவாகியுள்ளனர். வெகு விரைவில் இந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் ஐ.தே.க.
அரசு மூலம் எமது வெற்றிக்கு பக்கபலமாயிருந்தவர்களை, ஆட்சியின் பங்குதாரர்களாக்குவோம்" என்றார்.
No comments:
Post a Comment