இராணுவத் தளபதி பொன்சேகா பாகிஸ்தானுக்கு அவசர பயணம்
[05 - May - 2008]
வடக்கே மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று ஞாயிற்றுக்கிழமை பாகிஸ் தானுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஆறுநாள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் இராணுவத்தளபதி, அங்கு பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பையும் சந்திக்கவுள்ளார்.
வடக்கே நடைபெறும் மோதல்களையடுத்து பாகிஸ்தானிடமிருந்து இலங்கைப் படையினர் அவசர இராணுவ உதவிகளைக் கோரியிருந்தனர்.
பல்லாயிரக்கணக்கான ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் பல்குழல் ரொக்கட்டுகளும் அவசரமாகத் தேவைப்படுவதாக அண்மையில் இலங்கை இராணுவம் பாகிஸ்தானிடம் அவசர கோரிக்கையை விடுத்திருந்தது.
இந்த நிலையிலேயே, இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று பாகிஸ்தானுக்கான ஆறு நாள் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பை விட முப்படைத் தளபதிகளையும் சிரேஷ்ட படை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பாகவும் இராணுவத் தளபதி முக்கிய கவனம் செலுத்துவதுடன், அது தொடர்பாகப் பேசுவாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாகவும் உயர்மட்டக் குழுவொன்று இராணுவத்தளபதியுடன் பாகிஸ்தான் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இந்தியாவுக்கு ஒரு வாரப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது அவருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
_________________________________
மன்னாரில் கடற்படையினரின் காவல் நிலை மீது தாக்குதல்:
3 படையினர் பலி- ஆயுதங்கள் மீட்பு
[திங்கட்கிழமை, 05 மே 2008, 09:14 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] புதினம்
மன்னார் பள்ளிக்குடாவில் சிறிலங்கா கடற்படையினரின் காவல் நிலை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய தாக்குதலில் 3 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் "புதினம்" இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளதாவது:
பள்ளிக்குடா கோந்தைப்பிட்டியில் உள்ள கடற்படையினரின் காவல் நிலை மீது விடுதலைப் புலிகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் 3 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய படையினர் தப்பியோடினர்.
இதில் கடற்படையைச் சேர்ந்த ஒருவரின் உடலமும், ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்:
ஆர்பிஜி புறப்ளர் - 02ஆர்பிஜி செலுத்தி - 01ஆர்பிஜி எறிகணைகள் - 06ஏ.கே. எல்எம்ஜி - 01ஏ.கே. எல்எம்ஜிக்குரிய றம் மகசின் - 05கவச அங்கிகள் - 02தலைக்கவசம் - 02தொலைத்தொடர்புக் கருவித் தொகுதி - 01
ஆகியன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.
முன்னதாக சிறிலங்கா கடற்படையினரின் முக்கிய தளங்களை நோக்கி ஏக காலத்தில் விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தினர் என்றார் அவர்.
கடற்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான காவல் நிலைகள் ஊடாகவே அண்மைக்காலத்தில் மன்னார் கடல் தொழிலாளர்களுக்கு கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கி வந்த சிறிலங்கா கடற்படையினர், அவர்கள் பிடித்து வரும் மீன்களைப் பறிமுதல் செய்து துன்புறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமாலையில் படையினரின் முன் நகர்வு முறியடிப்பு - புலிகள் அறிவிப்பு!
வீரகேசரி இணையம்
யாழ், முன்னரங்கில், முகமாலை ஊடாக இலங்கை இராணுவம் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி,விடுதலை புலிகளால் முறியடிக்கபட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இதில் 8 படையினர் கொல்லபட்டுள்ளதாகவும், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும்,படை தரப்பை சேர்ந்த ஒருவரின் உடல் கைப்பற்றபட்டுள்ளதாகவும் விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.பின்தளங்களில் இருந்து சரமாரியான பல்குழல் பீரங்கி மற்றும் ஆட்டிலெறி எறிகணைகளின் பக்க ஆதரவுடன் இன்று முற்பகல் 10:00 மணியளவில் முகமாலையில் உள்ள விடுதலை புலிகளின் காவலரண்கள் மீது படையினர் தாக்குதலை தொடுத்திருந்தனர்.இதேவேளை இடம்பெற்ற முறியடிப்பு தாக்குதலில் ஒரு சில ஆயுதங்களையும் படையினரிடமிருந்து கைப்பற்றி உள்ளதாக விடுதலை புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகுடா கோந்தை கடற்படை காவலரண் மீது தாக்குதல்!
வீரகேசரி இணையம் 5/5/2008 10:10:01 AM -
மன்னார்,பள்ளிகுடா கோந்தை கடற்கரை பகுதியல் அமைந்திருந்த இலங்கை கடற்படையின் காவலரண் மீது விடுதலை புலிகளின் கடற்புலிகள் அணியினர் இன்று அதிகாலை 2.00 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக விடுதலை புலிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் காவலரண் மீது நடத்தபட்ட தாக்குதலில் மூன்று கற்படையினர் கொல்லபட்டுள்ளதாகவும்,ஒருவரது சடலம் உட்பட ஆயுதங்களும் மீட்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் தேசிய பாதுகாப்புகான ஊடக மத்திய நிலையம் கடற்படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்,தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் தற்போது தேடுதல் இடம்பெற்று வருவதாகவும்.தெரிவித்துள்ளது.
இராணுவம் புலிகள் கடும் மோதல் 17 படையினர் பலி; 34 பேர் படுகாயம் 39 புலிகள் பலி என்கிறது படைத்தரப்பு
வீரகேசரி நாளேடு 5/5/2008 8:29:08 AM -
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் முழுவதும் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் போது 17 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். மோதல்களின் போது 39 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 73 பேர் படுகாயங்களுக்குள்ளாகியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்காக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
மோதல்கள் குறித்து பாதுகாப்பு மத்திய நிலையம் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது நேற்று முன்தினம் அதிகாலை முதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் பல இடங்களில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம், முகமாலை, மன்னார், புளியங்குளம், பாலம்பிட்டி, மடு வடக்கு, யோதவாவி கிழக்கின் செட்டியார்க்கட்டையடம்பன், அடம்பன், மணலாறு ஜனகபுரம் வடக்கு, ஆண்டான்குளம் மற்றும் கிரிஇப்பன்வௌ போன்ற பகுதிகளிலேயே இம்மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இம்மோதல்களின் போது விடுதலைப் புலிகளின் இலக்குகளை நோக்கி படையினர் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
படையினரின் முன்னகர்வை முறியடிக்கும் முகமாக விடுதலைப் புலிகளாலும் பதில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பதில் தாக்குதல்களை அடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மோதல்களின் போது 39 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 73 பேர் படுகாயமடைந்ததாக விடுதலைப் புலிகளின் செய்திப் பரிமாற்றங்களின் மூலம் தெரியவந்தது.
இம்மோதல்களின் போது மன்னார் புளியங்குளம் பகுதியின் 1.5 சதுர கிலோமீற்றர் பரப்பளவு நிலம் படையினரர்ல கைப்பற்றப்பட்டது. அத்துடன் மன்னார் யோதவாவி கிழக்கில் அமைந்துள்ள செட்டியார்க்கட்டையடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோதல்களை அடத்து படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் 6 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் கவசப்படையை எமது கவசப்படையாக மாற்றுவோம்: கேணல் தீபன்
[ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2008, 07:08 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புதினம்
சிறிலங்காப் படையினர் மீண்டும் கவசப்படையைப் பயன்படுத்தி தாக்குதலை தொடர்வார்களானால் அந்தப் படையணி சின்னாபின்னமாக்கப்படும். அது சிலவேளை விடுதலைப் புலிகளின் கவசப்படைப் பலமாக உருவாகுவதற்கான நடவடிக்கையாக மாறும், அதனை நாம் மாற்றுவோம் என்று வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். முகமாலையில் களமுனைப் போராளிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி வாழ் மக்கள் சமைத்த உணவு, உலர் உணவு, குளிர்களி என்பவற்றை வழங்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மாதம் 23 ஆம் நாள், சிறிலங்காப் படையினரின் முகமாலை முன்நகர்வினை முறியடித்த வெற்றியின் மகிழ்வோடு, போராளிகளை உற்சாகப்படுத்த உலர் உணவுகளுடன் நீங்கள் களமுனைக்கு வந்திருக்கின்றீர்கள். இதனையிட்டு போராளிகள் மகிழ்வடைகின்றனர், நிறைவடைகின்றனர
சிறிலங்காப் படைத் தளபதி சரத் பொன்சேகா பாரிய வீர சபதமொன்றை இட்டு- அதாவது, ஈழப்போர் வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத படை நடவடிக்கையினை சிறிலங்காப் படையினர் தொடங்கினர்.
கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரை படை நடவடிக்கை செய்து ஆனையிறவைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையில் சிறிலங்காப் படையினர் களத்தில் குதித்தனர்.
சரத் பொன்சேகாவின் வீரசபதமானது சிறிலங்காப் படையினர் இதுவரையும் சந்திக்காத தோல்வியை சந்திக்கப் போகின்றது என்பதனை நான் போராளிகளுக்கு எடுத்துக் கூறினேன்.
களத்தில் எதிரிக்கு எமது பதிலை நாம் காட்டினோம். அன்றைய வெற்றிக்கான காரணம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் திட்டமிடலும், வழிகாட்டலும்தான். அத்துடன் களத்தில் நின்ற போராளிகளினதும் தளபதிகளினதும் அர்ப்பணிப்பும், எமது மக்களின் பின்தளப் பங்களிப்பும் ஊடாகத்தான் இந்த வெற்றியினை நாம் பெற்றெடுத்தோம்.
முகமாலையில் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் வருகை தந்த மக்களின் பின்தள பங்களிப்பு ஊடாகவும், மக்கள் களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவு கொடுத்து உற்சாகப்படுத்தியதன் ஊடாகவும்தான் வெற்றியைப் பெற்றோம்.
அதாவது, இந்த சண்டைக்களத்தைப் பொறுத்த மட்டில் கிளாலி தொடக்கம் கண்டல் வரையான பகுதியில் எமது போராளிகள் 10:30 மணிநேர தாக்குதல் திறனுடன் எதிரிக்கு எதிராக தீவிரமாகப் போரிட்டனர்.
சரத் பொன்சேகாவின் அறிக்கையின் பின் கிளிநொச்சிக்கு படையினர் வந்து விடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மனங்களில் இருந்தது. ஆனால் களமுனைப் போராளிகள் ஒவ்வொருவரின் மனதிலும் ஓரங்குலம் கூட எதிரி பிடித்துவிடக்கூடாது என்ற உறுதியில் தான் களத்தில் போராடினர்.
இந்த உறுதியுடனும் 25-க்கும் அதிகமான மாவீரர்களின் அர்ப்பணிப்பின் விளைவாகவும் தான் முகமாலை களத்தில் நாம் பாரிய வெற்றியைப் பெற்றெடுத்தோம்.
சிறிலங்காப் படையினர் 10:30 மணி நேரமாக எறிகணை, டாங்கி, வானூர்தித் தாக்குதல்களை தீவிரமாக நடத்தினர். இவற்றுக்கு மத்தியில்தான் எமது போராளிகள் போராடினர்.
இந்தக் களத்தில் சிறிலங்காவின் 53 ஆவது, 55 ஆவது டிவிசன் ஆகிய இரண்டு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான அனுபவம் பெற்ற படையினர் களம் இறக்கப்பட்டனர்.
ஒரே நேரத்தில் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர். அதனை எமது போராளிகள் தீவிரமாக எதிர்த்து நின்று களமாடி வெற்றி பெற்றனர்.
சிறிலங்காப் படை நினைப்பது போன்று ஆனையிறவை இலகுவில் பிடித்துவிட முடியாது. சிறிலங்காப் படை ஆனையிறவுக்கான போரைத் தொடருமானால், அது யாழ்பாணத்தை படையினர் இழப்பதற்கான போராக மாறும். அதுதான் நடக்கப் போகின்றது. அவர்கள் கவசப் படைப்பிரிவை உருவாக்கியுள்ளனர். அந்தப் படைப் பிரிவுதான் ஆனையிறவை நகர்ந்து பிடிப்பதற்கான சிறிலங்காப் படையினரின் நம்பிக்கை நட்சத்திரமும் கூட.
படை நடவடிக்கைக்கு இறங்க முன்னதாக கடந்த மாதம் 22 ஆம் நாள் நாங்கள் கவசப் படைப்பிரிவின் இரு டாங்கிகளை அழித்து ஒரு செய்தியை அவர்களுக்கு கொடுத்தோம்.
இருந்தும் 23 ஆம் நாள் அந்த கவசப்படையணியும் தாக்குதலில் பங்கு கொண்டது. அதில் ஆறுக்கும் அதிகமான கவசப்படையின் கலங்கள் அழிக்கப்பட்டன.
சிறிலங்காப் படையினர் மீண்டும் கவசப்படையை பயன்படுத்தி தாக்குதலை தொடர்வார்களானால் அந்தப் படையணி சின்னாபின்னமாக்கப்படும். அது சிலவேளை விடுதலைப் புலிகளின் கவசப்படை பலமாக உருவாகுவதற்கான நடவடிக்கையாக மாறும், அதனை நாங்கள் மாற்றுவோம்.
தற்போது சிறிலங்காப் படையினர் படை நடவடிக்கை தொடர்ந்தால் கூட அதனை நாம் எதிர்கொள்ளத் தாயாராக உள்ளோம். எதிரி நினைப்பது போன்று முகமாலைக் களமுனையில் எதனையும் செய்துவிட முடியாது. அதற்கு மக்களின் முழுப்பங்களிப்பும் உதவியும் தொடர்ந்தும் இருக்க வேண்டும்.
ஆனையிறவுக்கான சிறிலங்காப் படையின் படை நடவடிக்கை முடிந்து விட்டது என நினைத்து விடக்கூடாது. இது ஆரம்பமாகத்தான் உள்ளது.
சிறிலங்காப் படையினர் பல முனைகளில் வன்னியை ஆக்கிரமிக்கும் படை நடவடிக்கையைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர். ஆனால் சிறிலங்காப் படையினர் இன்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் போட்ட தந்திரோபாயத் திட்டத்துக்குள் சிக்குப்படத் தொடங்கியுள்ளனர்.
சண்டைக்கள நிலவரம் மாறும். அதனை விடுதலைப் புலிகள் மாற்றுவார்கள். மக்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்க வேண்டும். பின்தள உதவிகள் களத்தில் சீராக கிடைக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து போராடினால்தான் வெற்றியைப் பெறலாம். இந்தக் காலகட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதன் மூலம் வெற்றியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் அவர்.
முகமாலையில் பாரிய முன்நகர்வை சிறிலங்காப் படை மேற்கொண்டது ஏன்?: இளந்திரையன் விளக்கம்
[புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008, 06:21 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புதினம்
வட போர்முனையான முகமாலையில் பாரிய முன்நகர்வை சிறிலங்காப் படை மேற்கொண்டது ஏன்? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் விளக்கியுள்ளார். ஒட்டுசுட்டானில் கடந்த சனிக்கிழமை (26.04.08) நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ்க் கலையரங்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இது ஓர் நுட்பமான கால கட்டம்.
ஒருவித இறுக்கமும் எழுச்சியும் போரின் புதிய வடிவங்களுமாக
மக்களின் எழுச்சியும் வரலாறு காணாத மக்களின் பங்களிப்பும்
உணர்வு ரீதியான மக்களின் பின்புலச் செயற்பாடுகளுமாக இருக்கிற கால கட்டம் இது.
எங்கள் வீரத்தினைப் பறை சாற்றுகின்ற மண் இது.
தமிழர்களின் மாபெரும் வீரமறவர்களின் பெயரை நினைவு கூற வைக்கின்ற-
ஓயாத அலைகள் - 3 சமர்களுக்கான தொடக்க நிலை நகர்வுகள் தொடங்கப்பட்ட புனித மண் இது.
வரலாற்றில் துணிச்சலும் விவேகமும் இணைந்ததாக வீரம் கொண்ட உன்னதமான பண்பாட்டின் அடிப்படையில் சாம்ராஜ்ஜியங்கள் கட்டி எழுப்பப்பட்டன.
அவை காலத்திற்கு காலம் சில வளர்ச்சியடைந்தன.
சில வீழ்ச்சியடைந்தன.
கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர் ஒருவர், தமது வீரமரபுகளை கிரேக்க மக்கள் மறக்கத் தொடங்கினர். தமது வீரமறவர்களை அவர்கள் நினைக்கத் தவறினர். வீரமான செயற்பாடுகளினால் தமது நாட்டைக் காத்தவர்களை- தமது நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்களை- வீர சாதனைகளைப் புரிந்தவர்களை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மறக்கத் தொடங்க- அந்த சாம்ராஜ்ஜியத்தில் வீர உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கத் தொடங்கியது. விரிந்து வியாபித்திருந்த கிரேக்கத்தின் மகிமையும் அப்போது குன்றத் தொடங்கியது. கிரேக்கம் மீண்டும் ஒரு குறுநாடாக மட்டுப்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கார்.
மாவீரத் தமிழன் பண்டாரவன்னியனின் நினைவுகளை தேக்கி நிற்கின்ற இடத்தில் நாம் கூடியிருப்பது மகிழ்ச்சி.
நமது எதிரியாக இருக்கின்ற கொழும்பு நிர்வாகம் வன்னிப் பெருநிலப்பரப்பில் 3 முனைகளில் முக்கிய களங்களைத் திறந்து இனவெறி ஆதிக்கப் போக்குடன் தமிழரின் பலத்தை ஒடுக்கி தான் நினைத்ததை செய்து முடிக்கலாம் எனும் கனவில் நடவடிக்கைகளுக்கு மேல் நடவடிக்கையாக மேற்கொண்டிருக்கின்றது.
அவர்களுக்கு அவ்வப்போது ஆங்காங்கே தகுந்த பதிலடியும் பாடமும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும் அந்தப் பாடங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் மீண்டும், மீண்டும் போர் வெறியுடனும், போர் முனைப்புடன் வந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வன்னி மண்ணில்- சிறிய சண்டைகளில் இருந்து பெரிய சமர்கள் வரை அவர்கள் வாங்கிய அடி என்பது வரலாற்றில் ஒரு தனிப்பதிவாக முடிவற்று நீளும் தொடராக அமையக்ககூடிய அளவிற்கு இருக்கின்றது.
போராட்டத்தின் தாய் மடியாக தமிழீழ விடுதலை என்கின்ற கருத்தியலின் தாங்கு தளமாக இருக்கின்ற இந்த மண்ணில் எதிரியானவன் தனது பலத்தை நிலை நாட்டுவதற்கு மேற்கொண்ட அத்தனை முயற்சிகளையும் இந்த மண் வீழ்த்தியிருக்கின்றது.
மீண்டும் தன் இனவெறி நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தனது படை பலத்தை வைத்து தான் நினைத்ததை சாதிக்கலாம்- தமிழீழத்தின் விடுதலை உணர்வை- விடுதலைத் துடிப்பை நசுக்கி விடலாம் என்று எதிரியானவன் நினைக்கின்றான். அதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்கிறான்.
மீண்டும் மீண்டும் அடி வாங்குகின்றான்.
இந்த நடவடிக்கைகள் ஒரு சுழற்சியாக நடந்து கொண்டிருக்கின்றன.
போர்த் தெரிவு
2006 ஆம் ஆண்டு மாவிலாறில் கொழும்பில் ஆட்சி செய்யும் ராஜபக்ச சகோதரர்கள் போரைத் தொடங்கினர்.
தமிழீழத்திற்கு எதிராக கொழும்பு அரசு போரை தொடங்கிய போது ஓரு போர் நிறுத்த சூழல் இருந்தது. அதனை அவர்கள் மதிக்கத் தவறினர். போர் நிறத்த கண்காணிப்புக் குழு இருந்தது. அதனை அவர்கள் உதாசீனம் செய்தனர்.
இங்கே போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தது. அந்த ஒப்பந்தத்தை அவர்கள் கை விட்டார்கள்.
தமிழர்களின் படையை வெல்லலாம்-
புலிகளைப் போரில் தோற்கடிக்கலாம்-
மிகவும் எளிதாக இந்த நாட்டில் சிங்கள பௌத்தத்தை நிலைநாட்டலாம்-
தமிழினத்தின் விடுதலைக் குரலை நசுக்கலாம்
என்று அவர்கள் கருதினர்.
சமாதானத்தின் வழியில் சென்று தமிழர்களின் பிரச்சினையை ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்ப்பதற்கான ஒரு வழி அப்போது இருந்தது.
அந்த வாய்ப்பை நிலைப்படுத்திக்கொள்வதற்கு அணுகுமுறைக்கு வசதியாக இங்கே சமாதான ஏற்பாட்டாளர்களும் இருந்தனர்.
ஆனால் அதனை விட்டு அவர்கள் அன்று போரைத் தெரிவு செய்தனர்.
இனவாத விசமூட்டி வளர்க்கப்பட்ட மக்களால் நிறைந்து வழிகின்ற அந்த சிறிலங்காவைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கான உரிமை என்பது இங்கு கிஞ்சித்தேனும் இல்லை.
இது ஒரு பௌத்த சிங்கள நாடு மட்டுமே என்று நினைக்கின்ற- இனவெறி கொண்ட இனவாதிகளைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு என்று எதுவுமே கொடுக்கக்கூடாது அவர்களை போரின் வழியில்தான் நசுக்க வேண்டும் என்கின்ற எண்ணங்களை கொண்டிருந்தனர்.
ஆகையால் இயல்பாகவே தமது விருப்பத்தேர்வாக ராஜபக்ச சகோதரர்கள் போரைத் தெரிவு செய்தனர்.
அவ்வப்பொது வந்து போகும் சிறிலங்காவின் ஆட்சியாளர்களுக்கு இந்த இனப்பிரச்சினையை சமாதான வழியில் தீர்த்து வைப்பதற்கான வாய்ப்புக்களை தாராளமாக எமது தேசியத்தலைவர் வழங்கினார்.
அவர்களோ ஏமாற்றினார்கள் அல்லது முதுகில் குத்த முனைந்தார்கள் அல்லது பேச்சுக்களின் போது பேரம் பேச நினைத்தனர்.
ஆகையால்தான் அவர்களால் நியாயமான ஒரு தீர்வை இங்கு கொண்டுவர முடியவில்லை.
அவர்கள் தாமாக போரை தேர்ந்தெடுத்தனர்.
தற்போது மன்னார் களமுனையைத் தெரிவு செய்தனர்.
வேகமாக- இலகுவாக- குறைந்த இழப்புக்களுடன் மன்னார் பிரதேசத்தில் அவர்களால் பாதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.
ஆமை வேகத்தில் அவர்கள் நகர விழுந்த அடிகளோ அசுர வேகத்தில் இருந்தன.
வண்டி வண்டியாக உடலங்கள் சென்று கொண்டிருந்தன.
காயப்பட்டவர்களின் எண்ணிக்கைகளால் மருத்துவமனைகள் நிறைந்தன.
அனுராதபுர மருத்துவமனைகளில் காயப்பட்ட படையினரைப் பார்க்க வந்த உறவுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும் பார்க்கின்றனர்.
கேள்விக்கணைகள்
இலங்கை ஒரு கடலால் சூழப்பட்ட தீவு. அங்கு வாழ்கின்ற மக்கள் முதன்மையான உணவாக அரிசியை உண்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது.
ஆனால் இன்று அந்த அரிசி ஒழிக்கப்படுகின்றது. கடைகளில் மறைக்கப்படுகின்றது. பதுக்கப்படுகின்றது. அதனைப் படையினரை வைத்து எடுத்துக்கொடுக்க வேண்டிய நிலை சிறிலங்கா அரசுக்கு உருவாகியிருக்கின்றது.
ஏன்?
அவர்களது போர்வெறி-
போரினால் ஏற்பட்ட அழுத்தம்-
அனைத்துலகச் சந்தைகளில் அரிசி விலையின் விழுக்காடு உயர்ந்தாலும் கூட அதனைத் தாண்டி மிக அதிகளவில் சிறிலங்காவின் நகரங்களில் கொழும்புச் சந்தைகளிலே அரிசியின் விலை அதிகரித்திருக்கிறது.
போரின் விளைவுகளை சிறிலங்கா ருசிக்கத் தொடங்கியுள்ளது.
இத்தகைய அழுத்தங்களில் இருந்து திசை திருப்புவதற்காக அவர்களுக்கு அவசரமாக ஒரு போர் தேவை.
இதுவரை உதவி வந்த நாடுகள் இனி உங்களுக்கு உதவமுடியாது என்று அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
இந்த அழுத்தம் படிப்படியாக கொழும்பு ஆட்சியாளர்களது கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கின்றது.
அதிலிருந்து திசை திருப்புவதற்காக அவர்களுக்கு அவசரமாக ஒரு போர் தேவைப்பட்டது.
"ஆண்டுக்கணக்காக மன்னாரில் நடவடிக்கையைச் செய்கின்றீர்கள். நீங்கள் குறிப்பிடத்தக்க பேறுகளைக் காட்டவில்லை. எவ்வளவு தூரம் நீங்கள் முன்னேறினீர்கள். அப்படியானால் புலிகளை வலுவிழக்கச் செய்து விட்டீர்களா?" என்கின்ற கேள்வி சிறிலங்காவில் எழத் தொடங்கியுள்ளது. சிங்கள ஆய்வாளர்களும் கேள்வி கேட்கத்தொடங்கி விட்டனர்.
"இத்தனை ஆண்டுகள் போர் நீண்டு செல்கின்ற நிலையில்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்பந்தத்ததைக் கூட நீங்கள் கிழித்து வீசியிருக்கின்ற நிலையில்
புலிகளது பலத்தை நீங்கள் எந்தளவுக்கு அடக்கியிருக்கின்றீர்கள்"
என்ற கேள்வியை தென்னிலங்கையில் கேட்கத் தொடங்கியிருக்கின்றனர்.
அனைத்துலக நாடுகளில் கேட்கத் தொடங்கியிருக்கின்றனர்.
அவர்களை நம்பி இங்கே முதலீடு செய்பவர்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இங்கு வருமானத்தைத் தருகின்ற உல்லாசப் பயணிகள் கேட்கத் தொடங்கியிருக்கின்றனர்.
அந்த ஏற்பாட்டு நிறுவனங்களின் முகவர் அமைப்புக்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றனர்.
"இந்தப் போர் வெல்கின்ற போரா? எதனை நீங்கள் பெற்றுத் தந்திருக்கின்றீர்கள்? பிரச்சினை இல்லாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டீர்களா? போராடுகின்ற அமைப்பை நீங்கள் வளமற்றவர்களாக்கி விட்டீகளா?" என்று அவர்கள் கேட்கின்ற எந்தக் கேள்விக்கும் இல்லை என்பதே இவர்களது பதிலாக இருக்கும்.
"விடுதலைப் புலிகளின் வான்படை தான் செயற்படும் வல்லமையை இழந்து விட்டதாக அவர்களால் நிரூபிக்க முடிந்ததா?
இல்லை
விடுதலைப் புலிகளின் கடல் இறைமை ஆற்றலை ஒடுக்கிவிட்டோம் என்று அவர்களால் உறுதிபடக் கூற முடிந்ததா?
இல்லை.
அனுராதபுரத்தில் அல்லது கட்டுநாயக்காவில் நடந்தது போலவோ ஒரு தாக்குதலை அல்லது தாக்குதல்களை செய்ய மாட்டார்கள் புலிகள் என்று சிறிலங்கா அரசால் உத்தரவாதப்படுத்த முடிந்ததா?
அதுவும் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மரபுக்கட்டமைப்பு அரண்கள் அமைத்து ஆட்லறிகளை நிறுத்தி வலு நிலைகளைப் பாதுகாத்து தற்காத்து எல்லைச் சண்டையைச் செய்கின்ற ஒரு மரபுப்போர் கட்டமைப்பு விடுதலைப் புலிகளிடம் இருக்கின்றது. அதனையாவது நீங்கள் இல்லாது ஒழித்து விட்டீர்களா?
அதுவும் இல்லை.
அப்படியானால் எங்கே செல்கிறீன்ர்கள்?"
என்ற கேள்வியை இப்போது ஆய்வாளர்கள்- அவதானிகள்- உதவி செய்வோர்கள்- உள்நாட்டு மக்கள் என்று கேட்கத் தலைப்பட்டு விட்டனர்.
படைத்தரப்பை எடுத்து நோக்குவோமாக இருந்தால் அவர்களின் மனநிலையைத் தக்க வைப்பதற்கு ஒரு வெற்றிப்போக்கைக் காட்ட வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது.
வழமையாக இரண்டு அல்லது மூன்று எறிகணைகளை வீசிவிட்டு விடுதலைப் புலிகள் 20 பேர் இறந்தார்கள் அல்லது 50 பேர் இறந்தார்கள் என்று கணக்குப் போட்டு களத்திற்கு வெளியே இருக்கின்ற மக்களை ஏமாற்றுவது போல் களத்தில் இருக்கின்ற வீரர்களை ஏமாற்ற முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.
குடாநாட்டில் இன்று நிலை கொண்டிருக்கின்ற படைகள் அத்தனை பேரின் மனதிலும் ஒரு அச்சம் குடிகொண்டிருக்கின்றது.
புலிகள் ஒரு வலிந்த தாக்குதல் ஒன்றைச் செய்யப் போகின்றார்களோ? அப்படிச் செய்தால் அது எவ்வாறு அமையும் என்கின்ற ஒரு கேள்வி வந்திருக்கின்றது.
அப்படியானால் குடாநாட்டுத் தளத்தைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்கின்ற ஆய்வு தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.
முகமாலைச் சமரின் பின்னணி
குடாநட்டில் உள்ள படைகளுக்கான வாசல்களாக பலாலி வான்தாளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியன உள்ளன.
இவை இரண்டுமே ஒவ்வொரு வீரனுக்குமான வாசலாக இருக்கின்றது.
அந்த இடம் கூட புலிகளின் எறிகணை வீச்சுக்கும் தாக்குதலுக்குள்ளாவதுமாக இருக்கின்ற ஒரு சூழ்நிலை.
அந்த ஒட்டுமொத்தப் படைகளின் மனநிலையைத் தக்க வைப்பது உறுதியைப் பேணுவது என்பது மிகச்சிரமமாக இருப்பது என்கின்ற காரணத்தினால் அவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் தங்களின் எல்லைகளை விரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அங்கே சிறிலங்கா அரச படைக்கு எழுந்துள்ளது.
அந்த நிர்ப்பந்தத்தின் விளைவுதான் முகமாலையில் அவர்கள் அந்தப் படை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அந்த நடவடிக்கையை அவர்கள் சாதாரணமாகச் செய்யவில்லை.
அதோ படை எடுக்கின்றோம்
இதோ கவசப்படை வைத்திருக்கின்றோம்
காலாட்படை வைத்திருக்கின்றோம்
சிறப்புப்படை வைத்திருக்கின்றோம் என்று நாட்டுக் கூத்தில் கட்டியம் கூறுவதனைப் போல் திரட்டினர்.
அனைத்து மட்டத்திலிருந்தும் தளபதிகளிடத்தில் இருந்தும் பலவிதமான கட்டியங்கள் வந்தன.
பிடித்து விடுவோம் என்றும்
உடனே நாங்கள் ஒடுக்கி விடுவோம் என்றும்
பரந்தனில் நின்று கிளிநொச்சி மீது போர் தொடுப்போம் என்றும் கூறினார்கள்.
ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது.
களத்தில் நிற்கின்ற எங்கள் போராளிகள் உக்கிரமாக அவர்களைத் தாக்கி தாங்கள் உயிரிலும் மேலாக மதிக்கின்ற இந்தத் தாய் மண்ணின் மீது வைத்திருக்கின்ற பற்றுறுதியை நிலைநாட்டி ஒரு பெருஞ்சமரைப் புரிந்து ஆக்கரமிப்பாளர்களை அடித்து விரட்டியிருக்கின்றனர்.
அவர்களின் ஆயுதங்களைத் கைப்பற்றியிருக்கின்றனர்.
அங்கே அவர்களின் படை பலங்களைச் சேதப்படுத்தியிருக்கின்றனர்.
இரண்டு பற்றாலியனுக்கும் அதிகமான படையினர் களத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களில் முக்கால்வாசிப் ர் திரும்பி வர முடியாதளவுக்கு இறந்து விட்டார்கள் அல்லது காயப்படுத்தப்பட்டு விட்டார்கள்.
இதுதான் இன்று அங்குள்ள நிலை. ஆனால் அவர்களின் அந்தச் சண்டையை நிறுத்த முடியாது.
அவர்கள் மீண்டும் வருவார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது நிர்ப்பந்தம்.
தமிழர்களை ஒழிப்பதற்காக- தமிழர்களை அழிப்பதற்காகத் தொடங்கிய இந்தப் போரானது இன்று ஆட்சியார்ளகள் தமது கதிரைகளையும் பதவிகளையும் தக்க வைப்பதற்கான போராக மாறியிருக்கின்றது.
சிங்கள அரசியல் தலைவர்கள் சொட்டுச்சொட்டாகவும் தொகை தொகையாகவும் மூட்டி வளர்த்த அந்த இனவாதப் பாம்பு அந்த விசம் அவர்களை நோக்கித் திரும்பியிருக்கின்றது.
கருநாகம் அழகாக இருக்கும்.
அதன் கருமை ஒரு நீல நிறக்கருமை. பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும். அது படமெடுத்தால் புல்லரிக்கின்ற அளவிற்கு அதில் ஒரு அழகுத் தோற்றம் வெளிப்படும்.
அதற்காக அதனை முத்தமிட முடியுமா? சிங்களவர்கள் அதனைத் தான் செய்தனர்.
தமிழர்களை யார் அதிகமாக வதைப்பேன் என்று சொன்னானோ அவனுக்குத்தான் அதிகமான வாக்குப் போட்டனர்.
அந்தளவுக்கு அங்கே அவர்களிடத்தில் இனவாத விசம் ஊட்டப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கான எதிர்ப்புணர்வு தமிழர்களைப் பற்றிய ஒரு மோசமான பரப்புரை அங்கே கட்டவிழ்த்து விடப்பட்டது.
காலத்திறகு காலம் வந்த ஆட்சியாளர்கள் அதனைக் காட்டிக்காட்டியே ஆட்சி மேடையேறினார்கள்.
தமிழர்களுக்கு யார் அதிகம் அநியாயம் செய்வேன் என்று சொல்கின்றார்களோ அவர்கள் மிக இலகுவாக அரசியலில் மேலே வரக்கூடிய சூழ்நிலை அங்கே உருவானது.
அந்த இனவாதப் பாம்பு சிங்கள மக்கள் மத்தியில் அவர்களின் உள்ளங்களில் சிறிது சிறிதாக வளர்ந்து இன்று நன்றாகப் பெருத்த நிலையில் உள்ளது.
ஆனால் அந்தப் பாம்பின் விசம்- வளர்த்தவரைக் கொல்லும் இயல்புடையது என்பதனை அவர்கள் பார்ப்பதற்குத் தவறிவிட்டனர்.
இன்று போர் இல்லாது சிங்களவர்களால் வாழ முடியாது.
சிங்களத்தலைவர்களால் பிழைக்க முடியாது.
கொழும்பு ஆட்சியாளர்களினால் இயங்கமுடியாது என்கின்ற நிலையை இன்று ஏற்படுத்தி வைத்துள்ளது.
அவர்கள் மீண்டும் முகமாலைக்கு வருவார்கள். அன்று மீண்டும் வரலாறு எழுதப்படும்.
அங்கே களத்தில் நிற்கின்ற உங்கள் உடன்பிறப்புக்கள்- பிள்ளைகள் மீண்டும் அங்கே வரலாறு எழுதுவார்கள்.
அவர்களுக்கு அந்தப் பாடம் புரியும் வரை இறுதிவரை எங்களின் உரிமை நிலைநாட்டுப்படும் வரை அதனைச் செய்கின்ற திடசங்கற்பத்தோடு நாம் தொடர்ந்தும் போராடுவோம்.
இந்தப் போராட்டத்தை கட்டமைத்த தொடக்கத்தில்- அதனை வடிவமைக்கும் போதே- அதற்கான அத்திவாரத்தை அமைக்கும் போதே- எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்பு நடக்கக்கூடிய விடயங்களை எல்லாம் மனதில் கொண்டு அந்த அத்திவாரத்தை எமது தேசியத் தலைவர் அமைத்து வந்தார்.
விடுதலைப் போராட்டத்திற்கான உதவியை ஆதரவை எங்கிருந்தும் பெறலாம்.
ஆனால் விடுதலைப் போராட்டம் எந்த உதவியிலும் ஆதரவிலும் தங்கியிருக்காது என்கின்ற அந்த உறுதியான நிலைப்பாட்டை- அந்த தீர்க்கமான சிந்தனையை- அந்தத் திண்ணியக் கருத்தியலை அந்த அத்திவாரத்தில் எமது தேசியத் தலைவர் இட்டு வைத்திருக்கின்றார். விதைத்திருக்கின்றார்.
அதனால் நாங்கள் இன்று வரை தலைநிமிர்ந்து நிற்கின்றோம்.
அடக்குமுறை அரசுக்கு உதவ இன்னும் ஆயிரம் அரசுகள் இருக்கும். ஆனாலும் எமது போராட்டம் நசுக்கப்பட்டதா?
அந்த வல்லரசு இங்கு வந்தபோது கூட என்ன நடந்தது?
மாறி, மாறி வரும் ஆட்சியாளர்கள் தமது போர்த் திறனைக் காட்டுவதற்கு வீறுகொண்டு எழுந்தபோது இங்கு என்ன நடந்தது?
ஜெயசிக்குறு சமரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
கண்டி வீதியில் இருந்து மாங்குளம் வரை அவர்கள் வந்தார்கள்.
கிளிநொச்சி அல்லது ஆனையிறவை அடைய வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் நேரே வரக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.
ஒட்டுசுட்டானில் இருந்து பள்ளமடு வரை அவர்கள் விரிந்தார்கள்.
கொழும்பு ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலை தனது போர் உத்திகளின் மூலமும் ஆழமான தீர்க்க சிந்தனைகளின் மூலோபாயத்தின் மூலமும் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வருவதில் கைதேர்ந்தவர் தான் எமது தேசியத்தலைவர்.
அன்று அவர்களின் நிகழ்ச்சி நிரலை தனது நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கி அதனை முற்றிலும் முறியடித்துக் காண்பித்தார்.
அதே மண்ணில் இன்று அதே வரலாறு மீட்கப்படுகின்றது.
எமது போராளிகள் அந்த வீர சரித்திரத்தை இன்று களங்களில் நின்று எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
அந்தப் போராளிகளின் உழைப்பு என்பது உண்மையில் இந்த நாட்களில் ஒரு வரலாறு காணாத உன்னத நிலையில் இருக்கின்றது என்பதனை இந்த இடத்தில் சொல்லிக்கொள்கிறேன்.
திடீரென ஏற்படுகின்ற கொடிய மழை- காவல் அரணுக்குள்ளே பல சிரமங்களை ஏற்படுத்துகின்றது என்பதனைச் சொல்லாமலே உங்களுக்குப் புரியும்.
உங்களின் உடன்பிறப்புக்கள் தீரமுடனும் உறுதியுடனும் உங்களைப் பற்றிய உங்களின் எதிர்காலம் பற்றிய நல்ல எண்ணங்களுடனும் அங்கு அவர்கள் போராடுகின்றனர் என்பதனையும் உங்களிடம் சொல்கின்றேன்.
ஒரு நல்ல பூ விரியும்போது எவ்வாறு அந்த நறுமணம் மற்றவர்களை மகிழ்விக்கின்றதோ-
ஒரு நல்ல கவிஞனின்
ஒரு நல்ல எழுத்தாளனின் பேனா குனியும்போது எவ்வாறு நல்ல கருத்துக்கள் பிறக்கின்றனவோ
ஒரு நல்ல கலைஞனின் தூரிகையில் இருந்து எவ்வாறு நல்ல படைப்புக்கள் உண்டாகின்றதோ
அதேபோ் நல்ல போராளிகளின் துப்பாக்கிகளில் இருந்து அவர்கள் தூக்குகின்ற ஆயுதங்களில் இருந்து இலட்சியம்- விடுதலை சுதந்திரம் என்பது பிறக்கும்.
அதுதான் வரலாறு.
இங்கு பாடலைப் பாடிய உடன்றபிறப்புக்கள்- "ஆயுதம் வேண்டும்" என்ற கருத்தை அழகாகப் பாடினார்கள்.
உண்மையில் அதுதான் இன்று தேவையான விடயம்.
"வன்முறையற்ற ஒரு சூழ்நிலையில் கருத்துக்கள் தான் ஆயுதம் என்றும்
போர் என்று ஒரு வன்முறை நீள்கின்ற சூழ்நிலையிலே ஆயுதம் தான் கருத்துக்கள் என்றும்"
கார்ல்மாக்ஸ் சொன்னார்.
அந்த ஆயுதம் எப்படி எமது கைகளில் வந்தது?.
நாமாக விரும்பி ஏற்றுக்கொண்டோமா இல்லை.
ஆயுதத்தை எமக்கு நிர்ப்பந்தம் ஆக்கினார்கள் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள்.
அந்த ஆயுதம் மட்டும் இல்லை என்று சொன்னால் இன்று நாம் எங்கோ நசுக்கி ஒடுக்கப்பட்டிருப்போம்.
இதனை எமது தேசியத் தலைவர் அப்போதே புரிந்து வைத்திருந்தார்.
அந்த ஆழமான சிந்தனையின் வெளிப்பாடாக இன்று வீட்டுக்கொருவர் ஆயுதம் தரித்தல் என்கின்ற அந்த ஒரு கோட்பாட்டுக்கருத்தியல் நிலைக்கு நாம் இன்று எழுச்சி பெற்றிருக்கின்றோம்
அந்த ஆயுதத்திலும் இன்று சுயசார்பு பரிமாணங்களுடன் களமுனையில் பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றன.
உங்களின் உறவுகளை நீங்கள் சந்திக்கும்போது அவர்கள் சொல்வார்கள்.
ஆயுதப் பரிமாணங்களிலே நாங்கள் பல சுயசார்பு தற்சார்பு நிலைகளை அடைந்து கொண்டிருக்கின்றோம்.
அவ்வாறான ஒரு எழுச்சிமிக்க நிலையில் எமது போராட்டம் நகர்கின்றது.
அதேநேரம் சிறிலங்கா அரசாங்கமானது ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்கள் பல வகை நெருக்குதல்களுக்கும் உள்ளாகி
பொருளாதார அரசியல் ரீதியாக
போர் தொடர்பிலான அரசியல் ரீதியாக
களமுனையில் படைத்துறை ரீதியாக
வீழ்ச்சிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிற நிலையில் உள்ளது.
இந்த வலிமையான நிலைக்கு எங்களை இட்டு வந்தவர் எமது தேசியத் தலைவர்.
அந்த விடுதலைப் போருக்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று எழுச்சியான பங்களிப்புக்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.
எமது சக்தியை எந்த அடக்குமுறையாளர்களாலும் எந்த நடவடிக்கைகளாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதற்கு இந்த மண்ணில் எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன.
புதுவித உத்திகளையும் போரியல் சார்ந்த புரட்சிகர சிந்தனையையும் நாம் மக்களிடத்திலும் கொண்டு வந்து விடுதலைப் போரில் உலகம் வியக்கின்ற அளவுக்கு உன்னதமான நிலைக்கு எம்மை இட்டு வந்திருக்கின்ற எமது தேசியத்தலைவர் அவர்களின் காலத்தில் நாங்கள் விரைந்து விடுதலை பெறுவோம் என்றார் அவர்.
3 comments:
வணக்கம்
தங்களின் இணையபகுதியைப் பார்க்கின்ற போது சில கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் தற்பொழுது தெரிவிப்பது உகந்தது இல்லை எனினும் என்னிடம் எழும் கேள்வி.
அதாவது
புலிகளின் தலைமை ஒரு அதிகாரவர்க்கம் என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?
புலிகளின் அதிகார வர்க்கத்தலைமையை எவ்வாறு அகற்றுவது?
இவ்வாறு இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. உங்கள் இணையத்தில் ஈமெயில் விலாசத்தை இணைத்து விட்டால் உங்களுக்கு விரிவான கேள்விகளை எழுதி வைக்கின்றேன்.
Velan
தமிழ்பாசிசத்தினை முடிவிற்கு கொண்டு வருவதற்கான திட்டம் தான் என்ன?
புதிய ஜனநாயகப் புரட்சியில் தமிழ் குறுந்ததேசியவாதிகளின் பங்கு என்ன?
புதிய ஜனநாயகப் புரட்சி குறுந்தேசியவாதத்துடன் ஒன்றுபட்டுச் செல்ல முடியுமா?
பிரதேசவாதிகளின் ஆதிக்க நிலை/
யாழ் மையவாதச் சிந்தனை/ யாழ் சைவ வேளாளச் ஆதிக்கச் சிந்தனைக்கும் புதியஜனநாயகப் புரட்சிக்கான திட்டத்தில் அவர்கள் எங்கு வகைப்படுத்தப் படுகின்றார்?
துரோகச் தலைமைகளின் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அடிநிலைப் உறுப்பினர்களை எவ்வாறு அணிதிரட்டுவது??
"வன்முறையற்ற ஒரு சூழ்நிலையில் கருத்துக்கள் தான் ஆயுதம் என்றும்
போர் என்று ஒரு வன்முறை நீள்கின்ற சூழ்நிலையிலே ஆயுதம் தான் கருத்துக்கள் என்றும்"
கார்ல்மாக்ஸ் சொன்னார்.
ஆக இதுக்கு மாத்திரம் தான் மார்க்ஸ் உதவுவார் போலும். மார்க்ஸ் இருந்திருந்தால் இவர்களை பற்றி பின்பகுதியால் தான் சிரித்திருப்பார்.
Post a Comment