Saturday 3 May, 2008

தமிழீழமே தீர்வு - ரவி.


"ஆயுதப் பலமோ ஆட்பலமோ எப்போதும் வெற்றியைத் தீர்மானிக்காது- மன உறுதிதான் வெற்றியைத் தீர்மானிக்கும்" என்பது தலைவரின் போரியல் மொழியாகும்.
* "சொந்த மக்களின் பலத்தில் நாம், எமது போராட்டத்தினை நடத்தினால் இந்த அனைத்துலக ஏற்ற- இறக்கங்கள் எம்மைப் பாதிக்காது" என்பது தலைவரின் அரசியல் வழியாகும்
* எமது தாயகப் பகுதிகளிலிருந்து சிங்களப் படைகளை விரட்டியடித்து தமிழீழத்தை- தனியரசை- அமைப்பதே நிரந்தரத் தீர்வாகும்!
- "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி
_______________________________
அவலத்தை திருப்பித் தந்த முகமாலை- அனைத்துலக நிலை மாற்றங்களும் புலம்பெயர் தமிழர் கடமைகளும்: ரவி விளக்கம்
[சனிக்கிழமை, 03 மே 2008, 05:26 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழ் மக்களுக்கு அவலத்தைத் தந்த சிங்களப் படையணிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் முகமாலைக் களத்தில் அதே அவலத்தை திருப்பிக் கொடுத்த "இனிமையான பழிவாங்கல்" பற்றியும் அனைத்துலக சமூகத்தின் மாறிவரும் நிலைப்பாடுகளை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பற்றிப் பிடித்து அரசியல் பரப்புரையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் கடந்த செவ்வாய்க்கிழமை (29.04.08) "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலின் எழுத்து வடிவம்:
கேள்வி: வட போர்முனையில் கிளாலி முதல் நாகர்கோவில் வரையான கடந்த 23 ஆம் நாள் நடைபெற்ற முறியடிப்புத் தாக்குதலில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த முறியடிப்புத் தாக்குதல் எத்தகையதொரு செய்தியை அனைத்துலக சமூகத்திற்கு தெரிவிக்கின்றது?
பதில்: சிங்கள அரசு பாரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்தான் இந்தப் பாரிய நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
இத்தகைய வெற்றியானது
அனைத்துலகத்திடமிருந்து சில உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற ஒரு நோக்கிலும் -
கடந்த ஒன்றரை வருடங்களாக வன்னிப் போர் அரங்கில் நடந்து கொண்டிருக்கும் படையெடுப்பு சிங்கள மக்களுக்கு எந்த திருப்தியையும் கொடுக்காததுடன் சிங்களப் படைகள் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வெற்றியைப் பெறமுடியவில்லை என்பதாலும் -
சிங்கள மக்களையும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வெற்றிக்குள் இட்டுச்சென்று, அதன்மூலம் போரை மூலதனமாகக்கொண்ட மகிந்த ராஜபக்ச ஆட்சியையும் எதுவித பிரச்சினையும் இல்லாமல் நடத்தி, அரசியல் நெருக்கடிகளில் இருந்து தங்களை மீட்டுக்கொள்ளலாம் என்ற நோக்கத்துடனும்
வட போர் அரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
வட போர் அரங்கில் சிங்களப் படைகள் மேற்கொண்ட இந்தப் பாரிய வலிந்த தாக்குதலானது, ஆனையிறவு கேந்திரப் பகுதியையே இலக்காகக் கொண்டிருந்தது.
ஆனையிறவைக் கைப்பற்றுவது அல்லது ஆனையிறவை நோக்கிய ஒரு படை நகர்வின் முதற்கட்டம் என்ற அடிப்படையில்தான் சிங்களப் படைகள் இந்த நடவடிக்கையைத் தொடங்கியிருந்தன.
சமர்களில் வெற்றிபெற்ற பின்னர் சமர்களுக்குப் பெயர் சூட்டுவதும், சமர்களில் வெற்றிபெற்ற பின்னரே அதன் இலக்குகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதும் என்ற தந்திரத்தையே சிங்களப் படைத்தலைமை அண்மைக்காலமாகக் கடைப்பிடிக்கின்றது.
எதிர்பார்ப்புடன் நடத்திய சண்டைகள் வெற்றியில் முடியாததால், அது தொடர்பான எதிர்வினைகள் சிங்கள தேசத்தில் எழுகின்றன.
அதனால் முன்கூட்டியே பெயர் சூட்டி இராணுவ நகர்வுகளைச் செய்வதனை தற்போது சிங்களப்படை வழமையாகக் கொள்ளவவில்லை.
எனவேதான் வட போர் அரங்கில் நடந்த இந்த வலிந்த தாக்குதலின் பிரதான இராணுவ இலக்கு என்ன என்பதனை அவர்கள் பகிரங்கமாகத் தெரிவிக்காமல் இருந்தார்கள்.
அவர்களின் உண்மையான பிரதான இலக்கு ஆனையிறவுத்தளம் தான். அதன் முதற்கட்டமாகத்தான் வட போர் அரங்கில் புலி வீரர்களின் முன்னரங்க நிலைகள் மீதான வலிந்த தாக்குதலை படையினர் மேற்கொண்டனர்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட, படுகாயமடைந்த சிங்களப் படையினரினரது எண்ணிக்கைகள் ஏற்கனவே வெளிவந்து விட்டன.
200-க்கும் அதிகமான சிங்களப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
51 படையினர் கால்களை இழந்துள்ளனர்.
600-க்கும் அதிகமான படையினர் காயமடைந்திருக்கின்றனர் என்ற தகவல்கள் ஓரளவுக்கு இப்போது தெரிந்த விடயமாகி விட்டன.
53 ஆவது, 55 ஆவது படையணிகளின் பின்னணி
வடபோர் அரங்கில் நடைபெற்று முடிந்த வலிந்த தாக்குதலில் சிங்களப் படையைத் தோற்கடித்ததை வெறுமனே ஒரு இராணுவ பரிமாணத்துடன் அல்லது இராணுவ அம்சத்துடன் மட்டுமே பார்க்கக்கூடாது.
இங்கே வெளிப்படையாக தெரியாத விடயமாக குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்த வரை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு விடயமும் உள்ளது.
இந்த வலிந்த தாக்குதலில் பங்குபற்றிய சிங்களத்தின் படைப்பிரிவுகள் என்ன என்பது குறித்து தமிழ் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
வட போர் அரங்கில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலில் சிங்களப் படையின் 53 ஆவது, 55 ஆவது படையணிகள் ஈடுபட்டன.
இந்த 53, 55 என்பது வெறுமனே இலக்கங்கள்தான்.
ஆனால் இந்த இலக்கங்களுடன் எமது விடுதலைப் போராட்டம் போரியல் ரீதியாக ஒரு வரலாற்றுத் தொடர்பைக் கொண்டது.
யாழ். குடாநாட்டில் "ரிவிரெச" என்ற பெயரில் அதாவது "சூரியக்கதிர்" என்ற நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இந்த 53 ஆவது படையணியைப் பயன்படுத்தியே சிங்களப் படைகள் மேற்கொண்டிருந்தன.
நில ஆக்கிரமிப்பு வெறிக்குள் இருந்து எமது குடாநாட்டின் 5 லட்சம் மக்கள் ஓர் இரவில் இடம்பெயர்ந்த அவலத்திற்குக் காரணமானது இந்த 53 ஆவது படையணிதான்.
யாழ். குடாநாட்டில் நிலங்களைக் கையகப்படுத்திய பின்னர் "சத்ஜெய" என்ற பெயரில் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பகுதி மக்களைக் கலைத்து, அந்த நகருடன் இணைந்த பகுதியை பெரும் படைத்தளமாக மாற்றியதும் இந்த 53 ஆவது படையணிதான்.
அதன் பின்னர் "ஜெயசிக்குறு" என்ற பாரிய படை நடவடிக்கை வன்னியில் சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கையிலும் இந்த 53 ஆவது படையணிதான் ஈடுபட்டது.
அதேநேரம், "ஜெயசிக்குறு"விற்கு முன்னர் "எடிபல" என்ற பெயரில் மன்னாரை நோக்கி சிங்களப் படைகள் ஒரு படை நடவடிக்கையை மேற்கொண்ட போதுதான் 55 ஆவது படையணி உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தது.
"ஜெயசிக்குறு" நடவடிக்கையில் 53 ஆவது படையணியுடன் இந்த 55 ஆவது படையணியும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் வாழ்வில் பெரும் துன்பங்களை, சோகங்களை சுமத்திய பிரதான இரண்டு சிங்களப் படையணிகள் இந்த 53 ஆவது 55 படையணிகள்தான்.
இந்த இரண்டு படையணிகளையும் பொறுத்தவரை போரியல் அனுபவம் பெற்ற படையணிகளாக குறிப்பாக மரபுப்போர் முறையில் மிகவும் அனுபவம் பெற்ற சிறப்புப் படையணிகளாகவே இந்த இரண்டு படையணிகளும் உள்ளன.
இந்த நிலையில்தான் வடபோர் அரங்கில் ஆனையிறவுத் தளத்தை இலக்கு வைத்து ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுவிடலாம் என்று கருதி சிங்களப் படைத்தலைமை இந்த சிறப்புப் படையணிகளை ஒருங்கிணைத்து பயன்படுத்தி இருந்தது.
தமிழ் மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சோகத்தை சுமத்திய இந்த இரண்டு படையணிகளுக்கும் எமது வட போர் அரங்க போராளிகள் தக்க பதிலடி கொடுத்திருக்கின்றனர்.
இதனை ஒரு "இனிமையான பழிவாங்கல்" என்றும் சொல்லலாம்.
எமது மக்களுக்கு அவலத்தைத் தந்தவர்கள் மீதே வட போர் அரங்கப் போராளிகள் ஒரு அவலத்தைச் சுமத்தி,
அவமானகரமான இராணுவத் தோல்வியை அவர்களுக்கு பரிசளித்து,
சிங்கள அரசின் இராணுவத் தீர்வை உடைத்து,
அரசியல் ரீதியாக தம்மை மேம்பட வைக்க முயற்சித்த அந்தத் தந்திரத்தையும் உடைத்து
பெரு வெற்றியைப் பெற்றிருக்கின்றனர்.
சிங்கள அரசு இன்று எதிர்கொண்டுள்ள இராணுவ, அரசியல், பொருண்மிய நெருக்கடிகளை ஒரு இராணுவ வெற்றி மூலம் தீர்த்துக்கொள்ள முயற்சித்தது.
அத்தகைய இராணுவ வெற்றிக்காக நடத்தப்பட்ட படை நடவடிக்கைக்கு எமது போராளிகள் தக்க பதிலடி கொடுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நம்பிக்கை தரும் இராணுவ வெற்றியைப் பெற்றுத்தந்திருக்கின்றனர்.
கேள்வி: சிறிலங்காப் படையில் வலிமை கூடிய படையணிகள் எனக் கருதப்படும் 53 ஆவது, 55 ஆவது படையணிகளை வடபோர்முனையில் களம் இறக்கி, மிகச்செறிவான பின்புலச் சூட்டாதரவுடன்தான் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்படியானால் புலிகளின் பலத்தை தவறாகக் கணிப்பிட்டுள்ளனரா?
பதில்: புலிகளின் பலம் தொடர்பான கணிப்பீட்டில் சிங்கள தேசம் தவறிழைப்பதாகவே வழக்கமாக எல்லோரும் கூறுவார்கள். அந்தக் கணிப்புக் குறித்து நாம் கருத்துக்கூற விரும்பவில்லை.
சிங்களப் படைத்தரப்பின் பின்புலச் சூட்டாதரவு பிரமாண்டமானது.
அதன் பல்குழல் எறிகணைகள்,
மிக நீண்டதூர ஆட்லறி எறிகணைகள்,
மோட்டார் ரக தாக்குதல்கள்,
டாங்கிகளில் இருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள்
ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் ஒரு அபரிதமான "சூட்டு வலு"வை சிங்களப் படைகள் பயன்படுத்தியிருக்கின்றன.
இந்த போர் அரங்கில் மட்டுமல்ல- பொதுவாக சிஙகளப்படையின் மரபுப் போர் இத்தகைய ஒரு பரிமாணத்தில்தான் நடப்பது வழமை.
அளவுக்கு அதிமான சூட்டாதரவுடனும்,
அளவுக்கு அதிகமான ஆட்பலத்துடனும்
நடவடிக்கைகளைச் செய்வது சிங்களப்படையின் போரியல் மரபாக இருக்கின்றது.
"ஆயுதப் பலமோ ஆட்பலமோ எப்போதும் வெற்றியைத் தீர்மானிக்காது- மன உறுதிதான் வெற்றியைத் தீர்மானிக்கும்" என்பதே எமது தலைவர் கூறும் போரியல் மொழியாகும்.
இதன் உண்மையான பொருளை வட போர் அரங்கப் போராளிகள் அன்று களத்தில் நிரூபித்திருந்தனர்.
ஆட்பலமாக இருந்தாலும் சரி, சூட்டாதரவு என்ற ஆயுதபலமாக இருந்தாலும் சரி மன உறுதி படைத்த எமது போராளிகள் முன்னரங்க காப்பரண்களுக்குள் நிலைத்து நின்று, சிங்களப் படைக்கு எதிராக வீரமுடன் களமாடி அவர்களுக்கு பாரிய அழிவொன்றைக் கொடுத்திருக்கின்றனர்.
அந்தப் படையணிகளுக்கு ஏற்பட்ட அழிவு என்பது ஒட்டுமொத்தமாக சிங்களப் படையின் இயந்திரத்திற்கு கொடுக்கப்பட்ட அடியாகவே கருத முடியும்.
சிங்களப் படைத்தரப்பு தனது பாரிய படைக்கல சக்தியையும்,
ஆட்தொகை அதிகரிப்பையும் ஒன்று சேர்த்துக்கொண்டு ஒரு மரபுப்போரை தொடுத்தாலும்-
ஆட்தொகையில் குறைந்த ஆனால் மன உறுதியிலும், வீரத்திலும், ஓர்மத்திலும் மிக அதிகமான விடயங்களைக் கொண்டிருந்த புலி வீரர்களிடமிருந்து அவர்கள் தோல்வியைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.
எமது இயக்கத்தின் இராணுவ ரீதியான ஆதார சக்தியே இந்த மன உறுதிதான். இந்த மன உறுதியுடன்தான் இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை காலமும் நாம் பாரிய வெற்றி பெற்று வந்திருக்கின்றோம்.
எண்ணிக்கையில் சிறுபான்மை இனமாக இருந்த போதும்
எண்ணிக்கையில் பெரும்பான்மை இனமாக உள்ள
சிங்களப் படைகளைச் சிதைத்து,
உலகில் எந்தவொரு விடுதலைப் போராட்டமும் கொண்டிராத அளவுக்கு தனது கட்டுப்பாட்டு நிலங்களை வைத்திருந்து,
மரபுப் போர்களை நடத்தி,
தரை- கடல்- வான் என முப்படைப் பலத்தில் நின்றபடி,
மக்கள் பேராதரவுடன் நீண்ட காலமாக ஒரு நாட்டுப்படை போரிடுவது போல் எதிரியுடன் போரை நடத்திக்கொண்டிருப்பதற்கு
எமது விடுதலைச் சேனையின் தலைமைத்துவ ஆற்றலும்,
அந்த தலைமைத்துவத்தின் கீழ் அளப்பரிய தியாகங்களைப் புரிந்து கொண்டிருக்கும் எமது போராளிகளினது மனவுறுதியும் தான் காரணம் ஆகும்.
மடு-மன்னார்- உளவுரண்கள்
கேள்வி: மடுப்பகுதியை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக சிறிலங்காப் படையினர் அறிவித்துள்ளனர். இது படையினருக்கு உளரீதியான உற்சாகத்தைக் கொடுக்கும் என்று கருதலாமா?
பதில்: மடுத்திருத்தலத்தில் இருந்து ஆயரின் உத்தரவின் பேரில் மடு மாதா சிலையை மதகுருமார்கள் அகற்றிய பின்னர்- "மடுக் கைப்பற்றுகை" என்பது சிங்களப் படைகளுக்கு இராணுவ ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ எந்த வகையிலும் நன்மையைப் பெற்றுக்கொடுக்காததாகும்.
மடு மாதா சிலை அகற்றப்பட்ட பின்னர் மடுத்திருத்தலம் என்பது அனைத்து அரசியல் இலக்குகளும், உளவியல் இலக்குகளும் இழந்தவொரு இலக்காகத்தான் சிங்களப் படைக்கு தென்பட்டது.
மடு மாதா சிலை அகற்றப்பட்ட பின்னர் சிங்களப் படை அங்கே ஒரு மென்மையான சண்டையை நடத்திக்கொண்டிருக்க-
சமகாலத்தில் வட போர் அரங்கில் அனைத்துலக ரீதியில் பிரபல்யம் பெற்ற, ஊடகங்கள் வாயிலாக பிரபல்யம் பெற்ற கேந்திர நிலைகளில் சண்டைகளை நடத்தி ஒரு வெற்றியைப் பெற்றுக்கொண்டு,
அந்த வெற்றியின் ஊடாக சிங்களப் படையின் உளவுரணை மேம்படுத்துவது
அல்லது
அரசியல் நெருக்கடிகளில் இருந்து தப்புவது என்ற நோக்கிலேயே வட போர் அரங்கம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
மடு என்பது படையினருக்கு உளவியல் ரீதியாக எந்த வெற்றியையும் தராது என்ற அடிப்படையில்தான் வட போர் அரங்கம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் வட போர் அரங்கில் பாரிய இராணுவத் தோல்வியைச் சந்தித்த பின்னர் வேறு வழிகளின்றி மடுத் திருப்பதியை அவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
மடுவை ஆக்கிரமித்ததால் எதிர்பார்த்த உளவுரண் உறுதி சிங்களப் படைக்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ கிடைத்ததாகத் தெரியவில்லை.
அத்தகைய செய்திகள்தான் கொழும்பிலிருந்து வந்தபடி உள்ளன.
வட போர் அரங்கில் முடங்குகின்றது சிங்களப் படை
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் மடு முன்னரங்க நிலைகளில் சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கியிருப்பதாக கொழும்பில் இருந்து வரும் சில கருத்துகள் தெரிவிக்கின்றன. இது சரியான கருத்தா?
பதில்: சிங்களப் படைகளின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும், அந்த தோல்வியால் எழுகின்ற மன உளைச்சலுக்குள் சிங்கள மக்களை இட்டுச்செல்லாமல் தவிர்ப்பதற்காகவும் இனவாதப் பரப்புரைக்கு செவிசாய்த்து சிங்கள ஊடகங்கள் தமது பரப்புரையைச் செய்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.
பின்வாங்கி வேறிடத்தில் நிலை கொள்வது என்பதனை உலகில் எந்தவொரு போரியல் நிபுணர்களும் படுதோல்வியாக அல்லது படைகளை பின்னடையச் செய்து விட்டதாக கொள்ளமாட்டார்கள்.
வன்னியில் மிக நீண்ட போர் அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீண்ட போர் அரங்கில் கடந்த ஒன்றரை வருடங்களாக குறிப்பிடத்தக்கவொரு நிலத்தைக் கைப்பற்ற முடியாமல் சிங்களப் படைகள் திண்டாடுகின்றன, திக்குமுக்காடுகின்றன. சிங்களப் படைகள் தற்போது மெது மெதுவாக முடக்க நிலைக்குள் சென்று கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மையான இராணுவ மதிப்பீடாக இருக்கின்றது.
தமிழரின் தாய் நிலத்தில்தான் சிங்களப் படைகள் இந்த முடக்க நிலையில் இருக்கின்றன.
ஒரு படை தனது பிரதேசத்தை விட்டு வேற்று மக்களின் பிரதேசத்திற்குள் மிக நீண்டகாலம் நிலைத்து நிற்க வேண்டிய சூழல் எழுமாக இருந்தால் அந்தப் படை தனது உளவுரணை இழந்து, போரிடும் உறுதியை இழந்து, இறுதியில் பெருந்தோல்வியைச் சந்திக்கும் என்று போரியல் நிபுணர்கள் பல்வேறு உதாரணங்களுடன் கூறியுள்ளனர். இங்கே உண்மையில் அதுதான் நடைபெற்றுக்கொண்டிக்கின்றது.
எமது மண்ணில் சிங்களப்படை சிக்குண்டுள்ளது என்றுதான் நாம் கொள்ளவேண்டும்.
ஜெயசிக்குறு காலத்திலும் இதேபோன்றதொரு இராணுவப் பரிமாணத்துடன்தான் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு அங்குலத்திலும் முன்னேறும் போது தமது வெற்றியை அவர்கள் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தனர்.
புலிகள் பின்வாங்கிக்கொண்டிருக்கின்றனர் என்று கூறி படையினரின் வெற்றிகள் பிரகடனப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கட்டத்தில்தான் திடீரென புலிகள் இயக்கம் தகுந்த நேரத்திலும் தகுந்த முனையிலும் வலிந்த தாக்குதல்களைத் தொடுத்து, படையினர் ஒன்றரை வருடங்களாக நகர்ந்து பிடித்த நிலத்தை புலி வீரர்கள் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் மீட்ட வரலாற்றுச் சாதனை ஒன்று எமது கண்முன்னே நிற்கின்றது.
இப்போதும் அதேபோன்றதொரு இராணுவச் சகதிக்குள்தான் சிங்களப் படைகள் சென்று கொண்டிருக்கின்றன என்று சிங்கள ஆய்வாளர்களே சிங்களப் படைத்தலைமைகளை எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.
எனவே மன்னார் போர் அரங்கிலோ அல்லது வேறு இடத்திலோ சிங்களப் படைகள் உண்மையில் ஒரு இராணுவ வெற்றியைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர் என்று சொல்ல முடியாது.
அவ்விதமான வெற்றிகள் பெறுவதாகச் சொல்லப்படுவது எல்லாம் சிங்கள ஊடகங்களின் ஒரு பொய்யான பரப்புரை.
இதற்கு சிறந்த உதாரணம் ஒன்று கூறலாம்.
முகமாலையில் ஒரு பாரிய தோல்வியை சிங்களப் படைகள் சந்தித்து,
பெருந்தொகையான சிங்களப் படையினரின் உடலங்களை புலிகள் கைப்பற்றிய பின்னர், அடுத்த நாள்
கொழும்பிலிருந்து வெளிவந்த "திவயின" என்ற சிங்களப் பத்திரிகை,
"முகமாலையில் புலிகளின் முன்னரங்க நிலைகளைப் படையினர் கைப்பற்றி விட்டனர்" என்று கூறி இரண்டொரு முன்னரங்க நிலைகளின் படங்களையும் முகப்புச் செய்தியில் பிரசுரித்து சிங்கள மக்களைப் பிழையாக வழி நடத்தியிருந்ததையும் நாம் அறிந்திருந்தோம்.
சிங்கள ஊடகங்களின் இத்தகைய பரப்புரையில் எந்தவிதமான உண்மையும் இல்லை. வன்னிப் போர் அரங்கில் சிங்களப் படைகள் ஒரு இராணுவ முடக்கநிலையைச் சந்தித்திருக்கின்றன என்பதுதான் உண்மை.
பாமர சிங்களவர் மனநிலை
கேள்வி: இராணுவ படையெடுப்பின் மூலம் விடுதலைப் புலிகளை அடக்கிவிடமுடியும் என சிங்கள மக்கள் ஏன் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்? அல்லது களத்தில் நடக்கும் சரியான விடயங்களை அறியாமல் இருக்கின்றனர்?
பதில்: சிங்கள மக்கள் அறிந்தோ அறியாமலோ பேரினவாத உணர்வு ஒன்று அவர்களின் இரத்தத்தில் ஊறியிருக்கின்றது என்றுதான் நாம் கொள்ள வேண்டும்.
ஏனெனில் நீண்ட பல ஆண்டுகளாக சிங்கள ஆட்சியாளர்கள் தமிழருக்கு எதிரான இனவெறி உணர்வுகளை சிங்கள மக்களிடம் விதைத்து, அதனை வளர்த்து தமது அரசியலை நடத்தி ஆட்சி என்ற கதிரைகளையும் அவர்கள் பிடித்திருக்கின்றனர்.
இப்படி நீண்ட காலமாக சிங்கள மக்களிடம் இருந்து வரும் பேரினவாத உணர்வால் தமிழ் மக்களுக்கு எதிரான போர் வெற்றி குறித்த ஒரு கற்பனையை, ஒரு ஆசையை, அதனை ஒரு வாழ்வியல் ஆசை போன்று தமது மனதில் புதைத்து வைத்திருக்கின்றனர்.
அத்தகைய பேரினவாத ஆசைக்கு சிங்கள ஊடகங்களும், சிங்கள அரசியல்வாதிகளும் அடிக்கடி நீர் ஊற்றி, அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதனால்தான் புலிகளுடனான போரில் சிங்களப் படைகள் ஆங்காங்கே பெற்றுக்கொள்ளும் சில வெற்றிகளை மிகைப்படுத்திக் காட்டி, சிங்கள மக்களுக்கு அந்த உணர்வுகளைக் கிளறி, அவர்களை ஒரு போர் மனதில் வைத்திருக்கின்றனர்.
அதனால்தான் சிங்களப் படைகளுக்கு களநிலமைகள் பாதகமாக இருந்து அவர்கள் படுதோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலும் கூட சிங்கள மக்கள் அந்தச் செய்திகளை சரியாக நம்புவதில்லை.
அனைத்துலக ஊடகம் என்பது இன்று அனைவரது வீடுகளுக்கும் சென்று கொண்டிருப்பது என்பது உண்மைதான்.
ஆனால் கிராமப்புற சிங்கள மக்களையோ அல்லது கரையோரப் பகுதி சிங்கள மக்களையோ இத்தகைய நவீன ஊடகங்கள் சென்றடைந்திருக்கின்றதா என்றால் அது ஒரு கேள்வியாகவே இருக்கும்.
அப்படி இந்த ஊடகங்கள் சிங்கள மக்களிடத்தில் ஊடுருவியிருந்தாலும் அந்த ஊடகங்கள் சொல்லும் உண்மைச் செய்திகளை நம்பும் மனநிலையில் சிங்கள மக்கள் இல்லை. அந்தளவுக்கு அவர்கள் இனவாத மனதிற்குள் இருப்பதால் தமது ஊடகங்கள் சொல்லுகின்ற தமது ஆசைச் செய்திகளைத்தான், அதாவது புலிகளை தோற்கடிக்கின்ற, தமிழருடனான போரில் வெற்றியீட்டுகின்ற என்ற அந்த ஆசைச் செய்திகளைத்தான் நம்புகின்ற மனநிலையில் அவர்கள் இருக்கின்றனர்.
கேள்வி: அப்படியானால் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பதனையோ தமிழர்களுக்கு சமத்துவமான உரிமை வழங்கப்படவில்லை என்பதனையோ சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று கூறலாமா?
பதில்: அதுதான் உண்மை. அதனையேதான் புலிகள் இயக்கமும் நீண்டகாலமாகச் சொல்லி வருகின்றது. சிங்கள மக்களின் எண்ணம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சிங்கள தேசத்தின் நிலைப்பாடும் அதுதான். சிங்கள ஆட்சியார்களர்கள், சிங்கள மக்கள், சிங்கள ஊடகவியலாளர்கள், சிங்களப் புத்திஜீவிகள், சிங்கள பாமர மக்கள் என்ற எந்த பேதமும் இல்லாமல் ஒட்டுமொத்த சிங்களத் தேசத்தின் நிலைப்பாடே அதுதான்.
சிங்களப் புத்திஜீவிகள் சிங்களப் பத்திரிகைகளில் எழுதும் போது தமிழர்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டுத்தான் எழுதுவார்கள். தமிழ் மக்களின் தேசியம், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்பன குறித்து அவர்களுக்கு சிந்தனை இல்லை. அதனால்தான் இன்றும் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டு சிங்களத்து புத்திஜீவிகள் கட்டுரை எழுதுவதும் அதனை ஆங்கிலப் பத்திரிகைகளே வெளியிடுவதுமான ஒரு பிறட்சியுற்ற ஒரு மனநிலைமை உள்ளது.
அந்த வகையில்தான் தமிழ்மக்களின் இனப்பிரச்சினையை சிங்கள அரசு ஒருபோதும் அமைதி வழியில், அரசியல் தீர்வு மூலம் தீர்த்து வைக்காது என்றதொரு உறுதியான நிலைப்பாட்டை புலிகள் இயக்கம் தமது அனுபவங்களின் அடிப்படையில் வெளிப்படுத்துகிறது. இந்த நிலைப்பாட்டையே அனைத்துலக இராஜதந்திரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் எமது உறுப்பினர்கள் விளக்க முற்படுகின்றனர்.
இதன் அடிப்படையில்தான் தமிழீழம்தான் இறுதி முடிவு, தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வு என்ற கோரிக்கையை முன்வைத்து,
அந்த தமிழீழத்தை- தனியரசை- அமைப்பதற்கு எமது தாயகப் பகுதிகளிலிருந்து சிங்களப் படைகளை விரட்டியடித்து,
எமது நிலத்தை இராணுவப் பலத்தில் மீட்டு எடுப்பதன் மூலமாகத்தான்,
ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்றதொரு யதார்த்தமான நிலைப்பாட்டை அரசியல் பின்புலத்துடன் இணைத்தவாறு புலிகள் இயக்கம் கொண்டிருக்கின்றது.
சிங்களம் மாற்றிய இராணுவக் கூட்டாளிகள்
கேள்வி: சிறிலங்கா அரசு ஈரானுடனான உறவை நெருக்கமாக்கியுள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு எந்தவகையில் அனைத்துலக நாடுகள் மத்தியில் விசனத்தை உருவாக்கும்?
பதில்: சிங்கள தேசம் இப்போது தனது இராணுவக் கூட்டாளிகளை மாற்றிவிட்டது.
அந்த மாற்றமடைந்த இராணுவக் கூட்டாளிகளில் ஒரு நாடு ஈரான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உலகின் சில நாடுகள் குறிப்பாக வளர்ச்சியடைந்த, ஜனநாயகத்தை மதிக்கின்ற, மனித உரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்கின்ற மேலைத்தேய நாடுகள் பல சிறிலங்காவிற்கான இராணுவ, பொருண்மிய உதவிகளை நிறுத்தியோ அல்லது குறைத்தோ விட்டன.
இந்தச் சூழ்நிலையில், போர் இயந்திரத்தை தொடர்ந்தும் செயற்படுத்துவதற்காக சிறிலங்கா தற்போது ஈரான், சீனா, பாகிஸ்தான் போன்ற இராணுவக்கூட்டாளிகளை நாடி தன்னுடன் இணைத்து வைத்திருக்கின்றது.
தமிழர்களுடனான போரில் வெற்றிபெற வேண்டும் என்பது குறித்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெளியிட்ட கருத்தொன்றை இங்கே கூறுவது பொருத்தமாக இருக்கும்.
அதாவது "தமிழர்களின் போரை அடக்குவதற்கு நான் எந்தப் பேய்களுடனும் கூட்டு வைக்கத் தயார்" என்று அவர் கூறியிருந்தார்.
உலகில் எந்தவொரு நாடு மிகவும் ஒடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, மிக மோசமான நாடு என்று விமர்சிக்கப்பட்டாலும் அந்த நாடு புலிகளுக்கு எதிரான போருக்கு சிறிலங்காவிற்கு ஆயுத உதவி வழங்குமாக இருந்தால் அந்த நாட்டுடன் நட்புறவு கொள்ள தாம் தயங்க மாட்டோம் என்ற ஜே.ஆரின் கருத்தே இன்றும் சிங்களப் பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
திபெத்திய மக்கள் சிங்களவர்களைப் போன்றே பௌத்த மக்கள்.
ஆனால் அந்த திபெத்திய மக்களின் போராட்டத்திற்கு சிறிலங்கா சிங்கள அரசு எந்தவொரு தார்மீக உதவியோ அல்லது ஆதரவோ அல்லது ஆதரவு வார்த்தையோ கொடுப்பதில்லை.
திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா எத்தனையோ தடவை கண்டி தலதா மாளிகைக்கு பயணம் செய்வதற்காக சிங்கள ஆட்சியார்களிடம் அனுமதி கேட்டு அது மறுக்கப்பட்ட நிலையில்தான் இருக்கிறார்.
ஆனால் திபெத்தை அடக்கும் சீனாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு சிறிலங்கா தயாராக இருக்கின்றது.
அதே போன்றுதான் ஈரானையும் ஆதரிக்கின்றனர்.
எனவே இங்கு கொள்கை, கோட்பாடு என்பனவற்றிற்கு அப்பால்,
சிங்கள தேசத்திடம் இத்தகைய கொள்கை, கோட்பாடு இல்லை அல்லது அனைத்துலக அரசியல் உறவுகளை மதிக்க வேண்டும் என்ற ஒரு நல்லெண்ணமும் இல்லை,
அல்லது பொதுவான ஒரு உலக ஒழுங்கிற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றதொரு எண்ணமும் இல்லை,
தனது சொந்த பேரினவாத நலனுக்காக, அதுவும் இன்னொரு இனத்தின் இன அழிவில் நன்மை தேடமுனையும் மிக மோசமான மனித விரோதமான ஒரு இனவாத நலனை அடைவதற்காக சிறிலங்கா அரசு யாருடனும் கூட்டுச்சேரத் தயாராக இருக்கின்றது.
இந்த உண்மையை மகிந்த அரசு அப்படியே பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது கண்டு நாம் உண்மையில் மகிழ்ச்சியடைகின்றோம்.
இதுவரை காலமும் சிங்கள தேசத்திற்கு உதவி வந்த மேலைத்தேய நாடுகள் இப்போதுதான் சிங்கள அரசின் உண்மைத் தோற்றத்தை, அதன் அரசியல் மனதைக் கண்டுகொள்கின்ற வாய்ப்பொன்று கிடைத்திருக்கின்றது.
அந்த வாய்ப்பை மகிந்த ராஜபக்ச வழங்கியிருக்கின்றார். அந்த வாய்ப்பை சரியாகப் பற்றிப்பிடித்துள்ள மேலைத்தேய நாடுகள் அதனைச் சரியான முறையில் உள்வாங்கியுள்ளன.
மேலைத்தேய நாடுகளிடம் இருந்து சிறிலங்கா அரசு ஒதுக்கப்படுகின்ற அல்லது கண்டிக்கப்படுகின்ற ஒரு நிலை எழுந்திருக்கின்றது.
கால ஓட்டத்தில் மிகமோசமான அரசு என்ற பட்டியலுக்குள் சிறிலங்கா அரசை அவர்கள் பட்டியலிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மிக மோசமான இன அழிப்பைச் செய்து கொண்டிருக்கின்ற ஒரு ஒடுக்குமுறை அரசை இப்பொழுதாவது அனைத்துலகம் சரியாகப் புரிந்துகொண்டது என்பதையிட்டு தமிழ்மக்களுக்கு ஓரளவு திருப்தி உண்டு.
தமிழருக்குச் சாதகமான அனைத்துலக சமூகமா?
கேள்வி: சிறிலங்கா அரசின் ஈரானுடனான உறவால் தமிழ் மக்களின் போராட்டம் குறித்த அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருமா ?
பதில்: அனைத்துமே நலன்களின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படும் என்று சொல்வதற்கில்லை.
நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவது இன்றைய உலக அரசுகளின் ஒரு பொதுவான வழமையாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனாலும் மனித உரிமை, நாகரிகம், மனச்சாட்சி என்ற விடயங்களுக்கு இந்த மனுக்குலம் இடமளித்து, அதற்கு இடம் கொடுத்து, உரிய மதிப்புக் கொடுத்து வருகின்றது என்பதனை எவரும் மறுக்க முடியாது.
அதனால்தான் இன்று மனித குலம் முன்னேறி, நாகரிகம் பெற்று வாழ்கின்றதொரு நிலையில் இருக்கின்றது.
எனவே அனைத்துலக அரசுகளின் அந்த நலன் சார்ந்த விடயங்களை வெறுமனே ஒரே பார்வையில் வைத்து பார்க்க முடியாது.
அதேநேரம் சிங்கள தேசத்துடனான அனைத்துலகத்தின் பகைமை உணர்வு எமது விடுதலைப் போராட்டத்திற்கு பெரிய நன்மையைக் கொடுக்கப்போகின்றது என்று நாம் கூப்பாடு போடவும் இல்லை.
அவ்விதமாக ஒரு பெரிய அதீத நம்பிக்கைக்குள் நாம் கால் எடுத்து வைக்கவும் இல்லை.
நாம் யதார்த்தத்தில்தான் கால் வைத்திருக்கின்றோம்.
"சொந்த மக்களின் பலத்தில் நாம், எமது போராட்டத்தினை நடத்தினால் இந்த அனைத்துலக ஏற்ற- இறக்கங்கள் எம்மைப் பாதிக்காது" என்று தலைவர் அடிக்கடி கூறுவார்.
அதன் அடிப்படையில்தான் எமது போராட்டமும் இருக்கின்றது.
நாம் ஒரு பொதுவான பார்வையில் மட்டுமே நின்று சிறிலங்கா- ஈரான்- மேற்குலக நாடுகள் ஆகியனவற்றின் நிலைப்பாடுகளைச் சொல்ல முற்படுகின்றோம்.
மாறாக இவற்றுக்குள் இருந்து பெரிய விடயங்களை நாம் எதிர்பார்க்கின்ற மனநிலையுடன் இதனை நாம் கூறவில்லை.
எதிர்காலத்தில் சிறிலங்கா அரசுடனான அந்த நாடுகளின் உறவில் மாற்றங்கள் வரலாம், வராமலும் விடலாம்.
அதனைப்பற்றி நாங்கள் கதைக்கவில்லை.
ஆனால் ஒரு உண்மையை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொண்டு விட்டது என்பது என்றுமே மறுக்கப்பட முடியாதது.
அதாவது
சிங்கள அரசினது சுய ரூபத்தை அனைத்துலக நாடுகள் சரியாகப் தெரிந்துவிட்டன என்பதே அந்த உண்மையாகும்.
கடந்த பேச்சுவார்த்தைக் காலத்திற்கு முன்னர் சிறிலங்கா அரசிடமிருந்து புலிகள் குறித்த அல்லது தமிழ் மக்கள் குறித்த ஏதாவது ஒரு செய்தி வெளியானால் அதனை அப்படியே நூறு விழுக்காடு பிரசுரிக்கின்ற மேலைத்தேய ஊடகங்கள் இருந்தன. ஆனால் இப்போது அவ்விதமானதொரு நிலை இல்லை.
நான்கரை வருடகால சமாதான காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்ட நியாயங்கள் குறித்தும் புலிகளின் குணாம்சங்கள் குறித்தும் மேலைத்தேய பத்திரிகையாளர்கள் நன்றாக அறிந்து கொண்டிருப்பார்கள்.
அதேபோல் சிங்கள அரசின் குணாம்சங்கள் குறித்தும் அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் இப்போது முதல் முறையாக தனது இன அழிப்பை நோக்காகக் கொண்ட பேரினவாத நலனுக்காக இதுவரை காலமும் உதவிசெய்த அந்த நட்பு நாடுகளையே உதறித்தள்ளி விட்டு, தமிழர்களுடனான போரை நடத்தி, தமிழர்களை இன அழிப்புச் செய்கின்ற கொடூரமான மனநிலையில் சிங்கள அரசு இருக்கின்றது என்ற உண்மையை அனைத்துலக நாடுகள், அனைத்துலக சமூகம் புரிந்து கொண்டிருக்கும் என்றுதான் நாம் கருதுகின்றோம்.
அதுதான் இப்போதைய நிலைமையின் மிக முக்கியமான அம்சமாக இருக்கும்.
புலம்பெயர் வாழ் மக்களின் கடமை
கேள்வி: புலம்பெயர் வாழ் மக்கள் முன்னுள்ள பணிகள் குறித்தும் அது எந்த வகையில் துரிதமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது குறித்தும் உங்கள் பார்வை என்ன ?
பதில்: புலம்பெயர்ந்த மக்களின் போராட்ட விடுதலை பங்களிப்புக்கு உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பலவற்றை உதாரணங்களாகக் கூறமுடியும். புலம்பெயர்ந்த மக்களிடம் இரண்டு வகையான பங்களிப்பை எமது விடுதலைப் போராட்டம் கோரி நிற்கின்றது.
ஒன்று - அரசியல் பரப்புரை.
அனைத்துலகத்தில் புலிகள் தொடர்பாக,
போராட்டம் தொடர்பாக,
சிங்கள அரசு தொடர்பாக
கருத்துக்கள் மாறி வருகின்ற சூழலை
எமது புலம்பெயர் மக்கள் நன்றாகப் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டும்.
எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் பரப்புரை பணியை மேற்கொள்ள வேண்டும்.
அந்தப் பரப்புரைப் பணி என்பது ஆதரவு கொடுங்கள் என்ற வெறும் வார்த்தைகள் அல்ல, அதனை ஒரு தர்க்க ரீதியான அடிப்படையில்,
சிறிலங்கா அரசின் இன அழிப்பை அம்பலப்படுத்தும் வகையிலும், எமது விடுதலைப் போராட்ட நியாயப்பாடுகளை அனைத்துலக விதிமுறைகளுக்கு உள்ளாக வெளிப்படுத்துவதும் ஒருவித அறிவியலின் அடிப்படையில்
தமிழர்களின் போராட்ட அரசியலை நியாயப்படுத்தி,
காலத்திற்கேற்றவாறு நவீன வடிவத்துடனும் செய்யவேண்டிய தேவையிருக்கின்றது.
அந்த தேவையை நிறைவேற்ற பொருத்தமான மக்களாக எமது புலம்பெயர்ந்த மக்கள்தான் இருக்கின்றனர்.
ஏனெனில் எமது புலம்பெயர்ந்த மக்களின் ஒரு சந்ததி அந்தந்த நாடுகளின் மொழியில் பாண்டித்தியம் பெற்று இருக்கின்றனர்.
அந்தந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் என்று பலம் வாய்ந்த அந்த சக்திகளுடன் ஏதோவொரு ஊடாட்டத்தையும் கொண்டிருக்கின்றனர்.
எனவே புலம்பெயர்ந்துள்ள எமது மக்கள்தான் அந்த அரசியல் பரப்புரையை தாக்கம் மிக்கதாக நடத்தக்கூடியதாக இருக்கும்.
அப்படி நடத்தும்போது அது எமது விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக பெரிய பலத்தைச் சேர்க்கும் என்றார் ரவி.
குறிப்பு: ஈராக் படங்கள் இணைப்பு -ENB

No comments: