Thursday 15 May, 2008

தமிழீழ கல்விக் கழகத்தின்- கல்வித்திட்டம்

58 ஆம் ஆண்டுக் கலவரத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எமது இனத்தின் உள்ளங்களில் விதைக்க வேண்டும்:
இளங்குமரன்[வியாழக்கிழமை, 15 மே 2008, 05:05 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் தாக்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் 23 ஆம் நாளில் எமது இனத்தின் உள்ளங்களில் விதைக்க வேண்டும் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
1958 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் படுகொலைகளின் 50 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெறவுள்ள நிகழ்வுக்கான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:1958 ஆம் ஆண்டு தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை சிங்களப் பேரினவாதத்தின் கொடுமையின் முதல் பெரும் வெளிப்பாடாக அமைந்தது. அறப்போட்டம் வழி உரிமை கேட்ட தமிழ் மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன் சிங்களப் பேரினவாதம் கொடுத்த பதில் வன்முறைகளும் படுகொலைகளும் தமிழினத்தை விரட்டியடித்ததும் தான்.மட்டக்களப்பில் பாணந்துறையைச் சேர்ந்த சிங்கள ஆசிரியை ஒருவர் தமிழர்களால் படுகொலை செய்யப்பட்டார் என வதந்தியைப் பரப்பிய சிங்களப் பேரினவாதிகளும் காடையர்களும் தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.சிங்களக் காடையர்களுக்கு பண்டாரநாயக்க அரசு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தது.பண்டாரநாயக்க அரசு நினைத்து இருந்தால் அவசரகாலச் சட்டத்தினைப் பயன்படுத்தி, தமிழர்கள் மீதான சிங்களக் காடையர்களின் வன்முறையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். அதனைப் பண்டாரநாயக்க அரசாங்கம் செய்யத் தவறியது. செய்யத் தவறியதுடன் வன்முறையாளருக்கும் துணை போனது.சிங்களப் பேரினவாத சக்திகளின் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரானது எமது விடுதலைப் போராட்டம். எமது விடுதலைப் போராட்டம் இடையில் முளைத்தது அல்ல. தமிழிர்களின் நீண்டகால அறவழியிலான போராட்டத்தின் தொடர்ச்சியாகவே ஆயுதப் போராட்டம் அமைந்து இருக்கின்றது. இதற்கு ஈழத் தமிழர்களின் வரலாறு சிங்களப் பேரினவாத சக்திகள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய வன்முறைகள் படுகொலைகள் சாட்சிகளாக உள்ளன.இந்த வகையில் தான் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் நிகழ்த்திய படுகொலைகளை இனச் சுத்திகரிப்பை நாம் நினைவுகூர வேண்டும். அதனை எமது இன்றைய தலைமுறையின் உள்ளங்களில் விதைக்க வேண்டும் என்றார் அவர்.

No comments: