Saturday 24 May, 2008

பால்ராஜ்::தேசிய மைந்தனுக்கு தேசத்தின் பிரியாவிடை.



பால்ராஜ்: ஈழ மைந்தனுக்கு இனிய பிரியாவிடை


இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர் புகழாரம் [வியாழக்கிழமை, 22 மே 2008, 07:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை:
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.மே 21, 2008.
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,
விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ
வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கிறது.
பொதுவாகவே, விடுதலை இலட்சியத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால், எமக்கு துன்ப துயரங்கள் தெரிவதில்லை. வேதனைகள் புரிவதில்லை. உடல் உபாதைகள் அழுத்துவதில்லை. இயற்கைகூடக் குறுக்கே நிற்பதில்லை. எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜூக்கும் அப்படித்தான். ஓயாது குமுறும்சமர்க்களங்களையெல்லாம் அவன் ஓய்வில்லாது, உறக்கமில்லாது எதிர்கொண்டான். அங்கு இரவு, பகல் பாராது செயற்பட்டான். கொட்டும் மழையும் கோடையின் கொழுத்தும் வெய்யிலும் அவனைக் கட்டிப்போட்டது கிடையாது. கொடிய சண்டைக் களங்களில் எல்லாம் எத்தனையோ துன்பங்களைச் சுமந்தவாறு, எத்தனையோ நெருக்கடிகளைச் சமாளித்தவாறு, எத்தனையோ ஆபத்துக்களை எதிர்கொண்டவாறு அபாரமான மனவுறுதியோடு போராடினான்.
தலைசிறந்த போர்த்தளபதி என்ற வகையில் நான் அவனை ஆழமாக நேசித்தேன். அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தேன். அவன் அறிமுகமாகிய நாளிலிருந்து அவனுள் அபூர்வ போர்ப் பண்புகளும் போர்க் குணங்களும் இயற்கையாகவே நிறைந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன்.
ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளியாக அவனை வளர்த்தெடுத்தேன். அபாரமான துணிவும், அசுர வேகமும், சிறந்த தாக்குதல்
உத்திகளும், நேர்த்தியாகப் படை நகர்த்தும் ஆற்றலும், கூட்டுக்குலையாத குறிதவறாத செயற்பாடுகளுமாக அவன் வெளிப்படுத்திய போர்ப்பண்புகள்,
எமது எதிரிக்கு அச்சத்தைக் கொடுத்தன. அதேநேரம், எமது போராளிகளின் மனோதிடத்தையும் இலட்சிய உறுதியையும் மேலும் உரமாக்கின. எமது
மக்களுக்கு பெரும் வெற்றிகளைத் தேடித்தந்தன.
பிரிகேடியர் பால்ராஜ் எம்மைவிட்டு எங்கும் போய்விடவில்லை. எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக, எம்மையெல்லாம் உள்ளிருந்து இயக்குகின்ற
இலட்சிய நெருப்பாக அவன் என்றும் எம்முள் எரிந்துகொண்டிருப்பான்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே.பிரபாகரன்)
தலைவர்,தமிழீழ விடுதலைப் புலிகள்.

மகளிர் படையணியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ்: கேணல் யாழினி
[வெள்ளிக்கிழமை, 23 மே 2008, 04:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று மாலதி படையணி சிறப்புத் தளபதி கேணல் யாழினி தெரிவித்துள்ளார். விசுவமடுவில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்க நிகழ்வில் ஆற்றிய உரையில், லெப். கேணல் விக்டர் தலைமையில் மன்னாரில்
முதலாவது போர் முனையில் மகளிர் படையணி பங்கேற்றிருந்தாலும் பெரும் போர் அனுபவம் அற்ற சூழலில் கொக்காவில் சிறிலங்காப் படைத்தளம் அழிப்பில் பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் மகளிர் படையணி தனது பெரும் போர் அனுபவத்தை பெறத்தொடங்கியது என்றார் கேணல் யாழினி.
அணியிசையுடன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் நேற்று வியாழக்கிழமை எடுத்து வரப்பட்டது. விசுவமடு வணிகர் சங்கத் தலைவர் அமுதன் தலைமை வகித்தார்.
பொதுச்சுடரினை விசுவமடு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் ஏற்றினார்.
பிரிகேடியர் பால்ராஜின் உடன்பிறப்புக்கள் சுடரேற்றி மலர்மாலை சூட்டினர்.
தளபதிகள், போராளிகளினால் மலர்மாலை சூட்டப்பட்டன.
வட்டக்கச்சி
வட்டக்கச்சி மாவீரர் மண்டபத்தில் வட்டக்கச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சின்னண்ணா தலைமையில் நேற்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பொதுச்சுடரினை மன்னார் களமுனைத் தளபதிகளில் ஒருவரான ஜான் ஏற்றினார்.
பிரிகேடியர் பால்ராஜின் உடன்பிறப்புக்கள் ஈகைச்சுடரேற்றி மலர்மாலை சூட்டினர்.
தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மலர்மாலை சூட்டினர்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி துணைத் தளபதி அமுதாப் வீரவணக்க உரையை நிகழ்த்தினார்.

அதியுச்ச உழைப்பு முழுவதையும் விடுதலைப் போராட்டத்துக்கு அளித்த பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ்: கேணல் தீபன்
[வியாழக்கிழமை, 22 மே 2008, 07:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய
பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ் என்று வட போர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் புகழாரம் சூட்டினார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் கேணல் தீபன் ஆற்றிய வீரவணக்க உரை:
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் இந்த விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய
பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ்.
பிரிகேடியர் பால்ராஜ் களத்தில் நிற்கின்றார் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும். எதிரிகளுக்கு நடுங்கும். எதிரியை
கலங்கவைத்து எதிரியை சிதறடித்து இந்த விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனைகளுக்கு காரணமாக இருந்த முதன்மைத் தளபதியாக தளபதி
பால்ராஜ் விளங்குகின்றார்.
தளபதி பால்ராஜ் என்றால் ஒவ்வொரு சிங்களப்படைக்கும் தெரியும். அந்தளவுக்கு எதிரிக்கு சிம்ம சொர்ப்பனமாக தளபதி பால்ராஜ் விளங்கினார்.
ஒவ்வொரு போராளிகளையும் உணர்வூட்டி அவர்களை எந்த எதிரிக்கும் எதிராக கிறங்காது பதற்றம் இல்லாமல் நின்று சண்டையிட வைப்பார்.
அந்தளவுக்கு போராளிகளுக்கு உறுதியையும் உற்சாகத்தையும் கொடுத்து தானும் களத்தில் உறுதியாகவும் உற்சாகமாகவும் நின்று வெற்றிகளுக்காக
உழைப்பார்.
சண்டைக்களங்களில் அவரின் உறுதி- வீரம்- துணிச்சல்- ஆளுமை எல்லாவற்றையும் பார்க்கலாம்.
சாள்ஸ் அன்ரனி படையணியை உருவாக்கும் பொறுப்பு தேசியத் தலைவரால் அவருக்கு வழங்கப்பட்ட போது அதனை உருவாக்க முழுதாக உழைத்தார்.
இன்று எதிரிக்கு சிம்ம சொர்ப்பனமாக சாள்ஸ் அன்ரனி படையணி இருக்கின்றது எனில் அதற்கு தளபதி பால்ராஜ்தான் பின்னணியில் இருக்கின்றார்.
ஆனையிறவு வெற்றிகொள்ளப்பட குடாரப்பில் தரையிறங்கி எதிரியின் வியூகத்துக்குள் 34 நாட்கள் உறுதியாக நின்று வெற்றிக்கு உறுதுணையாக
நின்றார்.
34 நாட்களும் அவர் எதிரியின் உச்சபலத்துக்குள் உறுதியாக நின்று எதிரி நியமித்த 5 தளபதிகளையும் தோற்கடித்தார்.
பால்ராஜின் வரலாறு அழிக்கப்பட முடியாதது. ஆழமாக முத்திரையை அவர் பதித்துள்ளார்.
வீரம் என்றால் தளபதி பால்ராஜ் வீரத்துக்கு மறுபெயர்- துணிவுக்கு மறுபெயர் தன்னம்பிக்கைக்கு மறுபெயர்.
அவரின் வரலாறு அவரது வீரம் நம் எல்லோரிடமும் இருக்கவேண்டும்.
"நாம் எப்போதும் வீழ்ந்திடலாம். நம் போராட்டத்தின் வீச்சு- வேகம் ஒவ்வொருவரின் இழப்புக்களிற்குள்ளாகவும் வரவேண்டும்" என்பார் பால்ராஜ்.
போராட்டம் என்றால் இழப்புக்கள் ஏற்படும். இழப்புக்கள் இல்லாமல் போராட்டத்தை வெல்ல முடியாது. தளபதிகள் பலர் தம்மை
அர்ப்பணித்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரதும் இழப்புக்களும் எமது போராட்டத்தை வீச்சாக்கித்தான் இருக்கின்றது.
அவர்கள் தமது வீரத்தையும் வரலாற்றையும் தந்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அதனை நாம் உள்ளத்தில் நிறுத்த வேண்டும்.
பிரிகேடியர் பால்ராஜின் கனவு அவரது எதிர்பார்ப்பு எதற்காக அவர் தன்னை ஈய்ந்தாரோ அதனை நாம் உறுதியாக நிறைவேற்றுவோம்.
அவரது வீரத்தையும் வரலாற்றையும் உழைப்பையும் நம் உள்ளத்தில் எடுத்துக்கொண்டு அவரது எண்ணங்களை கனவுகளை நாம் நிறைவேற்ற
உழைப்போம். அதற்கு எல்லோரும் தயாராவோம் என்றார் கேணல் தீபன்.
கிளிநொச்சியில் பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்க நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பணிமுதல்வர் பொன். தியாகம் ஏற்றினார்.
வித்துடலுக்கான ஈகச்சுடர்களை பிரிகேடியர் பால்ராஜின் உடன்பிறப்புக்களான சந்திரசேகரம், ஞானசேகரம் ஆகியோர் ஏற்றி மலர்மாலைகளைச்
சூட்டினர்.
வட போர்முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன், போர்ப்பயிற்சி ஆசிரியர் தினேஸ், தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், தமிழீழ
பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன், நீதி- நிர்வாகப் பிரிவுப் பொறுப்பாளர் பரா, அரசியல்துறை துணைப் பொறுப்பாளர்
சோ.தங்கன், தளபதி வசந்தன், தளபதி குமணன், தளபதி வீமன், சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணித் துணைத் தளபதி அமுதாப், தளபதி முகுந்தன்,
மருத்துவப் பிரிவைச் சேர்ந்த தேவா உள்ளிட்டோர் மலர்மாலைகளைச் சூட்டினர்.
மாங்குளம் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மல்லாவியிலும் மாங்குளத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு உணர்வுபூர்வமாக வீரவணக்கம் செலுத்தினர்.
பிரிகேடியர் பால்ராஜின் வீரவணக்கக் கூட்டம் மல்லாவி மாவீரர் மண்டபத்தில் மல்லாவிக் கோட்டப் பொறுப்பாளர் செம்மணன் தலைமையில்
நடைபெற்றது.
பொதுச்சுடரினை வட போர்முனைத் தளபதிகளில் ஒருவரான ஜெரி ஏற்ற, ஈகைச்சுடரேற்றி மலர்மாலையை உடன்பிறப்பு சந்திரன் சூட்டினார்.
அவரைத் தொடர்ந்து மலர்மாலையை உடன்பிறப்பு ஞானம், மருமகன் சதீஸ், தளபதி கேணல் றமேஸ் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.
தங்கன், தளபதி குமரனின் துணைவியார், சாள்ஸ் அன்ரனி துணைத்தளபதி அமுதாப், திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி வசந்தன், மல்லாவி
மத்திய கல்லூரி அதிபர் யேசுதானந்தன், யோகபுரம் மகாவித்தியாலய முதல்வர் யோகானந்தர், பாலிநகர் பாடசாலை முதல்வர் கிருஸ்ணபிள்ளை,
மல்லாவி வட்ட தேசியப் பணிக்குழுச் செயலாளர் சுந்தரலிங்கம், கனகராயன்குள கோட்டப் பொறுப்பாளர் ஞானவேல், ஆலங்குள மாவீரர் துயிலும் இல்லப் பொறுப்பாளர் இளம்பிறை ஆகியோர் சூட்டினர்.
வீரவணக்க உரையை தளபதி றமேஸ் ஆற்றினார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.
வித்துடல் மாங்குளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

ஓயாத அலைகளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது: கேணல் ஆதவன் [வெள்ளிக்கிழமை, 23 மே 2008, 07:19 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
ஓயாத அலைகள் - 01, 02, 03 நடவடிக்கைளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார். கேணல் ஆதவன் வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
குடாரப்பு தரையிறக்கத்தின் பின் இத்தாவிலில் எதிரியின் கோட்டைக்குள் படையணியை நிறுத்தி எந்த ஒரு பின்தள உதவியும் இல்லாமல் 34 நாட்கள்
எதிரியைத் திணறடிக்க வைத்தவர் பிரிகேடியர் பால்ராஜ்.
தமிழ்நாட்டில் 09 ஆவது பயிற்சிப் பாசறையில பயிற்சி எடுத்தபோது, அங்கும் பயிற்சிப்பாசறையின் அணித்தலைவராக இவர் செயற்பட்டார்.
1987 ஆம் ஆண்டு இந்தியப் படையினருக்கு எதிரான தாக்குதல் காலப்பகுதியில் மணலாற்றில் மேஜர் பசீலனால்தான் பிரிகேடியர் பால்ராஜ் தமிழீழ தேசியத்லைவர் அவர்களுக்கு அறிமுகமாகின்றார்.
மேஜர் பசீலன் வீரச்சாவடைந்த பின்னர் வன்னி மாவட்டத் தளபதியாக பெறுப்பெடுத்து வன்னியில் ஏராளமான தாக்குதல்களை இந்தியப் படையினருக்கு எதிராக நடத்தியவர் அவர்.
2 ஆம் ஈழப்போரில் மாங்குளம் படைமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் வெற்றியின் பின்னணியில் பிரிகேடியர் பால்ராஜ் செயற்பட்டார்.
ஜெயசிக்குறு எதிர்ச் சமரில் நெடுங்கேணிப் பகுதியில் நின்று எதிரிக்கு பாடம் புகட்டியவர்.
ஓயாத அலைகள் - 01, 02, 03 நடவடிக்கைளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது.
வடபோர் முனையில் ஓயாத அலைகள - 03 அடிக்கும் போது குடாரப்பு ஊடாக தரையிறங்கி எதிரிக்கு பலத்த அதிர்ச்சியையும் இழப்பினையும்
கொடுத்தவர் பிரிகேடியர் பால்ராஜ். எந்த ஒரு பின்தள உதவியும் இல்லாமல் 34 நாட்கள் எதிரியைத் திணறடிக்க வைத்தார்.
ஆனையிறவு வெற்றிக்கு காரணமாக பிரிகேடியர் பால்ராஜின் குடாபரப்பு ஊடறுப்பு தாக்குதல் இருந்தது. அந்த வெற்றி மிகப்பெரிய சாதனையாகும்
என்றார் அவர்.

பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு தேசியத் தலைவர், தளபதிகள் வீரவணக்கம்
[வியாழக்கிழமை, 22 மே 2008, 06:33 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்வளையம் சாத்தி,
ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினார். மாரடைப்பினால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலமான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் மூத்த தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
மூத்த தளபதிகளான புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கட்டளைத் தளபதிகளான கேணல் பாணு, கேணல் தீபன், கேணல் ஜெயம், கேணல் சொர்ணம், கேணல் றமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் ஆகியோரும் தளபதி மாசல் மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத்தளபதி கீர்த்தி திருகோணமலை மாவட்ட சிறப்புத்தளபதி வசந்தன் சிறப்பு வேவுப்பிரிவு தளபதி சசிக்குமார் படைத்துறை மூத்த ஆசிரியர் தினேஸ் முதன்மை உறுப்பினர் தமிழேந்தி உள்ளக புலனாய்வுத் துறைப் பெறுப்பாளர் கபிலன், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத்தளபதி மணிவண்ணன்
குட்டிசிறி மோட்டார் படையணித்தளபதி கோபால் குட்டிசிறி மோட்டார் படையணி மகளிர் தளபதி பவநிதி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத்தளபதி கோபித் படையத் தொடக்க பயிற்சிக்கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன் படையப் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் தளபதி இரத்தினம் மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் மாறன் தளபதி ஜெரி
தளபதி விக்கீஸ் தளபதி லோறன்ஸ் உட்பட்ட தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து வித்துடல் வணக்கத்துக்காக மல்லாவியில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8:30 மணிக்கு மல்லாவியில் வீரவணக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து வித்துடல் மாங்குளத்தில் மலர் வணக்கத்துக்காக வைக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் வீரவணக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து வட்டக்கச்சி, விசுவமடு, புதுக்குடியிருப்பிலும் நாளை முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய பகுதிகளில் மக்கள் வணக்கத்துக்காக வித்துடல்
ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

நிகழ்கால வீரத்தின் குறியீடு பிரிகேடியர் பால்ராஜ்: யோகி
[புதன்கிழமை, 21 மே 2008, 07:13 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்கால வீரத்தின் குறியீடாக விளங்குகின்றார் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். யோ.செ.யோகி வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் போராட்டத்தில் காலத்துக்கு காலம் வீரத்தின் குறியீடாக ஒவ்வொருவர் விளங்குவர். எத்தனை வீரர் இருந்தாலும் குறியீடாக ஒரு சிலரே விளங்குவர்.
இன்றைய காலத்தில் தமிழீழ வீரத்தின் குறியீடாக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்குகின்றார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை
எண்ணுவதனை களத்தில் செய்து முடிப்பவராக பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் விளங்கினார்.
வன்னி-முல்லைத்தீவு-மணலாறு களங்களில் மேஜர் பசீலன் அவர்களுடன் இணைந்து எதிரிக்கு எதிராக களமாடிய பால்ராஜின் திறன்களை
இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் மணலாறு காட்டுக்குச் சென்ற தமிழீழத் தேசியத் தலைவர் அடையாளம் காண்கின்றார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் உயர்நிலைத் தளபதிகள்
எல்லோரும் வியந்து ஏற்கும் திறன் கொண்டவராக செயற்பட்டார்.
தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் எண்ணுவதனை களத்தில் செயற்படுத்துபவராக பிரிகேடியர் பால்ராஜ் விளங்குகின்றார்.
தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நிகழ்கால வீரத்தின் குறியீடாக அவர் விளங்குகின்றார் என்றார் அவர்.

சமர்க்களங்களின் சரித்திர நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

[புதன்கிழமை, 21 மே 2008, 05:56 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதயபூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.
வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்.
இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு
மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.
இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
1990 ஆம் ஆண்டில் கொக்காவில் - மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய
தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.
முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் "கடற்காற்று" எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "வன்னிவிக்கிரம" நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி
எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.
1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான "ஆகாய- கடல்வெளி"ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம்
தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.
மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட "மின்னல்" நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.
இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட "யாழ்தேவி" நடவடிக்கையை
முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.
1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட "முன்னேறிப்பாய்தல்" முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில்
அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.
யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த "சூரியக்கதிர்" நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01
நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.
வாகரையில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பிரிகேடியர் பால்ராஜ்
வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர்
கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட "ஓயாத அலைகள் - 02" நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத்
தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.
தொடர்ந்து "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின்
கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின்
முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.
அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும்,
ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.
2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட "தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.
போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார்.
பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய
முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக
எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: ச.பொட்டு
[வெள்ளிக்கிழமை, 23 மே 2008, 07:28 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழீழத் தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார். பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:
பிரிகேடியர் பால்ராஜ் எங்களில் இருந்து பிரியமாட்டார். தமிழ் மக்களின் மனங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் மறைய மாட்டார்.
அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தின் வரலாறானது ஒரு சுதந்திரப் போராட்ட வரலாறாக மாறி தமிழர்களின் போரியல் வரலாறாக மாற்றம் பெற்ற
போது அதன் நாயகனாக வாழ்ந்தவர் பால்ராஜ்.
போரின் நாயகனாக போர்க்களத்தின் மத்தியில் நின்று வழிநடத்திய வீரத் தளபதியாக வாழ்ந்தார்.
எம்மை ஆக்கிரமித்தவர்களுக்கு சிம்ம சொர்ப்பனமாக விளங்கிய தளபதி பிரிகேடியர் பால்ராஜை, எதிரிகளால் கடைசி வரை வீழ்த்திவிட முடியவில்லை.
கொடிய நோய் அவரை எம்மிடம் இருந்து பிரித்து வைத்து விட்ட போதிலும் அவரின் வரலாறு அவர் சாதித்த போர் தொடர்பான சாதனைகள்
என்றென்றும் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும். அது தமிழர்களின் வீர விடுதலைக்கான சுதந்திரப் போர் இயக்கமாக எம்மை வழிநடத்தும்.
தமிழர்களின் வரலாறு வீரம் செறிந்ததாக புதிதாக எழுதப் புறப்பட்ட காலத்தில் மிக முக்கிய நாயகனாக பால்ராஜ் விளங்கினார்.
தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக-
போர்க்களத்தில் தமது தளபதி எவ்வாறு படைகளை வழிநடத்த வேண்டும் என்ற தேசியத் தலைவரின் எண்ணத்திற்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மிகச்சிறந்த
"வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் அவர்.
போர்க்களங்களில் துணிவுடனும் திறனுடனும் பதறாமலும் நின்று போர் விசாரணைகளை வழி நடத்தும் பண்பு அவருக்கே உரிய பண்பாக- அதுவும்
இயல்பான ஒன்றாக- இயற்கையில் வாய்த்ததாக- அமைந்திருந்தது.
இந்திய இராணுவத்தினருடனான எத்தனையோ தாக்குதல்களில் திடீர் முடிவுகளை எடுத்து வெற்றிகரமாக நடத்தினார்.
மிக இளம் வயதில் அவர் கிராமப்புறம் சார்ந்த வாழ்கையை மேற்கொண்டிருந்ததால் கிராம வாழ்கை அவருக்கு பிடித்திருந்தது.
ஆனால் அந்த கிராம வாழ்வுக்குள்ளும் மக்களை வழி நடத்துவதற்கான சிந்தனை அவருக்குள் இருந்தது.
படைப் பயிற்சிகளில் உளவியல் ஆசானாக இராணுவத் தலைமைத்துவனாக வெளிக்காட்டியவர்.
தமிழ் மக்களினதும் போராளிகளினதும் மன உறுதியை வளர்ப்பதில் சிறந்து விளங்கியவர் பால்ராஜ்.
பால்ராஜ் நோயினால் வீழ்ந்தது மனதைப் பிழியும் விடயம்.
அதேவேளை எதிரியால் அவரை வீழ்த்த முடியவில்லை என்பதும் எந்தவேளையிலும் எதிரியிடம் அவர் வீழந்துவிடவில்லை என்பதும் நாம்
பெருமைப்படும் விடயம்.
ஆனால் அவர் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கான போர்க்கள தளபதியாக இல்லாது வீழ்ந்து விட தாயாராக உள்ள போர்க்கள தளபதியாக செயற்பட்டார். பல்வேறு தாக்குதல்களில் பாரிய விழுப்புண்களை ஏந்தினார்
பால்ராஜ் வரலாற்றை படைத்தவர். வரலாற்றுக்கான சமர்களை வழிநடத்தி வென்றவர். அதற்காக குருதி கொடுத்து போர்க்களத்தில் நின்று சுழன்று
போராடி வழிநடத்தியவர்.
சாவுக்குள்ளும் அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதையும் தமிழர்களுக்கான வீர விடுதலை வரலாற்றை தனது வாழ்வின் ஊடாக எப்படி நடத்தினார் என்பதையும் நாங்கள் பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களின் வீர விடுதலை வரலாற்று நாயகனாக வாழ்ந்தார். அவரது சாவைப்பற்றி அல்ல அவரது வாழ்வைப்பற்றி பெருமை கொள்வோம். அவரது வாழ்வு தமிழர்களின் விடுதலை வரலாற்றுக்கான இன்றியமையாத அத்தியாயமாக பதிந்து விட்டது என்பது பெருமை என்றார் அவர்.
பால்ராஜ்: ஈழ மைந்தனுக்கு இனிய பிரியாவிடை
வந்தபோது: பாலசேகரம் வாழ்ந்தபோது: பால்ராஜ்
தமிழீழ இராணுவம் தன் தானைத் தளபதிகளில் ஒருவரை இயற்கையிடம் இழந்து விட்டது.பால்ராஜ் என்கிற இளம் பருவப் போராளி பிரிகேடியராய் தன் தேசிய யுத்தகள
கடமைகளை நிறைவேற்றி விட்டு, இறுதி வெற்றியிலும்- முகமாலையில்- தனது முத்திரையைப் பதித்து விட்டு, தனது 43 ஆவது வயதில் மாரடைப்பு நோயால் மண்ணுக்குள் விதையாகிப் போனார். வாழ்ந்த காலம் எல்லாம் மலையாக வாழ்ந்தவர்! வீழ்ந்த போது விதையாக வீழ்ந்தவர்!! இந்த அப்பழுக்கற்ற தேசியவாதியின், தேசியப் பற்றாளனின் வரலாற்றுச் சுருக்கம்.1) 1983- 2008 : 25 ஆண்டுகால யுத்தத்தில் இவர் முகம் கொடுக்காத களம் இல்லை. நமது தேசியப் பெருமிதத்தின் மாபெரும் அடையாளச் சின்னங்களான ஜெயசுக்குறு,ஆனையிறவு,இந்திய விஸ்தரிப்புவாத ஆக்கிரமிப்பு இவற்றில் எல்லாம் வெற்றிகண்டு தமிழீழக் கொடியேற்றிய சாதனைகளின் சரித்திர நாயகன். 2) 1981-1991 ஆகப் பத்து ஆண்டுகள்.1981 இல் மாவட்ட அபிவிருத்திச்சபைக்கு கிரனைற் வீசி நமது பலாத்காரப் போர் ஆரம்பமானது. 1991 இல் ஆக பத்தே ஆண்டுகளில் அரசுமுறை இராணுவ-''மரபுவழி இராணுவ''-படைக் கட்டமைப்புக்கு பால்ராஜ் பொறுப்பேற்றார்.3) 2008 இல் முகமாலையில் இப்படை அமைப்பு பால்ராஜ் வாழ்வின் சிகரத்தை எட்டியது; மட்டுமல்ல அவர் தானே நின்று களமாடினார்.4) பால்ராஜ் களமுனையின் முதல் நிலைத் தளபதி மட்டுமல்ல, தமிழீழ இராணுவக் கல்விக் கழகத்தின் விரிவுரையாளரும் கூட.5) அவர் எம்மை சோகத்தில் விட்டுச்செல்லவில்லை. எமக்கு ஒரு தலைமுறையை உருவாக்கித் தந்துவிட்டு எம்மை விட்டுப் போயிருக்கிறார்.வாழ்வு உயிர் அணுக்களின் இயக்கம்.எல்லா உயிர்ப்பொருள்களும் ஒரு நாள் சாகும்.அதுதான் வளர்ச்சியின் விதி.மூட்டைப் பூச்சிகளும் சாகும்! நாட்டை மீட்பவரும் சாவர்!!''கிளி''களும் சாகும்! புலிகளும் சாவர்!!தமிழீழ முப்படைத் தளபதி பிரபாகரனின் பிரவாகங்களில் ஒன்றானபால்ராஜின் போதனைகளும் அவரது இராணுவ சாதனைகளும் என்றும் சாகா!சாகா வரம்பெற்ற அவரது காணிக்கைகளுக்கும், அவருக்கும், நன்றிகலந்த நமது செவ்வணக்கம்.
உன் மண்ணுக்கு நீ சொன்ன நெறி எதிரிகளைக் கொல்!
நன்றி நம் வேங்கையே நிம்மதி கொள்!!
___________________
உன் பேரால் நம் தேசம் விடுதலை பெற, நாம் என்றும் பணி செய்யும் பொருட்டு:
* மீண்டும் ஒரு இந்தியத் தலையீட்டை எதிர்ப்போம்!
* இந்திய விஸ்தரிப்புவாதத்தைத் தோற்கடிப்போம்!
* இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!
* இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு சேவகம் செய்யும் தமிழக தரகர்களைத் தனிமைப்படுத்துவோம்! அவர்களது சுயநிர்ணய உரிமையை எதிர்த்த,இன மொழிப் பித்தலாட்டங்களை அம்பலமாக்குவோம்!
* அரசியல் தீர்வுகாண வடக்குக் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவோம்!
* பிரிந்து செல்லும் உரிமையைப் பற்றிப்பிடித்து, விடுதலைப் புரட்சியில் ஊன்றி நிற்போம்!
* சுயாட்சிப் பிரதேச திட்டத்தின் அடிப்படையில், விடுதலைப் புரட்சியில் முஸ்லிம், மலையகமக்களை ஒன்றிணைப்போம்!
* அமெரிக்காவுடன் அணிசேர்ந்து, சீனாவுடன் போட்டி போட்டு இந்து சமுத்திரப் பிராந்தியத்தை யுத்தகளமாக்கும் இந்தியப், பேரரசை எதிர்ப்போம், இந்து சமுத்திரப் பிராந்தியத்தை சமாதானப் பிரதேசமாக்குவோம்!
* ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலவள, பிரதேச கைப்பற்றுதலுக்கான ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்ப்போம்! இதை எதிர்த்த நீதியான தேசபக்த விடுதலை யுத்தங்களை ஆதரிப்போம்!
* மூன்றாம் உலகப்போரை தடுத்து நிறுத்துவோம், மூளும் பட்சத்தில் உள்நாட்டுப் போராய் மாற்றி, தீவிரப்படுத்துவோம்!
* விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்போம், புரட்சிகர ஈழ விடுதலைப் போரை இறுதி வரை தொடர்வோம் !
* யுத்த கால மனிதநேயப் பணிகளுக்காக மக்கள் குழுக்களைக் கட்டியமைப்போம்! மக்களுக்கு ஜனநாயகம் வழங்குவோம்!!
* தமிழர் தாயகத்தில் அனைத்து தன்னார்வ உளவாளி நிறுவனங்களுக்கும் தடை விதிப்போம்!
* விடுதலைப் புரட்சியைக் காக்க, போராடும் தலைமையைப் பாதுகாப்போம்!
* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!
ENB.
( குறிப்பு:செய்திகள் புகைப்படங்கள் புதினம் இணைய தளம்)

2 comments:

Anonymous said...

பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்துக் கொண்டு தேசியத்தலைவர் என விளித்தெழுதுவது தங்களுக்கு சுயமுரண்பாடாக தெரியவில்லையா? இங்கு எழும் கேள்வி பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதமும் சுறுந்தேசியவாதமும் எவ்வாறு ஒரே பாதையில் செல்லமுடியும்????

ENB.com said...

/பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதமும் சு( கு) றுந்தேசியவாதமும் எவ்வாறு ஒரே பாதையில் செல்லமுடியும்?/
''குறுந்தேசியவாதம்'' என்பது விவாதத்திற்குரியது. ஆனால் கொம்யூனிஸ்டுக்கள் சர்வதேசியவாதிகளாக இருக்கிற அதே நேரத்தில் தேசியவாதிகளாகவும் இருக்க முடியும். கண்டிப்பாக இருக்க வேண்டும்.பின்வரும் கட்டுரையைப் படியுங்கள்.
Role of Chinese Communist Party in National War- Ma-O
http://senthanal.blogspot.com/2008/03/role-of-chinese-communist-party-in.html