Friday, 16 May 2008

புலிகளை அழித்தொழிக்க இந்தியா பூரண ஆதரவு.

இலங்கையில் இனப்பிரச்சினையென்றதொன்று இல்லை புலிகளை அழித்தொழிக்க இந்தியா பூரண ஆசிர்வாதம்
[16 - May - 2008]
* பிள்ளையானுக்கு இனி ஆயுதம் அவசியம் இல்லை; பிரதமர் விக்கிரமநாயக்கா தினக்குரலுக்கு பேட்டி
விடுதலைப் புலிகளை விரைவில் அழித்தொழிக்க முடியுமெனத் தெரிவித்த பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா, அரசின் நடவடிக்கைகளுக்கு
இந்தியாவின் பூரண ஆசிர்வாதம் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையில் இனப்பிரச்சினை இல்லையெனவும் பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே இருப்பதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
தினக்குரலுக்கு நேற்று வியாழக் கிழமை வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது;
கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டது தவறு என்ற நிலைப்பாட்டிலேயே நான் தொடர்ந்தும் உள்ளேன். எமது மன வருத்தத்தினையும் இதற்காக தெரிவித்தோம். அச்சம்பவம் தவறுதான் என நீதிமன்றம் கூடத் தீர்ப்பளித்துள்ளது.
தமிழர் வெளியேற்றம் தொடர்பில் அமரர் ஜெயராஜ் தெரிவித்த கூற்றுகள் அவரின் தனிப்பட்ட அபிப்பிராயம். அது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல.
எமது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து இனிமேலும் நாம் மாறப் போவதில்லை.
இலங்கையில் இன முரண்பாடு (ETNIC CONFLICT) என்ற எதுவுமேயில்லை. இங்கு இனமுரண்பாடு நிலவினால் வெள்ளவத்தையில் தமிழர்கள்
எவ்வாறு வசிக்க முடியும்? கொழும்பில் எவ்வாறு தமிழர்கள் சுதந்திரமாக நடமாட முடியும்?
இலங்கையில் நிலவுவது பயங்கரவாதப் பிரச்சினையேயாகும். இதனை நாம் முறியடிப்போம்.
விடுதலைப் புலிகளை நிச்சயம் யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியுமென்ற வலுவான நம்பிக்கை எம்மிடமுண்டு. அந்த நம்பிக்கை ஒருபோதும்
வீண்போகாது. புலிகளுக்கெதிரான வெற்றி கைக்கெட்டிய தூரத்திலுள்ளது.
எனினும், புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி எப்போதென்பதை காலக்கெடு செய்ய நாம் தயாரில்லை. அவ்வாறு காலக்கெடுவை கூறவும் கூடாது.
பிரபாகரனுக்கு கடந்த 30 வருடகாலம் நல்ல காலமெனலாம். எனினும், தற்போது அவருக்கு கெட்டகாலம் ஆரம்பித்து விட்டது. தினமும் 40 புலிகள்
கொல்லப்படுகின்றார்கள். பயங்கரவாதிகளுக்கெதிரான யுத்தத்தில் தற்போது நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. புலிகள் சிக்குப்பட்டுள்ளனர்.
நான்கு பக்கமும் அவர்களுக்கெதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளோம். தமிழீழம் ஒருபோதுமே சாத்தியப்படப்போவதில்லை.
உலகில் நாளை 15 தேசங்கள் மலர்ந்தால் பரவாயில்லை. ஆனால், இலங்கை பிரிந்து விடக் கூடாதென்பதே எமது எதிர்பார்ப்பு. அதனை என்னவில்லை
கொடுத்தேனும் தடுத்து நிறுத்துவோம்.
மேலும், முப்படையினரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாதென்பதே எமது நிலைப்பாடு. கிழக்கில் ஆயுதமற்ற சூழல்
உருவாக்கப்படும். நான் பிள்ளையானை கண்டதுமில்லை கதைத்ததுமில்லை.
பிள்ளையான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இனிமேல் அவருக்கு ஆயுதம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கிழக்கில் அவர்
முதலமைச்சரானால் ஆயுதமற்ற சூழலை அங்கு உருவாக்க வேண்டும்.
புலிகளுக்கெதிரான யுத்தத்தை நாம் ஒரு போதும் நிறுத்த மாட்டோம். புலிகள் பேச்சுக்கு விரும்பினால் ஆயுதங்களை கைவிட வேண்டும். அவர்களுடன்
இடை நடுவில் எந்த ஒப்பந்தம் செய்யவும் நாம் தயாரில்லை. புலிகளுக்கெதிரான போருக்கு போதிய ஆதரவு நல்கும் இந்தியா புலிகளை விரைவில்
அழித்தொழிக்கவும் ஆசிர்வாதம் வழங்கியுள்ளதெனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு நகர மத்தியில் குண்டுத்தாக்குதல்: 7 காவல்துறையினர் உட்பட 9 பேர் பலி- 95 பேர் காயம்
[வெள்ளிக்கிழமை, 16 மே 2008, 12:58 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] புதினம் இணையதளம்
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அண்மையில் ஹில்டன் விடுதிக்கு முன்பாக உள்ள வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் கலகத்தடுப்பு காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேருந்து தொடரணியை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை
பிற்பகல் 12.05 மணிக்கு தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 7 காவல்துறையினர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 95 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலை
கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் அமைச்சர் காமினி லொக்குகேயின் வாகனச் சாரதியும் கொல்லப்பட்டுள்ளார்.
மருதானையில் இன்று பிற்பகல் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்று கொண்டிருந்த காவல்துறையினரை
ஏற்றிச்சென்ற பேருந்து தொடரணி மீது முச்சக்கர வாகனம் ஒன்று மோதியதனை அடுத்தே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும்
கொல்லப்பட்டவர்களில் 7 பேர் காவல்துறை அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் பலர் காயமடைந்து வீழ்ந்து கிடந்தனர் என்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
குண்டுவெடித்த பகுதி பிரமுகர்களின் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். குண்டுவெடித்த பகுதியில் பதற்றநிலை காணப்படுவதாகவும் அப்பகுதியில்
படையினரும், வான்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இக் குண்டுத்தாக்குதல் குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:
புறக்கோட்டை சம்போதி விகாரையை அண்மித்துள்ள பகுதியில் பிற்பகல் 12:00 மணிக்கு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சேத விபரங்கள்
உடன் தெரியவரவில்லை என்றார்.
சம்பவத்தில் காயமடைந்த 95 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனைப் பணிப்பாளர் அனில்
வியஜசிங்க தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் 30 காவல்துறையினரும் 3 படையினரும் அடங்குவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்தில் சிதறிய நிலையில் முச்சக்கர வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் காணப்படுகின்றது. இதனை விட காவல்துறையினரின்
பேருந்துகள் இரண்டும், பார ஊர்தி ஒன்றும் மேலும் சில முச்சக்கர வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட உந்துருளி ஒன்றின் இலக்கத்தகடும் அப்பகுதியில் வீழ்ந்து கிடந்தது. EP 3875 என்ற இலக்கத்தகடே
அப்பகுதியில் காணப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் செல்ல சுமார் ஒரு மணிநேரம் வரை ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அப்பகுதியில் நூற்றுக்கணக்கான படையினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடம் அரச தலைவர் மாளிகையை அண்மித்துள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கிற்கு காணி, பொலிஸ் அதிகாரத்தை வழங்காவிடின் விபரீத விளைவுகள் ஏற்படும்
Thursday ,15 May 2008( Posted : 12:05:32GMT)
ஜாதிகஹெல உறுமயவின் வலியுறுத்தலுக்கு அடிபணிந்து கிழக்கு மாகாண சபைக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க அரசாங்கம்
மறுக்குமேயானால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமென அமைச்சர் அமீர் அலி எச்சரித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
கிழக்கு மாகாண மக்கள் குறித்து அல்லது அவர்களின் எதிர்காலம் பற்றியோ பேசுவதற்கு ஜாதிகஹெல உறுமய கட்சிக்கு அருகதையே கிடையாது.
கிழக்கு மாகாணத்தவரும் இலங்கையர்களே. அம்மாகாணமும் இலங்கையின் ஒரு பகுதியே. அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட மாகாண
சபைக்குரிய அதிகாரங்கள் தென்னிலங்கை மாகாணங்கள் அனுபவிக்கையில் அந்த அதிகாரங்கள் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படக் கூடாதெனக்
கூறுவது எவ்விதத்தில் நியாயமாகும்?
கிழக்கு மாகாண சபைக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்பதே முஸ்லிம் சமூகத்தினதும், முஸ்லிம் அமைச்சர்களினதும்
வலியுறுத்தலாகும்.
ஜாதிகஹெல உறுமயவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து அரசாங்கம் கிழக்கு மாகாண சபைக்கு உரிய அதிகாரங்களைப்பகிர பின்னடிக்குமாயின்
அதனால் பாரிய விளைவுகள் உருவாகுமென எச்சரிக்க விரும்புகிறேன்.
13ஆவது அரசியலமைப்பின் திருத்தத்தை வடகிழக்கில் பூரணமாக அமுல்படுத்த வேண்டுமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர்கூட இணக்கம்
கண்டுள்ள நிலையில், கிழக்கின் அதிகாரத்தை குறைப்பதற்காக தமக்கு இத்தேர்தலில் மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.
ஹெலஉறுமய கிழக்கில் முஸ்லிம்களின் பூர்வீகப் பிரதேசங்களை புனிதப் பிரதேசங்களெனக் கூறி அபகரித்துவிடக் கூடாதென்பதற்காகவே காணி
உரிமை அற்றிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுக்கு காணி உறுதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தேர்தலுக்கு முன்னர் கிழக்கு முதலமைச்சர் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவாரென்ற நம்பிக்கை தமக்கும்,
முஸ்லிம் சமூகத்திற்கும் இன்னும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தீகவாவி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை தடுப்பதற்காக இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு மனுத்தாக்கல்
Wednesday,14 May 2008( Posted : 11:05:42GMT)
அம்பாறை தீகவாவி புண்ணிய தலத்தை அண்மித்த பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு வீடமைப்புத் திட்டம் அமைக்கப்படுவதைத் தடுப்பதற்காக
இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி அடிப்படை மனுவொன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெலஉறுமய பாராளுமன் உறுப்பினர் எல்லாவெல மேதானந்ததேரர், தீகவாவி விவாராதிபதி நன்னபூராவே புத்திரகித்ததேரர் ஆகியோர் உட்பட
மற்றும் சிலர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அம்பாறை அரச அதிபர் அக்கரைப்பற்று பிரதேச செயலர் அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், ஜீவன் குமாரதுங்க, தீகவாவியை பாதுகாக்கும் சங்கத்தின்
தலைவர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இனங்காணப்பட்ட முக்கிய புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்று. 1998ம் ஆண்டுமுதல் அஷ்ரபின் பெயரில் முஸ்லிம் கிராமம் அமைக்க திட்டமிடப்படுகிறது. என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முயற்சி மூலம் பௌத்த உரிமை அழிக்கப்படுகிறதெனவும் எனவே இந்நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்குமாறும் மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
Muslimguardian

மூதூரில் மீண்டும் மீன்பிடித்தடை அமூல்
மூதூரில் அமூலில் இருந்த மீன் பிடித்தடையை மாகாணசபைத் தேர்தலில் வாக்குப் பொறுக்குவதற்காக தற்காலிகமாகத் தளர்த்திய பக்சபாசிஸ்டுக்கள், தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் அமூலாக்கியுள்ளனர். இதனால் ஏழை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இத்தடை உடனடியாக நீக்கப்பட வேண்டுமென கோரியுள்ளனர்.
தகவல் பி.ஒ.கூ.தமிழ்

No comments: