Sunday, 8 June 2008

யுத்தகளம்: புலித்தளபதிகளின் இராணுவஆய்வுரைகள்.

ஒரு தலைமையின் கீழ் அணிதிரளும் தமிழினம் அகலக்கால் வைக்கும் சிங்களத்தினை அழிக்கும்: நா.தமிழன்பன்
[ஞாயிற்றுக்கிழமை, 08 யூன் 2008, 03:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
ஒரு தலைமையின் கீழ் அணிதிரளும் தமிழினம் அகலக்கால் வைக்கும் சிங்களத்தினை அழிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் கடந்த வாரம் நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கில் புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன் ஆற்றிய சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த மண்ணில் தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் பாதையில் இந்த முல்லைத்தீவு மண் கணிசமான பங்காற்றியிருக்கின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை இந்த மண் காத்திருக்கின்றது. இந்த மண்ணில்தான் இந்தியப்படையின் ஆக்கிரமிப்பு காலத்தில் எமது விடுதலைப் போராட்டத்தின் உயிர் தக்கவைக்கப்பட்டது. இந்த மண்ணில் இன்று மிகப்பெரிய போர் தொடங்கியிருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மக்கள் இந்த மண்ணில் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம் ஏன் இன்னும் எமது இடங்களைப் பிடிக்கவில்லை? என்ற கேள்வி உண்டு. அது நியாயமான கேள்வி. இந்தக் கேள்விகளுக்கான விடையாக இன்று களமுனையில் இருக்கின்ற நிலவரங்களை நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். ஐந்து மாவட்டங்கள் உள்ளடங்கிய இந்த வன்னிப் பிராந்தியத்தில ஏறக்குறைய நான்கு லட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நான்கு லட்சம் மக்களுக்குள் இருந்துதான் இந்த விடுதலைப் போராட்டம் தனது பலத்தைப் பெற்று, ஒட்டுமொத்தமான சிறிலங்காப் படையோடும் உலக ஆதரவோடு நின்று கொண்டிருக்கின்ற சிங்களப் பேரினவாத அரசுடனும் போரிட்டுக் கொண்டிருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கத்திடம் 12 டிவிசன் படையினர் இருக்கின்றார்கள். 12 டிவிசன் படையில் மணலாற்றில் 59 ஆவது டிவிசன் படை சண்டையிடுகின்றது. இந்த 59 ஆவது டிவிசனுக்கு ஆதரவாக 53 ஆவது படையணியில் இருந்து சிறப்பு அணி ஒன்று இங்கு வந்து நிற்கின்றது. இவற்றிற்கும் மேலாக சிங்களக் கிராமத்தின் பாதுகாப்பிற்காக மட்டக்களப்பில் நிலை கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் வந்து நிற்கின்றார்கள். வவுனியாவில் 58 ஆவது டிவிசன் படையினரும் மன்னாரில் 57 ஆவது டிவிசன் படையினரும் நிற்கின்றார்கள். தொடர்ச்சியாக ஓராண்டுக்கும் மேலாகப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற மன்னார் பாலாவிப் பெருங்கடலில் இருந்து உங்கள் கொக்குத்தொடுவாய்ப் பெருங்கடல் வரைக்கும் 142 கி.மீ காப்பரண்கள் தொடராக அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடரான காப்பரண்களில் எதிரி வந்து தொடராக முட்டிக் கொண்டிருக்கின்றான். எங்கு போராளிகள் இல்லையோ அதற்கு ஊடாக எதிரி நுழையப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மணலாற்றில் எமது முன்னணிக் காப்பரணை எதிரி வந்து தாக்கினான். எமது புதிய போராளிகள் காட்டுச் சண்டையில் தாக்குதலைத் தொடுத்தார்கள். எதிரிக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தினார்கள். மணலாறு குறித்தும் காட்டு வாழ்க்கை குறித்தும் காட்டிற்குள் உள்ள காப்பரண்கள் குறித்தும் உங்களுக்கு நன்கு தெரியும். இதற்குள் தான் எமது போராளிகள் நிற்கின்றார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்திற்குள்தான் சண்டை நடைபெறுகின்றது. தொடர்ச்சியாக அதற்குள் சண்டை நடைபெற்று வருகின்றது. எதிரி முன்னேறி நாயாற்றைப் பிடிக்கலாம், முல்லைத்தீவைப் பிடிக்கலாம் என்று சொல்லி மிகப் பெரிய போர் அறிவித்தலை விடுகின்றான். அவன் இந்த மண்ணை நோக்கி உங்களின் இருப்பையும் வாழ்விடங்களை நோக்கியும் நகர்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றான். நகர விடாமல் அங்கு போராளிகள் நின்று வீராவேசத் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். வட போர்முனையைப் பார்த்தால் நாகர்கோவில் தொடக்கம் கிளாலி வரையும் ஏறக்குறைய 14 கி.மீ முன்னனிக் காப்பரண்கள் இருக்கின்றன. அதற்கு முன்பாக 36,000 சிங்களப்படையினர் நிற்கின்றார்கள். அதற்குள் தான் ஆறு லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எமது தலைவர் உங்களின் மனங்களில் வாழ்ந்து வழி காட்டிக்கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள், வலிந்த தாக்குதல்களை தமிழர் சேனைகளை வைத்து எவ்வெப்போது எங்கெங்கே மேற்கொண்டார் என்பதனை நாம் நினைவில் இருத்திப் பார்க்க வேண்டும். நாம் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்றோம். ஒரு பின்னடைவை சந்தித்தால் அதற்கு அடுத்த கட்டமாக ஒரு பாய்ச்சலைச் செய்திருக்கின்றோம். யாழ். குடாநாட்டை விட்டு வந்த பின்பு முல்லைத்தீவுப் பட்டணத்தை மீட்டோம். 1,200 படையினரை சாய்த்தோம். அதற்கு அடுத்த கட்டமாக பன்றிக்கெய்தகுளம் வவுனியாவில் இருந்து தொடங்கிய ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப்படை படிப்படியாக அகலக் கால் வைத்து வந்தது. 1996 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் "அகலக் கால் வைக்கின்ற சிங்களப்படை அழியப் போகின்றது" என்று சொன்னார். ஓயாத அலைகள் - 02 நடவடிக்கையில் கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டது. ஆயிரக்கணக்கான படையினர் அங்கும் இல்லாது ஒழிக்கப்பட்டனர். எமது வலிந்த தாக்குதல் மூலம் கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஓயாத அலைகள் - 03 நடவடிக்கை நடைபெற்றது. அதற்கு முன்பாக இந்த மைதானத்தில் இருந்து எல்லைப்படையை எல்லைக்கு வழி அனுப்பினீர்கள். போராடக்கூடிய குடும்பத்தவர் பலர் எல்லைக்குப் போனார்கள். எல்லயில் நின்ற போராளிகள் கிளம்பினார்கள், ஒத்திகை பார்த்தார்கள். ஒத்திகைக்குப் பிற்பாடு ஒட்டுசுட்டானில் தொடங்கிய ஓயாத அலை - 03 நடவடிக்கையில் 300 ஆண்டுகால அடிமைச்சின்னமாக இருந்த ஆனையிறவுத் தளம் மீட்டு, யாழ்ப்பாணத்தின் வாசல் வரை சென்றது. தலைவருக்கும் போராட்டத்திற்கும் நீங்கள் தந்த ஒத்துழைப்பே இந்த வெற்றிக்குக் காரணமாகும். தலைவர் மக்களின் ஒவ்வாரு விடயத்திலும் மிகவும் ஆழமாக அக்கறை செலுத்துகின்றார். ஒவ்வொருவரிலும் தனித்தனி பற்று வைத்துள்ளார். நாம், பெரும் படையணியை உருவாக்குவோம் எனச் சிங்களமும் உலகமும் எதிர்பார்க்கவில்லை. மேலும் எமது தற்கொடைப் போராளிகளைக் கண்டு சிங்களமும், உலகமும் அஞ்சுகின்றன. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என அழைத்த உலகின் பார்வை இன்று மாறி வருகின்றது. எமது போராட்டத்தின் நியாயத்தை முழுமையாக இல்லாது போனாலும் ஓரளவு ஏற்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் எமக்கான ஆதரவு கூடி வருகின்றது. நாம், ஜெயசிக்குறு காலத்தில அல்லது அதற்கு முன்னைய காலத்தில் எமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்களுக்கு மட்டும் தெரிந்த செய்திகள் வெளியே சொல்ல முறையான வழியில்லை. ஆனால், சமாதான காலத்தில் தலைவர், எமது ஊடகத்தை உலகம் முழுதும் விரிவாக்கம் செய்தார். தலைவர் இந்த சமாதான காலத்துக்குள் அரசியல் போராளிகளை உலகம் முழுக்க அனுப்பி அங்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு அரசியல் விழிப்பூட்டினர். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என இன்று தமிழர்கள் எல்லோரும் ஒரே தலைமையின் கீழ் அணிதிரண்டுள்ளனர். தலைவரின் வழிகாட்டலை ஏற்று எல்லோருமே அணிதிரண்டு விட்டார்கள். தமிழீழம் கிடைக்கின்ற ஒரு சாதகமான சூழல் உள்ள நேரம் இது. மக்கள் ஒன்றுதிரண்டு விட்டார்கள். எம்மைப் பயங்கரவாதிகள் என்ற உலகம் எம்மை ஏற்கும் நிலையை உருவாக்கியுள்ளார். எம்மை எதிர்த்துப் போரிட்ட சிங்களப் படை பலவீனமடைகின்றது. பொருளாதார ரீதியாக அந்த அரசு சாய்கின்ற நிலையில் உள்ளது. சிங்களப்படைகள் திக்குமுக்காடுகின்றனர். 23.04.08 இல் நடந்த சமரில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிங்களப்படை பெரும் இழப்பைச் சந்தித்தது. மன்னாரிலும் மணலாற்றிலும் இழப்புக்களைத் தொடர்ச்சியாகச் சந்திக்கின்றனர். எல்லையில் நாம் பலமாய் உள்ளோம். கடலிலும் நாம் பலமாய் உள்ளோம். புதிய போராளிகள் தொடர்ச்சியான சண்டைகளால் விரைவாகப் பட்டறிவுமிக்க போராளிகளாக மாறி வருகின்றனர். இந்த வெளிப்பாடுகளில் ஒன்றே 23.04.08 இல் நடைபெற்ற சமரும் சிங்களத்தின் தோல்வியுமாகும். நடைபெறும் சண்டைகளால் எமக்கு இழப்புக்கள் ஏற்படுகின்றன. அதேவேளை எதிரியோ பெருமளவில் இழப்புக்களைச் சந்திக்கின்றான். எமது இயக்கத்தின் கண்ணிவெடி வயல்கள், பொறிவெடி வயல்கள், பதுங்கியிருந்து தாக்குகின்ற தந்திரம் போன்றவையும் பற்றாலியன், பற்றாலியனாக சிங்களப்படையினர் வெளியேற்றப்படுகின்றார்கள். அன்பான உறவுகளே! களத்தில் நிற்கும் உங்கள் போராளிகள் தொடர்பாகவும் அவர்களின் அபாரமான சாதனைகள் பற்றியும் களச்சூழல் பற்றியும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் கொடுத்து அனுப்பும் உலருணவு அவர்களுக்கு முக்கிய உணவாக உள்ளது. அது சுவையாய் இருக்கின்றது. அதில் உங்களின் முகங்களை போராளிகள் காண்கிறார்கள். களத்தில நின்று போராடுகின்ற ஒவ்வொரு போராளிக்கும் மிகப்பொரிய வரலாறு இருக்கின்றது. சண்டை பிடிக்கும் போராளிகளையும் விழுப்புண் அடைந்த போராளிகளையும் சந்தித்தேன். அவர்களின் வீரமிகு செயற்பாடுகளை கேட்க உண்மையில் எமக்கு மெய்சிலிர்த்தது. தொடக்க காலத்தில் நாம் சண்டை பிடிக்கும் போது நாம் பயந்திருக்கின்றோம். சில களத்தினை விட்டுட்டு ஓடி இருக்கின்றோம். பின்பு அச்சம் தெளிந்து போராடினோம். போராடாது விட்டால் நாம் அழிவோம். எதிர்ப்பவனை விட ஒடுபவன் விரைவில் அழிவான். இன்று அதில் போராளிகள் நன்கு நிலை எடுத்து எதிரியை சுட்டுக்கொல்கின்றார்கள். எதிரியின் சூட்டுக்கு இலக்காகாமல் தம்மை முடிந்த வரையில் காக்கின்றார்கள். போரில் சாவு வரும். அந்தச் சாவை போராளி வீரச்சாவாக ஏற்கின்றான். முடிந்த வரையில் போராடுகின்றான். சிலவேளைகளில் ஏதோ ஒரு களமுனையில் தவிர்க்க முடியாமல் அவன் மார்பில் குண்டு ஏந்தி வீரச்சாவு அடைகின்றான். "புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என்று சொல்லியபடி இந்த மண்ணை வீழ்ந்து முத்தமிடுகின்றான். அந்தப் புனித வித்துடலை மரியாதையுடன் விதைக்கின்றோம். சாதனை படைத்தவனை பத்திரமாகக் கொண்டுபோய் அவன் அம்மாவிடம் கொடுங்கள், அவனின் வரலாற்றை அவன் உறவுகளுக்குச் சொல்லி வித்துடல் விதைக்கும் வரை நின்றுவிட்டு வரவும் என்று சொல்லி தளபதி அனுப்பி விடுகின்றார். சண்டையில் பசியோடு நின்றவன், தனது சகதோழன் வீரச்சாவடைந்தான் எனும் தவிப்போடு, பட்டினியோடு ஒரு மிடறு தண்ணீர் கூட குடிக்காமல் களத்தில் இருந்து தவியாத் தவித்து ஓடிவருகின்றான். வித்துடலுடன் பக்கத்தில் நிற்கின்றான். இந்த மாவீரனின் வரலாறைச் சொல்லவேண்டும், சாதனை படைத்தவன் என்று விளக்கவேண்டும் என்று அவன் முயற்சிக்கின்றான். ஆனால் வீரச்சாவு வீட்டில் சொல்ல முடியவில்லை. ஏற்ற சூழலும் இல்லை. தோழனின் நினைவுகளோடு உடனடியாக செல்கின்றான், மீண்டும் களமாடுகின்றான். நாம் எல்லோரும் ஒன்று திரண்டு ஒரு முகமாக நிற்போனால் உறுதியாக விரைவில் சுதந்திர தமிழீழத்தை அடைய முடியும். எமது தேசியத் தலைவர் ஏறத்தாழ 36 ஆண்டுகள், நாளும் பொழுதும் இந்த மண்ணின் விடுதலைக்காய் உழைத்து வருகின்றார். அவர் மட்டுமல்ல அவரது குடும்பமுமே போராட்டத்திற்காக உழைக்கின்றது. ஏற்கனவே நான் கூறியது போன்று, தமிழீழ மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து, ஒருமுகப்பட்டுப் போராடுவோம். உலக வரலாற்றில் ஒரு பெருந் தலைவராக, விடுதலை வீரராக மதிக்கப்படும் எமது தேசியத் தலைவரின் கீழ் ஒன்றிணைந்து போராடுவோம். உறுதியாகத் தமிழீழம் காண்போம் என்றார் அவர்.

சிங்களத்தின் தலையில் பேரடி கொடுத்த புலிகளின் "புல்மஸ்" நடவடிக்கை
[வெள்ளிக்கிழமை, 30 மே 2008, 05:16 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
எகிப்தின் சுயஸ் கால்வாய் கோட்டைத்தளத்தை அழித்த யூதர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க "புல்மஸ் நடவடிக்கை"யைப் போன்று கடற்புலிகளின் சிங்களத்தின் "சிறுத்தீவு" தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை அமைந்திருக்கின்றது. புக முடியாத எதிரியின் கோட்டைக்குள் உள்நுழைந்து எதிரியின் தலைக்கு அடி கொடுக்கும் கொமாண்டோத் தாக்குதல்கள் நீண்டு செல்லும் போரில் போரிடும் தரப்புக்கு உளவுரணை வெகுவாக அதிகரிக்கச் செய்யும் என்று போர் மேதை மோசே தயான் தெரிவித்துள்ளார்.
யூதர்களின் முதன்மைத்தளபதியான அவர், சிறிய அணிகளை வைத்து கொமாண்டோத் தாக்குதல்களை நடத்துவதில் புகழ் பெற்றவர்.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படைக்கோட்டைக்குள் கடற்புலிகளின் சிறப்புக் கொமாண்டோ அணியினர் நடத்திய வெற்றிகரத் தாக்குதலானது யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்காப் படையினருக்கு ஒரு நெத்தியடித் தாக்குதலாகும்.
யாழ்ப்பாணத்தை பாதுகாக்கும் வகையில் சிங்களப் படைத்தரப்பு பல்வேறு உயர்பாதுகாப்பு வியூகங்களை அமைத்துள்ளது.
யாழ். கரையோரம் எல்லாம் தொடர் முட்கம்பிவேலியைப் போட்டு அவற்றில் அரண்களை அமைத்து படையினரை நிறுத்தியுள்ளது. யாழ்ப்பாண நகரின் தென்பகுதியான பண்ணை - யாழ். கோட்டை - குருநகர்- கொழும்புத்துறை - தென்மராட்சி என நீண்டு செல்லும் கடற்கரையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அதிகமாகும்.
பண்ணை தொடக்கம் பாசையூர் வரையில் கடலுக்குள் மிகச்செறிவான முட்கம்பிச்சுருள்கள் போடப்பட்டு 50 மீற்றருக்கு ஒரு காவலரண் என செறிவான முகாம்களை சிறிலங்காப் படைத்தரப்பு அமைத்துள்ளது.
யாழ். நகரில் உள்ள 512 ஆம் பிரிகேட் தளத்துக்கு மிக அண்மித்த பிரதேசமாகும் இது.
பண்ணையிலிருந்து தெற்காக யாழ். தீவகத்துக்கு மண்டைதீவு ஊடாக செல்லும் வீதி உயர்பாதுகாப்பு வலயமாகும்.
வீதியின் இருபுறமும் முட்கம்பி சுருள்கள் வேலிகளாகப் போடப்பட்டுள்ளன.
உயரமான பண்ணைப் பாலத்தில் யாழ். கடலேரியின் கண்ணுக்கெட்டும் வளைவு வரை பூநகரி தொடக்கம் பெருங்கடல் வரை பார்க்கக்கூடியதாக பலமான அவதானிப்பு நிலையம் இருக்கின்றது.
இது சிறுத்தீவின் மேற்குப்புற பாதுகாப்பு மற்றும் விழிப்பான நிலைகளாகும்.
சிறுத்தீவின் தெற்கில் மண்டைதீவு உள்ளது.
மண்டைதீவில் ஒரு பெரும் கடற்படைத்தளத்தை சிறிலங்கா அமைத்துள்ளது.
"வேலுசுமண" என்ற பழைய கால சிங்களப்படைத் தளபதியின் பேரில் இது அமைக்கப்பட்டுள்ளது.
"வேலுசுமண" தளத்தில் ராடார் நிலையம், கடற்படை படகுகளின் தரிப்பிடம் அல்லது இறங்குதுறை ஆகியன பலமாக உள்ளன.
மண்டைதீவு பிரதேசமானது பெரும்பாலும் கண்டல் காடுகளைக்கொண்ட தீவு. அதன் கிழக்குப் புறத்தின் கரையோரம்தான் மக்கள் வாழும் பகுதி.
கண்டல்காடு அனைத்துமே முட்கம்பி வேலிகள் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு கிழக்கு கரையில் "வேலுசுமண" கடற்படைத்தளம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
1990 ஆம் ஆண்டில் யாழ். கோட்டைப் படையினரை ஆக்கிரமிக்க சிறிலங்காப் படைத்தரப்பானது மண்டைதீவு நோக்கி "திரிவிடபலய" என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. கோத்தாபய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் படை நடத்தி 350-க்கும் அதிக அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து மண்டைதீவு கிணறுகளுக்குள் போட்டு எருவால் மூடினர்.
கோட்டையை படையினர் ஆக்கிரமிக்கும் வரை சிறுத்தீவில் சிறிலங்கா தரைப்படையினர் நிலைகொண்டிருந்தனர்.
கோட்டைப் படையினர் 1990 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் அதிகாலை பின்பகுதி ஊடாக தப்பி மண்டைதீவுக்கு ஓட அவர்களையும் கொண்டு படைகள் ஊர்காவற்றுறைக்கு பின்வாங்கின. அதன்பின் மண்டைதீவு விடுவிக்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டில் மீண்டும் "வலம்புரி" என்ற வல்வளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மண்டைதீவைப் படையினர் ஆக்கிரமித்தனர். அங்கிருந்து யாழ். நகரை கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாக இருந்தது.
ஆனால் கடைசி வரை அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.
மண்டைதீவை ஆக்கிரமித்த சிறிலங்காப் படையினர் சிறுத்தீவில் தமது நிலைகளை அமைத்து கடலிலும் யாழ். கரையோரத்திலும் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை அவதானித்தனர்.
1993 ஆம் ஆண்டில் மண்டைதீவில் கடற்படைத்தளம் ஒன்று அப்போது அமைக்கப்பட்டு அங்கு கடற்படையின் நீருந்து விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் ஒன்றை கடற்புலிகள் இரவோடு இரவாக இழுத்துக்கொண்டு வந்துவிட்டனர்.
1994 ஆம் ஆண்டில் மண்டைதீவின் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தி சிறிலங்காப் படையினருக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தினர். தொடர்ந்து சிறுத்தீவில் சிறிலங்காப் படையினர் நிலைகொண்டிருந்தனர்.
1995 - 1996 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தை சிறிலங்காப் படையினர் வல்வளைத்தனர்.
1990-களின் கடைசியில் தீவகத்திலிருந்து தரைப்படையினர் அகற்றப்பட்டு முழுமையாக கடற்படையினர் நிறுத்தப்பட்டனர்.
அப்போது மண்டைதீவு சிறுத்தீவில் "வேலுசுமண" கடற்படைத்தளம் அமைக்கப்பட்டது.
மண்டைதீவுக்கு வடக்காக கண்டல் மரங்களைக் கொண்டதாக சிறுத்தீவு உள்ளது.
இந்த சிறுத்தீவு ஆட்கள் வாழாத, கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக தரித்துச் செல்லும் மற்றும் கரையோரத் தொழில் செய்யும் இடமாகவே அமைந்திருந்தது.
1986 ஆம் ஆண்டுக்கு முன்னர் அங்கு சிப்பி மற்றும் பவளப்பாறைகளை சுட்டு சுண்ணாம்பு எடுக்கும் தொழில் செய்யப்பட்டது. குகை போன்று கட்டப்பட்ட லூர்து நாயகி என்ற கத்தோலிக்க கோவில் இருந்தது.
ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 12 ஆம் நாளில் இங்கு ஒருநாள் திருவிழா நடக்கும்போது மட்டும் மக்கள் அங்கு திரள்வார்கள்.
யாழ். கரையிலிருந்து கடற்றொழிலாளர்கள் நீந்தியும் நடந்தும் இத்தீவுக்குச் செல்வார்கள்.
அந்தளவுக்கு ஆழம் குறைந்த கடற்பரப்பு அது. முன்னர் வெளிநாட்டு பாய்மரக்கப்பல்கள் கச்சாய்-அலுப்பாந்தித்துறைகளுக்கு வருவதற்காக ஊர்காவற்றுறையிலிருந்து பண்ணைப்பாலம் ஊடாக அமைந்துள்ள கிழவி வாய்க்கால் என்ற ஆழமான குறுகிய பகுதியை பயன்படுத்தின.
இந்தப் பாதையின் ஊடாகவே நீந்திக் கடந்தும் நடந்தும் இத்தீவுக்கு தொழிலாளர்கள் செல்வார்கள்.
உவர் மணலும் சதுப்பும் கண்டலும் நிறைந்த கடல் உயிர்களுக்கு வளமான பகுதியாக சிறுத்தீவுப்பகுதி உள்ளது.
1986 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினரின் அட்டூழியம் தொடங்க அப்பகுதிக்கு தொழிலாளர் செல்ல முடியாத ஆபத்தான பகுதியாக இன்றுவரை தொடர்கின்றது.
"வேலுசுமண" கடற்படைத்தளத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயலை சிறுத்தீவு தளம் செய்தது.
அங்கு அதற்காக ராடார் தளம் போடப்பட்டு அவதானிப்பு நிலையம் இருந்தது.
50 கலிபர் துப்பாக்கிகள்- ஏகே எல்எம்ஜி- பிகேஎல்எம்ஜி மற்றும் சிறு மோட்டார்கள்- குண்டு செலுத்திகள்- துப்பாக்கிகள் என வைக்கப்பட்டிருந்த பலமான "வேலுசுமண"வின் துணைத்தளமாக சிறுத்தீவு தளம் இருந்தது.
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பே இந்தத்தளங்கள் தான் என்ற நிலைப்பாட்டில்தான் சிறிலங்கா கடற்படைத்தளம் இருக்கின்றது.
சிறுத்தீவைச் சுற்றி முட்கம்பிவேலி- முட்கம்பிச்சுருள்கள் போடப்பட்டு ஈ எறும்பும் நுழையாது என்று இறுமாந்து இருந்தது சிங்களம்.
இதற்கான வழங்கல் பாதை "வேலுசுமண" தளத்துடன் தீவின் தெற்குப்பகுதியில் மரக்கட்டைகளால் மண்டைதீவு வீதிவரை போடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
கடல்பெருக்கு நேரத்தில் சிறு படகுகள் மூலம் இத்தளத்துக்கு வழங்கலை சிறிலங்கா கடற்படையினர் மேற்கொள்வார்கள்.
மேலும் சிறிய ஆழம் குறைந்த கடலில் கண்காணிப்பு நடவடிக்கையைச் செய்ய படகுகள் சிறுத்தீவில் தரித்து நிற்கும். இதனை விட இந்தப்பகுதி தாக்கப்பட்டால் முறியடிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் ஆட்டிலெறிகள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன.
தேவையின் போது பல்குழல் வெடிகணைச் செலுத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டு மண்டைதீவில் ஒரு தரையிறக்கத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அது மண்டைதீவின் தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அது ஒரு முதன்மைத் தாக்குதலாகவும் அமையவில்லை.
அப்போது மண்டைதீவு- அல்லைப்பிட்டி வரை படையினர் ஆட்டிலெறித் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
உயர் பாதுகாப்பு வியூகங்களுக்கு மத்தியில் இருந்த "வேலுசுமண" சிங்கள கடற்படைத்தளத்தின் முதன்மைத்தளமான சிறுத்தீவுத் தளம் மீது நேற்று வியாழக்கிழமை அதிகாலை கடற்புலிகள் வெற்றிகரமாக ஒரு ஈரூடகத்தாக்குதலை நடத்தி அதனை முழுதாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அவற்றில் இருந்த படையினருக்கு அழிவை ஏற்படுத்தினர்.
அங்கு நின்ற படையினரில் 13 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 3 பேரின் உடலங்களையும் ராடார்- 50 கலிபர் துப்பாக்கி- எல்எம்ஜி துப்பாக்கிகள் ஆகியவற்றையும் கடற்புலிகள் கைப்பற்றினர்.
சிங்களப் படையினரால் இந்த தாக்குதலை தடுக்கவே முடியவில்லை.
கடந்த ஆண்டு இதே மாதம் 30 கடல் மைல் தொலைவுக்குச் சென்று நெடுந்தீவு "குயின்ராக்" கடற்படைத்தளத்தை கடற்புலிகள் ஈரூடகத் தாக்குதலை நடத்தி படையினருக்கு பேரழிவை ஏற்படுத்தி ராடார்கள் உள்ளிட்ட பெருமளவிலான படைப் பொருட்களை கைப்பற்றி அதே 30 கடல் மைல்கள் தொலைவிலான பின்தளத்தை வெற்றிகரமாக வந்தடைந்தனர்.
சிறிய அணிகளைக்கொண்டு ஈரூடகத்தாக்குதலை மேற்கொள்வதில் இதுவரையான வரலாற்றில் யூதர்களுக்கு முதலிடம் இருக்கின்றது. இதில் எகிப்தின் சுயஸ் கால்வாய் கோட்டைத்தளத்தை அழித்த "புல்மஸ்" நடவடிக்கை முதன்மையானது.
அதற்கு அடுத்த படியாக சிறிய அணிகளைக்கொண்டு எதிரியின் கோட்டைக்குள் கடல் வழி சென்று ஈரூடக கொமாண்டோத் தாக்குதலை நடத்தி எதிரிக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தி தளம் திரும்புகின்ற வல்லமை கடற்புலிகளிடம்தான் உள்ளது.
உலகளவில் பெரும் படைகளை வென்ற சிறிய படையணிகளின் போர் வரலாறுகளை நாம் பார்த்தோமானால் அதனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
சிறிலங்காப் படைக் கோட்டைக்குள் யாழ்ப்பாணத்தின் தலையில் கடற்புலிகள் பேரடி கொடுத்துள்ளனர். எதிர்பாராத வேளையில் எதிர்பாராத இடத்தில் இந்த அடி கொடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சீனன்குடாவுக்குள் கடற்படையின் வழங்கல் கப்பல், கடற்புலிகளால் அழிக்கப்பட்டு 28 நாட்களில் கடற்படைக்கு மற்றொரு பேரடி கொடுக்கப்பட்டுள்ளது.
கடற்புலிகள் தொடர்பில் சிங்களப் படைகள் வெளியிட்டு வரும் அறிக்கைகளின் உண்மைத்தன்மையை உணர்த்தும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது சிங்களக் கடற்படைக்கு இது ஒரு நெத்தியடி.

No comments: