Monday 23 June, 2008

ஈழத்தமிழர் விபரம் புரியாத தமிழக தரகர்கள்!

இந்திய அரசுக்கு எதிராக தமிழகக் கட்சிகள் ஒன்றுதிரள வேண்டும்: பழ.நெடுமாறன் வேண்டுகோள் [ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2008, 10:16 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழகக் கட்சிகள்
ஒன்றுதிரள வேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள்
விடுத்துள்ளார். இது தொடர்பில் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன், பாதுகாப்புத்துறைச் செயலாளர்
விஜய் சிங் ஆகியோர் திடீரென கொழும்புச் சென்றுள்ளனர்.
என்ன நோக்கத்துடன் இவர்கள் சென்றிருக்கிறார்கள் என்பது வெளியிடப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் பாதுகாப்புத்துறை ஆலோசகர் மற்றும் செயலாளர் ஆகியோர் இக்குழுவில்
சென்றிருப்பது இராணுவ உதவிகள் அளிப்பது சம்பந்தமாகப் பேசுவதற்காகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஏற்கெனவே நோர்வே சமரசத் தூதுவரை சிங்கள அரசு தன்னிச்சையாகத் திருப்பி அனுப்பியதைக் கண்டிக்கும் வகையில் ஐரோப்பிய
நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவி ஆகியவற்றினை நிறுத்தியுள்ளன.
இலங்கையில் நடைபெறும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை உலக நாடுகள் பலவும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
இந்நிலையில் இந்திய அரசு, சிறிலங்காவுக்கு அண்மையில் பெருமளவு நிதியுதவி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இப்போது
இராணுவ ரீதியான உதவிகள் அளிப்பதற்கு முன்வந்திருக்கிறது என்பதனை இக்குழுவினரின் கொழும்புப் பயணம் உறுதிசெய்துள்ளது.
தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளைத் தடுத்து நிறுத்திட தமிழகக் கட்சிகள்
அனைத்தும் ஓரணியாகத் திரளவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

அகதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது - கருணாநிதி வீரகேசரி நாளேடு 6/19/2008 10:03:04 PM -
அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி எச்சரித்துள்ளார்.
தீவிரவாத அமைப்புக்கள் தமிழ்நாட்டில் காலூன்ற எந்த வகையிலும் இடமளிக்காது, பாதுகாப்புப் படையினர் இரும்புக்கரம் கொண்டு
அடக்க வேண்டும் என்றும் கூறினார். சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மத்தியில் இன்று
உரையாற்றுகையிலேயே முதல்வர் கருணாநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் இரு நாள் மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
இந்த மாநாட்டுக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:
மக்களாட்சியில் நம்பிக்கையில்லாத சில தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைத் தமிழ்நாட்டில் வேரூன்ற வைத்து அமைதியைக்
குலைக்க முயல்வதாகத் தெரிகிறது. இத்தகைய தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற எவ்வகையிலும் இடம்கொடுத்திடாமல்
காவல்துறை இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நிலவிவரும் இனக்கலவரம்
காரணமாக தமிழ்நாட்டிற்கு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் நிலை தொடர்கிறது. 31.05.2008 அன்றைய நிலவரப்படி
தமிழ்நாட்டிலுள்ள 117 இலங்கை அகதிகள் முகாம்களில் 73 ஆயிரத்து 433 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர்.
அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களில் சிலர் பல்வேறு ஆவணங்களைச் சட்டத்திற்கெதிரான வழிகள் மூலம் பெற்று தமிழகத்தில்
சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாகத் தகவல்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இவற்றை பரிசீலித்து இந்தியக்குடி மகனாக அல்லாதவர் இவ்வுரிமைகளைப் பெற வழியில்லை என்பதை நீங்கள் உறுதி செய்திட வேண்டும்.

தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவு கேட்டு வேதனையுற்றேன்
தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் வீரகேசரி நாளேடு 6/17/2008 10:34:23 PM -
ஈழத்தின் தலைசிறந்த சைவத்தமிழ் அறிஞரும் சமய, சமூகத் தொண்டருமான சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் சமூக சேவகியாகத் திகழ்ந்த தங்கம்மா அப்பாக்குட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும்
வேதனை அடைந்தேன். தமிழ்ப் பண்டிதை என்று ஈழத் தமிழர்களால் அழைக்கப்பட்ட தங்கம்மா அப்பாக்குட்டி முறைப்படி தமிழ் கற்று
ஆசிரியையாக இருந்தவர். திருமணம் செய்து கொள்ளாமல் சமூக சேவகியாகவே வாழ்ந்தவர்.
நூலகம் ஒன்றை தொடங்கி சிறந்த நூல்கள் வெளிவர காரணமாக இருந்த அவரின் இழப்பு ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய
முடியாத இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் தமிழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவை தலையிடக் கூடாது என்று கூறுவதா?: சிறிலங்கா அமைச்சர் ரோகிதவை சாடுகிறது "தமிழோசை" நாளேடு
[வியாழக்கிழமை, 19 யூன் 2008, 05:37 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழகத்தோடு இரத்த சம்பந்தமுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது என்று புதுடில்லியிலேயே நின்று
உத்தரவிடும் பாணியில் சிறிலங்கா அரசாங்க அமைச்சர் ரோகித போகல்லாகம கருத்து தெரிவித்துள்ளமையை தமிழ்நாட்டில் இருந்து
வெளியாகும் "தமிழோசை" நாளேடு சாடியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணியை பதிப்பாளராகக் கொண்டு வெளியாகும் "தமிழோசை" நாளேட்டின் இன்றைய பதிப்பின் (19.06.08) தலையங்கம்:
வாழ்வுரிமை மற்றும் சமத்துவக்குடியுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைக் கோரிவரும் இலங்கைத் தமிழரை மிரட்டி அச்சுறுத்தி
ஒடுக்கும் நோக்கத்துடன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈழத்தில் மனம் போன போக்கில் குண்டுகளை வீசி, கொடூரமான போரை
ராஜபக்ச அரசின் படைகள் நடத்தி வருகின்றன.
ஏராளமான அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருவதோடு, வீடு வாசல்களை இழந்து, சொந்த மண்ணில் அநாதைகள் போலத் தவித்து
நிற்கிறார்கள். தாய்த் தமிழகத்துத் தமிழினம் தனது அங்கமான ஈழத்தமிழர்கள் நசுக்கப்படுவது கண்டு சொல்லொனாத வேதனையில் துடிப்பதையொட்டி,
இப்பிரச்சனையில் திட்டவட்டமான தீர்மானம் ஒன்றைத் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி டில்லிக்கு அனுப்பி வைத்தது.
முதல்வரே முன்னின்று கொண்டுவந்த இத்தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவை அளித்து, தங்களுடைய
உள்ளக்குமுறலை வெளிப்படுத்தின.
"இலங்கையில் போரை உடனடியாக நிறுத்தவும், அடுத்து அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்யவும்
ஈழப்பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்" என்று இத்தீர்மானம் டில்லிக்கு முறையீடு செய்தது. இதையடுத்து, அண்மையில் திருச்சிக்கு வந்திருந்த இலங்கைத் தமிழ் அமைச்சரும்- மலையக முன்னணித் தலைவருமான சந்திரசேகரன், "ஈழப்பிரச்சினையை ஒரு பார்வையாளரைப்போல இந்தியா அணுகாமல், இதில் நிரந்தரத் தீர்வு காண்பதற்கு வகை செய்ய நேரடியாகத் தலையிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதற்கான முழுத் தகுதியும் - உரிமையும் இந்தியாவுக்கே உண்டு" என்று கரிசனத்துடன் முறையீடு செய்திருக்கிறார்.
அதையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாலகுமாரனும் இதே பாணியில் இந்திய அரசுக்கு
வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
"இலங்கை இனச்சிக்கலைத் தீர்க்க இந்தியா தலையிடுவது அத்தியாவசியம். தமிழ் ஈழம் அமைந்தால் அது இந்தியாவுக்கு எதிரானதாக
இருக்காது" என்றும் நயந்த பாணியில் கூறியிருந்தார். இவ்வளவுக்கும் பிறகு, அண்மையில் டில்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கையும், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லகாம - இலங்கை இனப்பிரச்சினையில் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருக்கிறார்.
இப்பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் - தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்க்காணலில் - இராஜதந்திர நெறிமுறைகளைப் பற்றி கவலைப்படாமலும்,
மேட்டிமையான பாணியிலும் இப்பிரச்சினை குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து எவரையும் துணுக்குறச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது.
"இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிடக்கூடாது. அவ்வாறு தலையிடுவதை இலங்கை அரசு அனுமதிக்காது" என்றும்
கூறியிருக்கிறார்! அந்த அளவில் நின்றுகொள்ளாமல்,
"இனச்சிக்கல் என்பது எங்களின் உள்நாட்டு விவகாரமாகும்.
இதில் இந்தியா தலையிடுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
எங்களுடைய இந்த நிலையை இந்தியாவும் உணர்ந்துள்ளது. அதனால்தான், இந்தியாவிடமிருந்து இப்பிரச்சனையில் இதுவரை
எந்தவிதமான வற்புறுத்தலும் எங்களுக்கு வரவில்லை" என்று இறுமாந்த நிலையில் கூறியிருக்கிறார்.
அரசியல் ரீதியாக ஈழத்தமிழர் இலங்கையின் குடிமக்களே.
அதுமட்டுமல்ல - அவர்கள் அத்தீவின் ஆதி குடிமக்களும் கூட.
அதே சமயத்தில், தாய்த் தமிழினத்துடன் இரத்த சம்பந்தமுடையவர்கள்.
அவர்கள் நசுக்கப்படுவது கண்டு தாய்த்தமிழகம் கொதித்திருக்கிறது.
தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இப்பிரச்சினையில் ஈழத்தமிழர்கள் சார்பாக தலையிட வேண்டிய பொறுப்பிலிருந்து இந்திய
அரசு தப்பிக்க முடியாது.
உண்மைநிலை இப்படியிருக்க - "ஈழத் தமிழர் எங்கள் நாட்டுக் குடிமக்கள். அவர்களை எங்கள் அரசு எதுவும் செய்யும். அதைக்கேட்க
இந்தியா யார்?" என்பதே இலங்கை அமைச்சரின் தொனியாகத் தோற்றமளிக்கிறது!
அப்படியென்றால், ஈழப்பிரச்சனையில் கடந்த ஒன்பது ஆண்டுக்கும் மேலாக இந்திய அரசு கடைப்பிடித்து வரும் - அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசியக்கொள்கை என்னவாயிற்று? "சமத்துவக் குடியுரிமை - வாழ்வுரிமை - மொழி மற்றும் கலாசாரப் பாதுகாப்புரிமை போன்றவற்றோடு சுயமரியாதையுடன் ஈழத்தமிழர் வாழ்வதற்கு வகைசெய்யும் விதத்தில், கூட்டாட்சி அடிப்படையில் ஈழத்தமிழர் பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படவேண்டும்" என்பதே அந்த தேசியக் கொள்கையாகும். இக்கொள்கையை இலங்கை அரசிடம் வற்புறுத்திக் கூற வேண்டிய தார்மீகக் கடைமையை இந்தியா எப்படித் தட்டிக்கழிக்க முடியும்?
அதிலும் குறிப்பாக, பிரதமரைச் சந்தித்துப் பேசியபிறகு டில்லியிலேயே, "இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிடக்கூடாது"
என்று உத்தரவிடும் பாணியில் பேசக்கூடிய தைரியம் இலங்கை அமைச்சருக்கு வந்திருப்பதைக் கண்டு தமிழகம் குமுறுகிறது.
இலங்கைத் தமிழருக்கு நீதி கிடைக்குமாறு செய்வதில் இந்திய அரசுக்கு நிச்சயம் பங்குண்டு.
ஏனெனில், இதில் தாய்த் தமிழகம் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றது. இந்தக் கவலையை டில்லி உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், தமிழகத்தையும்- தமிழர்களையும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இந்திய அரசு கருதவில்லைப் போலும் என்ற
விரக்தி தமிழ் மக்களிடையே எழுவது தவிர்க்கமுடியாதது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

karurtoday said...

நண்பர்களே நானும் இணைய இதழ் ஒன்றை
நடத்தி வருகிறேன். உங்களின் கருத்துக்கள்
உள்ளத்து உணர்வுகளிலிருந்து ஊற்றெடுத்தவை
என்பதை நான் அறிகிறேன். இருநூறு ஆண்டுகால
தமிழரின் வரலாற்றில் பல இடங்களில்
தமிழன் உதைபட்டான். ஆனால் திருப்பி அடிக்க
எங்களால் முடியும் என காட்டியவர்கள்
ஈழத்து இளைஞர்கள்.தமிழன் வெல்வான்.ஈழம் மலரும்.