Sunday, 29 June 2008

இந்திய உயர்மட்டக் குழு - மகிந்த சந்திப்பில் நடந்தது என்ன?

இந்திய உயர்மட்டக் குழு - மகிந்த சந்திப்பில் நடந்தது என்ன? [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 12:34 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
இந்திய உயர்மட்டக் குழுவினரின் அண்மைய சிறிலங்காப் பயணத்தின் போது பல சூடான விடயங்கள் இடம்பெற்றிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. இது குறித்து தெரியவருவதாவது:
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினரின் சிறிலங்காவுக்கான பயணம் குறித்து
முதல் நாளான ஜூன் 18 ஆம் நாள் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக அரச தலைவர் செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டது.
அரச தலைவர் செயலகத்துக்கு இது குறித்து அறிவித்த இந்திய தூதுவர் அலோக் பிரசாத், உயர்மட்டக் குழுவினரின் வருகை அரச
தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் முக்கிய விடயங்கள் பற்றி பேசுவதற்காக என தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் இது குறித்து
ஊடகங்கள் உட்பட எவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சருக்கே இந்த விடயம் உயர்மட்டக் குழுவினர் கட்டுநாயக்கவில் வந்து இறங்கிய பின்னரே தெரியவந்தது.
இதனால், முற்பகல் 11:40 மணிக்கு கட்டுநாயக்கா வந்திறங்கிய இந்தக்குழுவினரை வரவேற்க சிறிலங்கா அரசு சார்பில் எவருமே
வானூர்தி நிலையத்துக்கு அனுப்பப்படவில்லை.
கட்டுநாயக்கவிலிருந்து சிறப்பு உலங்குவானூர்தியில் கொழும்புக்கு வந்த குழுவினர், தமது பயணம் இரண்டு நாட்கள் மட்டுமே என்று
வரையறுக்கப்பட்டிருந்ததால் உடனடியாகவே தமது சந்திப்புக்களை தொடங்கினர்.
முதலில் சிறிலங்காவின் 1)பாதுகாப்பு அமைச்சு ஆலோசகர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக
சுமார் இரண்டரை மணிநேரம் பேசினர்.
அதனைத் தொடர்ந்து அன்று பிற்பகல் 2)இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானைச் சந்தித்து மலையக
மக்கள் நலன் குறித்த விடயங்கள் பற்றியும் மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தேடுதல் என்ற பெயரிலான
படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது.
அடுத்த நாள் காலை சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் 3) ஈ.பி.டி.பி. குழுவின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடனான
சந்திப்பை மேற்கொண்ட குழுவினர் அடுத்த சந்திப்புக்கு தயாராகினர்.
4)மகிந்தவுடனான சந்திப்பு
சிறிலங்கா அரச தலைவருடனான முக்கியமான சந்திப்பு தொடங்கியது.
சந்திப்பில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அவரது செயலாளர் லலித் வீரதுங்க, பசில் ராஜபக்ச ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்திய அரசு முகம் கொடுக்கும் விடயங்கள் பற்றி ஆவலாக விசாரித்த மகிந்தவுக்கு சுருக்கமாக விடையளித்து விட்டு தாம் வந்த வந்த
நோக்கத்தின் பக்கம் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் பேச்சை திருப்பினார்.
இனப்பிரச்சினை விவகாரத்தில் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இந்திய மத்திய அரசை இந்த விடயத்தில்
தலையிடவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கியிருப்பதாகவும் -
சிறிலங்கா அரசின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு அரசின் பாரிய அழுத்தத்துக்கு இந்திய மத்திய அரசு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் - இதனால் இதற்கு மேல் தாம் மௌனமாக இருக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் நாராயணன் கூறினார்.
சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடார்கள் மூன்றை கொள்வளவு செய்துள்ள சிறிலங்கா இராணுவம் அவற்றை யாழ். குடாநாட்டில் சீனாவின் உதவியுடன் பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு பாரிய அச்சறுத்தலான விடயம் என்று தெரிவித்த நாராயணன் -
சீனாவிடமிருந்து சிறிலங்கா அரசு கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ள ஜினாக் - 7 தாக்குதல் வானூர்தி ஜே.வை. - 1 வானூர்தி உட்பட
புதிய ரக ஏவுகணைகள், போர் டாங்கிகள், வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை அடங்கிய நீண்ட பட்டியலை மகிந்தவின் முன்
தூக்கிப்போட்டார்.
அத்துடன் நிற்காமல், சிறிலங்காப் படையினர் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்குச் செல்வதும் அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் சிறிலங்காவுக்க வந்து செல்வதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் என்றும் -
இனிமேல் பாகிஸ்தான் அதிகாரிகள் எவர் சிறிலங்காவுக்கு வருவதாக இருந்தாலும் அவர்களின் வருகை குறித்து சிறிலங்கா முன்கூட்டியே இந்தியாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் நாராயணன் கடும் தொனியில் கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட மகிந்த, விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றமையால் அவற்றை
அழித்தொழிக்க தமக்கு ஆயுதங்கள் மற்றும் படை உபகரண பலம் தேவை என்றும் இந்தியா அதற்கு உதவி செய்யாததாலேயே தமக்கு
உதவி செய்ய முன்வந்துள்ள சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் செல்வதாக கூறியதுடன் தமது படைகள் கிழக்கை மீட்டு விட்டதாகவும்
வடக்கிலும் பாரிய வெற்றிகளை புரிந்து வருதாகவும் தமது படையினர் பற்றி பெருமையாக கூறினார்.
சீன, பாகிஸ்தான் ஆயுதக் கொள்வனவு நிறுத்தப்பட வேண்டும்
இதற்குப் பதிலளித்த நாராயணன், தற்காப்பு ஆயுதங்களையே சிறிலங்காவுக்கு இந்தியா வழங்குமே தவிர தாக்குதல் ஆயுதங்களை தராது என்று தெரிவித்தார்.
"இந்திய மத்திய அரசு பாரிய அரசியல் அழுத்தங்களுக்க முகம்கொடுத்த போதும் இரு பரிமாண ராடார்களை சிறிலங்காவுக்கு வழங்கியது. சிறிலங்கா இராணுவத்துக்கான முக்கிய பயிற்சிகளை வழங்கியது. விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை கண்டுபிடித்து அழிக்க உதவியதுடன் அவர்களின் ஆயுத மார்க்கங்களை முடக்க சிறிலங்காவுக்கு துணை புரிந்தது.
"ஆனால், இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வை முன்வைக்குமாறு சிறிலங்காவை வலியுறுத்தக்கோரி இந்தியாவின் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்ட வண்ணமே உள்ளது. இதனை சிறிலங்கா அரசுக்கு எடுத்துக்கூறினால், தீர்வை முன்வைப்பதற்கு - பல்வேறு தருணங்களில் - பலதரப்பட்ட கால அவகாசங்களைத்தான் சிறிலங்கா அரசு முன்வைத்தது. இன்றைய நிலையில்,
இனப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்கு சிறிலங்கா அரசு கோரும் கால அவகாசம் என்பது நகைச்சுவையாகி விட்டது" என்று நாராயணன் கூறினார்.
அத்துடன் வடக்கு - கிழக்கு மக்களுக்கு விமோசனமளிக்கக்கூடிய ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா அரசு
உடனடியாக முன்வைக்க வேண்டும் என்றும் அது சிறிலங்கா அரசு அமைத்த அனைத்துக் கட்சி மாநாட்டின் இடைக்கால திட்ட வரைவை
ஒட்டியதாக அமையவேண்டும்
என்றும் நாராயணன் அழுத்தமாகக் கூறினார். இதற்குப் பதிலளித்த மகிந்த, கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டு மாகாண சபை தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டியது போன்று இன்னும் ஏழு, எட்டு மாதங்களில் வடக்கையும் மீட்டுவிட்டு தமது அரசு இறுதித்தீர்வை முன்வைக்கும் என்றார்.
ஆறு மாதங்களில் வடக்குப் போர் முடியும் என்பது பொய்க்கதை
இதற்குப் பதிலளித்த நாரயணன்,
"சிறிலங்கா அரசும் படைகளும் கூறுவதைப்போன்று வடக்கை ஆறு, ஏழு மாதங்களில் விடுதலைப் புலிகளிடமிருந்து சிறிலங்கா அரச
படைகளால் கைப்பற்றிவிட முடியாது. எமது புலனாய்வுத் தகவல்கள் அதனை உறுதி செய்திருக்கின்றன.
"ஆகவே, சிறிலங்கா அரசு தனது தீர்வுத்திட்டத்தை முன்வைக்குமென ஆறு, ஏழு மாதங்கள் இந்தியாவால் எதிர்பார்த்துக்கொண்டிருக்க
முடியாது. மூன்று மாதங்களுக்குள் அனைத்து கட்சி மாநாடு ஊடாக இறுத்தீர்வு திட்டம் குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும்.
அத்துடன், சீனா பாகிஸ்தான் ஆகியவற்றிடமிருந்து சிறிலங்கா மேற்கொள்ளும் ஆயுதக்கொள்வனவை உடனடியாக நிறுத்த வேண்டும்.
தேவையான ஆயுதங்களை இந்தியா வழங்கும்" என்று நறுக்காக கூறினார்.
பாதுகாப்பு ஒப்பந்தம் சாத்தியமில்லை இதனை தனக்கு சார்பாக மாற்றிக்கொண்ட மகிந்த – இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்றால் கைவிடப்பட்ட இந்திய - சிறிலங்கா பாதுகாப்பு ஓப்பந்தத்தை ஏன் நாம் மீண்டும் ஆராய்ந்து அதில் கையெழுத்திடக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
தற்போது இந்திய மத்திய அரசு முகம் கொடுத்து வரும் அழுத்தத்துக்கு மத்தியில் பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றிப் பேசமுடியாது என்று
நாராயணன் பதிலளித்தார்.
அப்படியானால் இந்திய அரசுடன் சிறிலங்கா எப்படி நம்பிக்கையை கட்டியெழுப்புவது என்று மகிந்த கேட்டார்.
அதற்குப் பதிலளித்த நாராயணன், நம்பிக்கையின் அடிப்படையில் சிறிலங்காவுடன் உறவு வைத்துக்கொள்ள இந்தியா தயாராகவுள்ளது.
அதற்கு சிறிலங்கா தயார் இல்லை என்றால் அதற்கேற்றவாறு இந்தியாவும் செயற்படும் என்று காட்டமாக கூறினார்.
சார்க் மாநாட்டு பாதுகாப்பு
சார்க் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் வருகை தருவது தொடர்பாக அடுத்து பேசிய இந்திய உயர்மட்டக்குழுவினர் கொழும்பின் தற்போதைய நிலையில் பாதுகாப்பற்ற பிரதேசம் என்ற விடயத்தை தெளிவாக மகிந்தவுக்கு எடுத்துக்கூறினர்.
அத்துடன் கடந்த தடவை இந்தியப் பிரதமர் கொழும்பு வந்த சமயம் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்தவரே இந்தியப் பிரதமரை
தாக்கிய சம்பவம் இடம்பெற்றதால், இந்தியப் பிரதமர் இம்முறை பயணம் செய்வதனால் அதற்கு இந்தியா முன்வைக்கும் பாதுகாப்பு
நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் உயர்மட்டக் குழுவினர் மகிந்தவிடம் தெரிவித்தனர்.
தமக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் படி சார்க் மாநாடு நடைபெறும் சமயம் கொழும்பில் தாக்குதல்களை நடத்த புலிகள்
திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த உயர்மட்டக் குழுவினர், இந்தியப் பிரதமரின் வருகையின் பொருட்டு தமது- இந்தியாவின் - பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறிலங்கா ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்றும் அவர்கள் அழுத்தமாக கூறினர்.
அத்துடன் இந்தியப் பிரதமர் சிறிலங்காவுக்கு வருவதாக இருந்தால் தாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மகிந்த ஏற்றுக்கொண்ட நிபந்தனைகள்
அவர்கள் முன்வைத்த நிபந்தனைகள்
ஓன்று: மாநாடு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே கொழும்புக்கு வரும் இந்தியாவின் சிறப்பு அதிரடிப் படையினர் மாநாடு
நடைபெறும் மண்டபம் மற்றும் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் தங்கும் தங்கங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பளிப்பர்.
இரண்டு: இந்த பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக இந்தியாவிலிருந்து குண்டு துளைக்காத வாகனங்கள், சிறப்பு உலங்குவானூர்திகள், தாக்குதல்
வானூர்தி ஆகியவை கொழும்புக்கு கொண்டு வரப்படும்
மூன்று: புலிகளின் வான் தாக்குதல்களை முன்கூட்டியே அறியும் வகையில் கொழும்பில் சில இடங்களில் இந்திய வான்படையின்
கண்காணிப்பின் கீழ் ராடார்கள் பொருத்தப்படும்.

நான்கு: கொழும்பை அண்டிய கடல்பகுதிகளில் இந்திய கடற்படையினர் தமது அதிவேக அதிரடிப் படகுகளில் பாதுகாப்பு சுற்றுக்காவல் கடமையில் ஈடுபடுபவர்.
ஐந்து: இனப்பிரச்சினை தொடர்பான சிறிலங்கா அரசின் அரசியல் தீர்வுத் திட்டத்தை அரசின் கொள்கையாக - சார்க் மாநாட்டுக்கு முன்னர்
மகிந்த இந்தியாவுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இல்லேயேல், சிறிலங்கா அரசுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமரின் சார்க் மாநாட்டு உரை அமையும்.
தனது அரசுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடிய இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் இவை தொடர்பில் இந்திய உயர்மட்டக் குழுவினருடன் பல தடவைகள் சமரசம் செய்ய முயற்சித்தும் அதற்கு இணங்க மறுத்து தமது நிலைப்பாட்டை அவர்கள் மாற்றிக்கொள்ளததால், இறுதியில் அனைத்து நிபந்தனைகளுக்கும் மகிந்த பணிந்தார்.
கறுப்புப் பூனைகளுடன் சிறிலங்கா செல்லும் இந்தியப் பிரதமர் [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:30 மு.ப ஈழம்] [பி.கெளரி]
சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது
பாதுகாப்புக்கு கறுப்புப் பூனைப் படையை அழைத்துச் செல்லவுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. இது தொடர்பில் உயர்மட்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சார்க் மாநாட்டை முன்னிட்டு சிறிலங்காவுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு என சிறப்பாக
அமைக்கப்பட்ட கறுப்புப் பூனை படையினரை அழைத்துச் செல்லவுள்ளார்.
சிறிலங்காவில் மன்மோகன் சிங் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவருக்கான பாதுகாப்பை இந்தப் படைப்பிரிவு வழங்கும்.
அதி சிறப்புப் பயிற்சி பெற்ற இந்தப் படையினர் மன்மோகன் சிங்குக்கான பாதுகாப்புக்களை வழங்குவதுடன் அவரின் பாதுகாப்புக்கு என
இந்திய அரசு குண்டு துளைக்காத வாகனம் மற்றும் உலங்குவானூர்தி என்பனவற்றையும் சிறிலங்காவுக்கு அனுப்பவுள்ளது.
இவை தவிர சிறிலங்காவின் கடற்பரப்பில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு கடற்படை அதிகாரிகளை நியமிக்கவும்
இந்திய அரசு தீர்மானித்துள்ளது.
பிரதமருக்கு பாதுகாப்பை வழங்கும் கறுப்பு பூனைப் படை தமது சிறப்பு ஆயுதங்களையும், வாகனங்களையும் தம்முடன் எடுத்துச்
செல்வார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை மேற்கொள்ள சிறிலங்கா சென்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை
கடற்படையைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதனை இந்தியா கருத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும் ஆப்கானிஸ்தான் பிரதமர் ஹமீட் கார்சை தனக்கு என பிரத்தியேக
பாதுகாப்புப் பிரிவை அழைத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பு: அழுத்தங்கள் ENB
நன்றி: புதினம் இணையதளம்

No comments: