Thursday, 17 July 2008

பொட்டம்மானை பணயம் கோரும் நடேசனின் உற்ற நண்பன் இந்தியா.

பொட்டம்மானை பணயம் கோரும் நடேசனின் உற்ற நண்பன் இந்தியா.
____________________________________
கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு பொட்டம்மானை பணயமாக கேட்டது: "சுடரொளி" வார ஏடு தகவல்
[வெள்ளிக்கிழமை, 11 யூலை 2008, 06:15 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு கடந்த மாதம் சென்ற இந்திய உயர் அதிகாரிகள் குழு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிராயச்சித்தமாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானை தமிழர் தரப்பு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியாதாக "சுடரொளி" வார ஏடு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தனுடனான சந்திப்பின் போதே இந்திய உயர் அதிகாரிகள் குழு மேற்படி கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பொட்டம்மானை பணயம் கேட்கும் இந்தியா" என்ற தலைப்பில் "சுடரொளி" வார ஏட்டின் பிந்திய பதிப்பில் இது பற்றி மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்திய உயர்மட்டக் குழுவினர், கடந்த மாதம் மூன்றாம் வாரம் திடுதிப்பெனக் கொழும்புக்கு வந்திருந்த சமயம், தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனை சுமார் ஒன்றேகால் மணி நேரம் சந்தித்துப் பேசியிருந்தது.
அந்தச் சந்திப்பின்போது இடம்பெற்றதை சூடான வாய்த்தர்க்கம் என்று கூறினால் அது மிகையாகாது.
தமது இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் பாரதம் மேற்கொண்ட குயுக்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் விசனத்தையும், ஆதங்கத்தையும், எரிச்சலையும் அங்கு தாம் ஒருவராகத் தனித்து நின்று வார்த்தைகளில் வெளிப்படையாக - அப்பட்டமாக - அள்ளிக்கொட்டி, இந்திய உயரதிகாரிகள் தரப்பின் கடுஞ்சீற்றத்துக்கு ஆளானார் சம்பந்தர்.
இந்தியத் தரப்பில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்தான் சம்பந்தரோடு வாய்த்தர்க்கத்தில் அதிகம் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் சம்பந்தரின் சரமாரியான குற்றச்சாட்டுக்களினால் ஈடாடிப்போன நாராயணன் -
"எங்கள் நாட்டின் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு தலைவரை (ராஜீவ் காந்தியை) நீங்கள் படுகொலை செய்துவிட்டு, அந்த விவகாரத்தை வெகு "சிம்பிளாக" ஒதுக்கி வைத்துவிட்டு ஈழத் தமிழர்களுக்காக நியாயம் செய்யுங்கள் என்று நீங்கள் கேட்பதில் அர்த்தமில்லை. ராஜீவ் காந்தி படுகொலைக்காக உரியவர் யாரேனும் தண்டிக்கப்படுவதுதான் சரி. அந்தப் பிரயச்சித்தத்தை நீங்கள் செய்தால்தான் இந்தியா உங்களுக்காகத் தலையிட்டு எதையும் செய்யமுடியும்" - என்று குறிப்பிட்டு சம்பந்தரின் வாயை அடக்க முயற்சித்தார். தொடர்ந்து அவர் ஒரு குண்டையும் தூக்கிப்போட்டார்.
"சரி. உங்கள் விடுதலைப் போராட்ட அணியின் தலைவர் பிரபாகரனை விட்டு விடுங்கள். அந்தப் படுகொலைக்கு வியூகம் வகுத்து, கட்டளைகள் வழங்கிய பொட்டம்மானவாது தண்டிக்கப்பட்டாக வேண்டும். அதற்காக குறைந்தபட்சம் அவரையாவது இந்தியாவிடம் கையளிக்க உங்கள் பக்கத்தினர் தயாரா? என்று அதிரடிக்கேள்வியைத் தூக்கிப் போட்டார் நாராயணன்.
திடுக்கிட்டுப் பதில் கூறமுடியாத சம்பந்தர் நேரடியாக இக்கேள்விக்குப் பதிலேதும் கொடுக்காமல் சமாளித்தார்.
இந்திய உயரதிகாரிகள் தரப்பைப் பொறுத்த வரை இக்கேள்விக்குச் சம்பந்தர் உடனடியாகத் தம்பாட்டில் விடை ஏதும் தரக்கூடிய நிலையில் இல்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இந்தத் தகவலை சம்பந்தர் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எடுத்துச்சென்று, புலிகளின் தலைமையின் பிரதிபலிப்பை தமக்குத் தெரியப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் அதிகம் இருந்தது.
ஆனால், இந்தக்கேள்வியை அந்த இடத்தில் காதில் வாங்கியதோ: இந்த விடயத்தில் வேறு எதையும் சம்பந்தர் மேற்கொண்டு செய்யவில்லை என்று தெரிகின்றது. இதை ஒரு முக்கிய விவகாரமாக அவர் புலிகளின் தலைமைக்கு எடுத்துச்சென்று தெரிவித்தார் என்ற தகவல் இல்லை. அப்படி எடுத்துச்சென்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதில் பயன் ஏதுமில்லை என்று கருதி அதனை அப்படியே அவர் விட்டு விட்டிருக்கலாம்.
ஆனால், புலிகளுடன் இந்தியா எதிர்காலத்தில் இணங்கிப் போவதற்குக் குறைந்த பட்சம் ராஜீவ் காந்தி படுகொலை விவகாரத்தில் இந்தியத் தரப்பினால் குற்றவாளியாகக் கருதப்படும் பொட்டம்மானையாவது புலிகள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை இந்தியாவின் தற்போதைய அதிகாரவர்க்கத்தின் எதிர்பார்ப்பு, நிபந்தனை என்ற தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புலிகளின் தலைமைக்குத் தெரியப்படுத்தினாரா? அவர்களின் பிரதிபலிப்பு என்ன? போன்ற மேலதிக விடயங்களை அறிந்து கொள்வதில் இந்தியத் தரப்பு இன்னும் வெகு எதிர்பார்ப்போடு இருப்பதை உறுதி செய்ய முடிகின்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை ஏமாற்றும் சிங்கள தேசத்தை உதறிவிட்டு ஈழத்தமிழரை இந்தியா விரைவில் புரிந்து கொள்ளும்: பா.நடேசன்
[வெள்ளிக்கிழமை, 11 யூலை 2008, 02:20 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா அரசு இந்தியாவின் உற்ற நண்பன் அல்ல. அது பல தடவைகள் இந்தியாவை ஏமாற்றியுள்ளது. ஆகவே, இந்தியா தனது உற்ற நண்பன் யார் என்று தெரிந்து கூட்டு வைக்கவேண்டும். அந்த வகையில், அது ஈழத்தமிழர்களது பிரச்சினையை நிச்சயம் - விரைவில் - புரிந்துகொள்ளும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியிலிருந்து ஒளிபரப்பாகும் "ரைம்ஸ் நெள" தொலைக்காட்சிக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முழு விபரம்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி அண்மையில் தனது தந்தையின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைத செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை சென்று நேரில் சந்தித்திருக்கிறாரே. இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் கருத்து என்ன?
இது முற்று முழுதாக மனிதாபிமான அடிப்படையில் இடம்பெற்ற பயணம். வேறொன்றுமில்லை.
நளினியின் விடுதலை தொடர்பான பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளிவந்தவண்முள்ளன. நளினி அவ்வாறு விடுதலை செய்யப்பட்டால், அது ராஜீவ் காந்தி கொலை விவகாரத்திலிருந்து வெளிவந்து, ஈழத்தழிழர் விவகாரம் தொடர்பான புதிய புறச்சூழலை உருவாக்குவதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள சமிக்ஞை என்று விடுதலைப் புலிகள் கருதுகிறார்களா?
இந்தியாவின் மத்திய அரசும் அதன் தீர்மானிக்கும் சக்திகளும் எமது மக்களின் நியாயமான அபிலாசைகளையும் சுதந்திர போராட்டத்தையும் அங்கீகரிக்கும் என்று நாம் திடமாக நம்புகிறோம்.
அப்படியானால், நளினியின் விடுதலை நீங்கள் கூறுவது போல், இந்தியாவின் மாற்றத்தை கோடிகாட்டும் அல்லது புதிய புறச்சூழ்நிலைக்கான ஆரம்பமாக அமையும் என்று கூறுகின்றீர்களா?
ஆம். அப்படித்தான் நான் உணர்கிறேன்.
இந்தியாவுக்கு அண்மையில் பயணம் செய்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, இந்தியாவில் சிறிலங்காப் படைகளுக்கு பயிற்சி அளிப்பது உட்பட சில இராணுவ இணக்கப்பாடுகளை எட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
எமது மக்களின் விடுதலைக்காக நாங்கள், இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசுக்கு எதிராக போராடி வருகிறோம்.
சிறிலங்கா அரசு எப்போதுமே இந்தியாவின் நலனுக்கு எதிராகவே செயற்பட்டு வருகிறது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.
அதன் தொடர்ச்சியாக, தற்போது மகிந்த அரசு இந்தியாவை ஏமாற்றப்போகிறது.
ஆகவே, இந்தியாதான் தனது கூட்டு தொடர்பில் முடிவு செய்யவேண்டும்.
இந்தியா இது விடயத்தில் பழைய பிழையை விடாது என்று நாம் நம்புகிறோம்.
அப்படியானால், இந்த இராணுவ இணக்கப்பாடுகள் குறித்து தமிழ்நாட்டு தலைவர்கள் ஏன் தொடர்ச்சியாக இந்திய மத்திய அரசை விமர்சித்து வருகிறார்கள்? இவர்கள் பற்றி உங்களது கருத்து என்ன?
ஆம். ஈழத்தில் இருக்கின்ற தமது சகோதர சகோதரிகளின் விடுதலைக்கும் அவர்களின் நியாயமான போராட்டத்துக்கும் இந்திய அரசு உதவிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசு தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இனச்சுத்திகரிப்பை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசுக்கு இந்தியா அரசு ஆதரவளிப்பது குறித்து அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஆகவே, இந்திய அரசு தனது உண்மையான நண்பன் யார் என்று அறிந்துகொள்வது மிக முக்கியமானது.

No comments: