Monday, 28 July 2008

சார்க்: மக்கள் விரோத மாநாடு

தலைநகரின் மூலைமுடுக்குகள் உட்பட எங்கும் படையினர், பொலிஸார் குவிப்பு [28 - July - 2008]
* விசேட பாதுகாப்பு நடவடிக்கை ஒத்திகையுடன் ஆரம்பம் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) 15 ஆவது உச்சி மாநாட்டிற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட விசேட பாதுகாப்புத் திட்டத்திற்கான ஒத்திகை நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடத்தப்பட்டதுடன் அந்த நடைமுறைகள் உடனடியாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டன.
அடுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறவிருக்கும் உச்சி மாநாட்டிற்கு முன்பாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகரா தெரிவித்திருக்கிறார். காலிமுக சுற்றுவட்டத்திலிருந்து பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் மற்றும் பாராளுமன்றம் வரையுள்ள வீதிகளில் இந்தப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறையிலிருக்கும். கொழும்பு, கோட்டை, கொள்ளுப்பிட்டி, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம், கோட்டே
பகுதிகள் கடுமையான பந்தோபஸ்துக்கு உட்பட்டிருக்கும் இதேவேளை, நேற்று பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை கொழும்பு
கட்டுநாயக்க வீதியில் மற்றொரு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டது. அந்த பிரதேசத்தில் வாகனங்கள் வேறு
வழியை பயன்படுத்துமாறு கேட்கப்பட்டது.
தெற்காசியத் தலைவர்கள் எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பில் ஒன்றுகூடவுள்ளதை முன்னிட்டு ஏற்கெனவே
தீவிர பாதுகாப்புக்குட்பட்டிருந்த தலை நகர் கொழும்பு முன்னொருபோதுமில்லாத அளவுக்கு கடுமையான கட்டுக்காவல்களுடன்
கூடிய நகரமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காட்சியளித்தது.
இந்தவாரம் கொழும்பின் வர்த்தக நிலையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டிருப்பதுடன் முக்கிய வீதிகளும் மூடப்படவுள்ளன. சார்க்
உச்சிமாநாடு இடம்பெறும் தினங்களும் இந்த வாரமும் முப்படையினருடன் 19 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்படவுள்ளனர்.
ஏற்கெனவே 12 ஆயிரம் பொலிஸார் நகரத்தின் மூலை முடுக்குகள் தோறும் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வெளியாருக்கு ஹோட்டல்களில் அனுமதி வழங்கப்படவில்லை.
சிறந்த பாதுகாப்பு மட்டும் போதியதல்ல, அதிஉச்சமட்ட பாதுகாப்பு அவசியமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித
போகொல்லாகம கூறியுள்ளதுடன் சார்க் உச்சி மாநாட்டுக்கு வருகைதரும் தலைவர்களுக்கு கடுமையான பாதுகாப்பு
வழங்கப்படுமென அவர் உறுதியளித்திருக்கிறார்.
சார்க் உச்சி மாநாட்டுக்கான அதிஉச்சப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநாட்டை நடத்தும் இலங்கை மேற்கொண்டிருக்கின்ற போதும்,
மாநாட்டில் பங்குபற்றும் சில தலைவர்கள் தமது சொந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களே மேற்கொண்டுள்ளனர்.
புதுடில்லி இலங்கைக்கு யுத்தக் கப்பல்களை அனுப்புகின்றது. விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றால் பிரதான விமான நிலையம்
மூடப்படும் நிலைமை ஏற்பட்டால் தலைவர்களை வெளியேற்றுவதற்குரிய முன்னேற்பாடாகவே இந்தியா யுத்தக் கப்பல்களை
அனுப்புகின்றது.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருகை தரும்போது ஆயிரம் பாதுகாப்பு படைவீரர்களை தனது சொந்தப் பாதுகாப்புக்கென
அழைத்து வரவுள்ளார்.
ஹெலிகொப்டர்கள், குண்டு துளைக்காத வாகனங்களும் இந்தியப் பிரதமருக்காக கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக
இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் ஹர்சாயும், பாகிஸ்தான் பிரதமர் சிலானியும் வழமையிலும் பார்க்க
அதிகளவிலான பாதுகாப்புப் படையணியை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பங்களாதேஷ், பூட்டான்,
மாலைதீவு, நேபாளத் தலைவர்களும் மேலதிகமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடனேயே கொழும்புக்கு வருகைதர இருப்பதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்சி மாநாடு இடம்பெறும் வேளையிலும் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் கைவிடப்படாதென வெளிவிவகார
அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கூறியுள்ளார். ஒருதலைப்பட்சமானதோ, இருதலைப்பட்சமானதோ போர்நிறுத்தம் எதுவும்
இல்லை, பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் எமது நடவடிக்கை தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க உச்சிமாநாட்டுக்கு புறம்பாக தெற்காசியத் தலைவர்களின் இருதரப்பு சந்திப்புகள் பாராளுமன்ற
கட்டிடத்தொகுதியிலேயே இடம்பெறுமென இராஜதந்திரிகள் தெரிவித்தனர். உச்சி மாநாட்டுக்கு புறம்பாக தலைவர்களின்
இச்சந்திப்புகள் நகரப்பகுதிக்கு அப்பால் இடம்பெறுவது வழமையான நடைமுறையாகும். ஆனால், இம்முறை கடுமையான
பாதுகாப்பு அரண் சூழ்ந்த பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்குள்ளேயே தலைவர்கள் இரு தரப்பு சந்திப்புகளை
மேற்கொள்ளவுள்ளனர்.


சிறிலங்காவுக்கு அண்மையாக இந்திய போர்க் கப்பல்கள்

[திங்கட்கிழமை, 28 யூலை 2008, 05:39 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்கா கடற்பரப்புக்கு அண்மையாக இந்திய கடற்படையின் இரு போர் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக பாதுகாப்பு
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்திய கடற்படையின் போர் கப்பல்களான ஐஎன்எஸ் ரண்வீர், ஐஎன்எஸ் மைசூர் ஆகியன சிறிலங்கா கடற்பிரதேசத்திற்கு
அண்மையாக நங்கூரமிட்டு நிற்கின்றன.
கொழும்பில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளின் பாதுகாப்பு
கருதியே இக்கப்பல்கள் சிறிலங்காவுக்கு அண்மையாக நகர்த்தப்பட்டுள்ளன.
இந்திய கப்பல்கள் சிறிலங்கா கடற்பிரதேசத்திற்கு அண்மையாக காவல் கடமைகளில் ஈடுபட்டுள்ள போதும், சிறிலங்கா
கடற்படையினர் சிறிலங்கா கடற்பரப்பில் காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மிகவும் அவசரமான நிலமைகளிலேயே இந்திய கடற்படையினர் பாதுகாப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் சுற்றுக்காவல் படகுகள் மற்றும் அதிவேக தாக்குதல் படகுகள் என்பன பாதுகாப்பில் ஈடுபட்டு
வருகின்றன.
சார்க் உச்சி மாநாடு நிறைவுபெறும் வரை அவை காவலில் ஈடுபட்டுவரும் என தெரிவித்துள்ளன.
ஐஎன்எஸ் மைசூர் போர்க்கப்பல் டில்லி-வகையை (Delhi-class destroyer) சேர்ந்த நாசகாரி கப்பலாகும்.
6,900 தொன் எடை கொண்ட இக்கப்பல் 360 சிப்பந்திகள் மற்றும் படையினரைக் கொண்டது. அணுசக்தி, இராசாயண, உயிரியல்
ஆயுதங்களின் தாக்குதல் சூழ்நிலைகளை இக்கப்பல் சமாளிக்கும் தன்மை கொண்டது.
ஐஎன்எஸ் ரண்வீர் போர் கப்பல் ராய்புட் வகையை சேர்ந்தது (Rajput-class destroyer) நாசகாரி கப்பலாகும்.
இக்கப்பலில் சீ கிங் மற்றும் செல்ரக் ரக உலங்குவானூர்திகள் தரித்து நிற்கக்கூடியவை.
இந்தியாவின் தமிழ்நாட்டின் கரையோரத்தின் ராம்நாட் பகுதியில் உள்ள படைத்தளங்களும் உச்ச விழிப்பு நிலையில்
வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய கடற்படையினரின் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சிறிலங்கா கடற்படையினரும் தமது கடல்
கண்காணிப்புக்களை பலப்படுத்தி உள்ளனர்.
சிறிலங்கா கடற்படையின் கப்பல் தொகுதியில் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்கள், அதிவேக தாக்குதல் டோரா படகுகள்,
உட்கரையோர நீருந்து விசைப்படகுகள், அதிவேக பீரங்கி படகுகள் என்பவற்றுடன் புதிதாக உருவாக்கப்பட்ட விரைவு நடவடிக்கை
படகு தாக்குதல் ஸ்குவாட்ரன் படையினரும் அடங்கியுள்ளதாக கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நடவடிக்கை படகு தாக்குதல் ஸ்குவாட்ரன் படையினரின் இரண்டு குழுவினர் நீரேரிகளிலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு குழுவிலும் ஐந்து படகுகளைக் கொண்ட இந்த குழுவினர் தியவன்னா ஓயா மற்றும் பைரா வாவிகளில் காவலில்
ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: