இடம்பெயரும் மக்களின் அவலம்
[16 - August - 2008]
* மனிதாபிமான உதவியை பெற இடமளிக்க வேண்டும்
* சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்
வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு
செல்வதற்கும் தேவையான மனிதாபிமான உதவிகளை பெற்றுக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை நேற்று முன்தினம் வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளது. அடிப்படைத் தேவைகளுக்காக இந்த மக்கள் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். இடையூறான விதத்தில் புலிகள் அவர்களை வைத்திருப்பதுடன், அவர்கள் தமக்குரிய அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு போதியளவான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லையெனவும் சர்வதேச மன்னிப்பு சபையின் இலங்கை தொடர்பான ஆய்வாளர் ஜொலந்த போஸ்ரர் கூறியுள்ளார்.
அரச படையினர் மேற்கொண்டுவரும் விமானக் குண்டுவீச்சுக்கள், ஷெல் தாக்குதல்களால் கடந்த மே மாதத்திற்குப் பின்னர் 70
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில்
இடம்பெயர்ந்திருக்கின்றனர்.
இந்த இடம்பெயர்ந்த குடும்பங்களில் மூன்றிலொரு பகுதியினர் திறந்தவெளிகளில் உள்ளனர். தங்கியிருக்க புகலிடமின்றி தவிக்கும்
இவர்களில் பலர் உணவையோ, தற்காலிக தங்குமிடங்களையோ, எரிபொருளையோ பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை
காணப்படுகின்றது. ஓமந்தைக்கப்பால் பொருட்களை கொண்டு செல்லக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால் பொருட்களை
பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் குடும்பங்களில் பலபல தடவைகள் இடம்பெயர்ந்தவையாகும்.
வன்னியில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகள்
சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
மேலதிகமாக மலசலகூடங்களை நிர்மாணிக்க சிமெந்து இல்லை. இதனால், திறந்தவெளிகளிலேயே இயற்கை கடன்களை
நிறைவேற்றுகின்றனர். அத்துடன், பெண்கள், சிறுமிகள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறியவர்களுக்கு அரசு ஏற்படுத்திக் கொடுத்த தற்காலிக
தங்குமிடம் தடுப்பு முகாம் போன்றே உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபைக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. மன்னார்
கள்ளிமோட்டை முகாமிலுள்ள 200 இற்கும் அதிகமான குடும்பங்கள் படையினரிடம் "பாஸ்' பெறாமல் வெளியே சென்றுவர
முடியாது.
இராணுவ நோக்கங்களை முன்னெடுப்பதற்காக பல்லாயிரக் கணக்கான சாதாரண மக்களின் உயிர்களை ஆபத்தான நிலைக்கு
மீண்டும் இருதரப்பும் கொண்டு சென்றுள்ளதாக ஜொலந்த போஸ்ரர் கூறியுள்ளார்.
சுயாதீனமான சர்வதேச கண்காணிப்பாளர்கள் இல்லாமையால் இலங்கைப் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத
நிலைமை காணப்படுகின்றது. அத்துடன், துஷ்பிரயோகம் தொடர்பான நீண்ட பதிவுகளுடன் இரு தரப்பினரினதும் தயவிலேயே இலங்கை மக்கள் இருக்க வேண்டிய நிலைமை உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
* யுத்த தேவைக்காக மக்களை ஆபத்தான நிலைக்கு தள்ள வேண்டாம்
* தேசிய சமாதானப் பேரவை வேண்டுகோள் அவசர யுத்தத்தேவைகளுக்காக பொதுமக்களின் நலன்களை ஆபத்தான நிலைக்குகொண்டுசெல்லக்கூடாதென வலியுறுத்தியிருக்கும் தேசிய சமாதானப் பேரவை, எந்தவொருசூழ்நிலையிலும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
வன்னியில் தத்தமது கிராமங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் இடம்பெயர்ந்திருக்கும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்களின்
நிலைமை தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே தேசிய சமாதானப் பேரவை மேற்கண்ட
வலியுறுத்தலை விடுத்துள்ளது.
பேரவையின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் இப்போது யுத்தகளமாக மாறியுள்ளன. அங்கு பொதுமக்கள் இடத்துக்கிடம்
இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இடம்பெயர்வோர் தொகை அதிகரித்து வருவதால் அவர்களுக்கான அவசர தங்குமிடம்,
குடிநீர், சுகாதார வசதிகளை நிறைவேற்ற முடியாத நிலைமை தோன்றியுள்ளதாக வடக்கில் பணியாற்றும் மனிதாபிமான உதவி
நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த நெருக்கடியை கையாள முடியாத நிலைமை மனிதாபிமான உதவி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. அரசாங்கம் அவற்றுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளும் இதற்கு ஒரு காரணமாகும்.
மனிதாபிமான நிறுவனங்களின் விநியோகத்தை புலிகள் பயன்படுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், இராணுவத் தேவைகளுக்காக பொதுமக்களின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாதென்பதே சமாதானப் பேரவை வலியுறுத்துகின்றது. இந்த மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில்
பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான திட்டத்தையும் அவர் விரிவான முறையில் வெளியிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தேவையான அத்தியாவசிய உதவிகள் அவர்களை சென்றடைவதற்கு ஐ.நா. முகவரைமைப்புகள் தன்னார்வ தொண்டர் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் மன்னார் ஆயர் அரசாங்கத்தை கேட்டிருந்தார். அத்துடன், மோதலில் பாதிக்கப்பட்ட மூன்று வன்னி மாவட்டங்களிலும் மோதலற்ற வலயங்களை உருவாக்குமாறும் கேட்டிருந்தார். அவரின் யோசனைகளுக்கு தேசிய சமாதாப்பேரவை ஆதரவளிப்பதுடன் தாமதமின்றி இது தொடர்பாக பதிலளிக்குமாறும் அரசைக்
கேட்டுக்கொள்கிறது. அத்துடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பாக ஐ.நா.வின் வழிகாட்டல் விதிகளை கைக்கொள்ளுமறும் தேசிய சமாதானப்
பேரவை வலியுறுத்துகின்றது.
No comments:
Post a Comment