Posted on : Wed Aug 6 9:00:25 EEST 2008
இந்திய - இலங்கைப் பொருளாதார ஒப்பந்தத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு கைச்சாத்திடக் கோருகிறார் சம்பந்தன்
இந்தியாவுடன் இலங்கை அரசு செய்வதற்குத் திட்டமிட்டிருக்கும் விசால பொருளாதார பங்குதாரர் ஒப்பந்தத்திற்கு (comprehensive economic partnership agreement- CEPA) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது."இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை ஓரத்தில் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அரசு இதில் கைச் சாத்திட வேண்டும்'' என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற இந்த ஒப்பந்தம் தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே சம்பந்தன் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:இலங்கையில் உள்ள தலைவர்கள் சமா தானத்தையோ அல்லது பொருளாதார வளர்ச்சியையோ விரும்பவில்லை. அதனால் தான் இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்வதை அவர்கள் எதிர்க்கின்றனர்."சீபா' ஒப்பந்தம் இந்நாட்டுக்கு நன்மையளிக்கக்கூடியது. இதனால் எமது இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு அதிகரிக்கும். அரசு
இந்த நல்ல வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.அதற்கு எதிராகக் கிளம்பும் எதிர்ப்பை ஒரு பக்கத்தில் தள்ளிவைத்துவிட்டு இலங்கை அரசு இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும்.இந்தியா போன்ற நாடுகள் மீது சிலர் கொண்டிருக்கும் அர்த்தமற்ற எதிர்ப்புக் காரணமாக இலங்கை பல நல்ல வாய்ப்புகளை இழந்து வருகிறது.சிலரின் அர்த்தமற்ற சிறுபிள்ளைத்தனமான பிடிவாதமே இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பாக மாறியுள்ளது. இந்த எதிர்ப்பில் எந்த அர்த்தமும் கிடையாது.இவ்வாறான ஒப்பந்தங்கள் மூலம் இரு தரப்பினரும் வெற்றிபெறும் ஒரு நிலை உருவாகும். எமது நாட்டுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.சமாதானத்தையும் விரும்பாத, பொருளாதார வளர்ச்சியையும் விரும்பாத சிலரால் எழுப்பப்படும் எதிர்ப்புக்கு அடிபணியாமல் நாட்டுக்கு நன்மை தரக்கூடிய இவ்வாறான ஒப்பந்தங்களை இலங்கை, நாட்டுக்கு சாதகமான வகையில் பயன்படுத்த வேண்டும்.உண்மையில் சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கை வந்தபோதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்க வேண்டும். சிலரின் தேவையற்ற எதிர்ப்பால் அது நடக்கவில்லை.உலகில் பல நாடுகள் இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியே அதற்குக் காரணம்.ஆனால் குறுகிய மனம் படைத்தவர்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். பொருளாதாரத்தில் முன்னிலையில் நிற்கும்
நாடுகளுடன் ஒன்றுசேர்ந்தால்தான் எமது நாடும் முன்னேறும்.ஆகவே, குறுகிய மனம் படைத்தவர்களின் எதிர்ப்பை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவேண்டும் என்றார்
பொருளாதார ரீதியில் இலங்கையை அடிமையாக்க இந்தியா சதித்திட்டம் ஜே.வி.பி. குற்றச்சாட்டு [06 - August - 2008]
எம்.ஏ.எம்.நிலாம்
இந்தியா அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இலங்கையை அடிமைப்படுத்தும் மறைமுகச் செயற்பாடுகளிலிறங்கியிருப்பதாக கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஜே.வி.பி. நாட்டின் பொருளாதார வளத்தைச் சூறையாடும் இந்தியாவின் சதித் திட்டத்துக்கு மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் துணைபோய்க் கொண்டிருப்பதாகவும்
சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இலங்கை இந்திய மின்சார பரிமாற்றத் திட்டமான நாட்டின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமெனவும் ஜே.வி.பி. எச்சரித்துள்ளது.
தேசிய நூலக சேவைகள் ஆவணவாக்கல் நிலையக் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.
செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடலினூடாக 200 மைல் தூர கேபிள் வழியாக மின்சாரப் பரிமாற்றத் திட்டத்துக்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இத்திட்டத்துக்காக செலவிடப்படவிருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் மதுரையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கடல்
வழியாக கேபிள் மூலம் பெற்றுக்கொள்ள விருப்பதாகவும் இந்த மின்சாரத்தை அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு
அப்பிரதேசங்களின் கிராமப்புறங்களுக்குப் பெற்றுக்கொடுக்க திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த மின்சாரப் பரிமாற்றத்தின் கீழ் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டுவரக்கூடிய கேபிள் கம்பி இணைப்பு
ஏற்படுத்தப்படவிருக்கின்றது.
இந்த மின்சாரப் பரிமாற்றம் காரணமாக இலங்கையின் சக்தி வளத்துறை இறைமைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம்
உருவாகியுள்ளது. இந்தியா அதன் அண்டைய நாடுகளான நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் இதுபோன்ற
உடன்படிக்கைகளைச் செய்து கொண்டதன் மூலம் அந்த நாடுகளை தனது ஆதிபத்தியத்துக்குள் வைத்துக்கொண்டுள்ளது. அந்த
நாடுகள் இன்று தனது சக்தி வளத்துறை இறைமையை இழந்து இந்தியாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயிரம் மெகாவாட் என்பது இலங்கை மின்சார உற்பத்தியில் 40 சதவீதமானதாகும். 2007 ஆம் ஆண்டில் இலங்கையில் பல மின்
உற்பத்தி நிலைகளிலுமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மின்சாரம் 2429 மெகாவாட்டாகும். திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில்
இந்தியா அமைக்கவிருக்கும் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் முதற் கட்டமாக 500 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி
செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக இதனை ஆயிரம் மெகா வாட் வரை அதிகரிக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து ஆயிரம் மெகா வாட் கொண்டுவரப்படுவதோடு சம்பூரில் உற்பத்தியாகும் ஆயிரம் மெகா வாட்டும் சேரும்போது
உள்நாட்டு மின்சக்தியின் சரி பாதியை இந்தியாவிடமிருந்தே பெறவேண்டிய நிலை ஏற்படலாம். இதனை வைத்து இந்தியா சக்தி
வளத்துறையில் இலங்கையில் ஏகபோக உரிமை பெற்றுக் கொள்ள வழிபிறக்கும். இதன் மூலமே எமது நாட்டின் இறைமைக்குப்
பங்கம் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த முடியாது போகலாம்.
ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தொடர்பில் அவசர மாற்று வழியை இலங்கையால் ஏற்படுத்த முடியாதென்பதால் இந்த
விடயத்தில் இலங்கை அரசு இந்தியாவுக்கு எந்தவித அழுத்தங்களையோ நிபந்தனைகளையோ பிரயோகிக்க முடியாது.
உடன்படிக்கையை இரத்துச் செய்யவும் முடியாது.
கேபிள் மின்சார இணைப்பானது தலை மன்னாரூடாக ஏற்படுத்தபபடுவதால் அப்பகுதி கடற்றொழிலாளர்களும் பல்வேறுபட்ட
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரலாம். இதனையும் மிக ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த மின்சாரப் பரிமாற்றத்தின் மூலம் இந்தியாவிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வது போன்று இலங்கையிலிருந்து
இந்தியாவுக்கும் மின்சாரத்தை வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கு மின்சாரத்தை
வழங்கக்கூடிய அளவுக்கு இலங்கை மின்சாரத்தில் தன்னிறைவு காணவில்லை. சிலவேளை இந்தியா இங்கு உற்பத்தி செய்யும்
மின்சாரத்தை தனது நாட்டுக்குக் கொண்டு செல்லும் நிலைமை ஏற்படலாம். இதன் மூலம் எமது நாடு இன்னொரு சவாலுக்கு
முகம் கொடுக்க நேரிடலாம்.
இந்தியா எமது நாட்டின் வளங்களை சூறையாடுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றதாக இலங்கை அரசு இதற்குச் சாதகமான
சமிக்ஞையை காட்டி வருகின்றது. சீபா உடன்படிக்கையை மறைமுகமாக செய்து கொள்ள முயற்சிப்பதும் இதற்காகவே ஆகும்.
இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டால் மிகக்குறுகிய காலத்துக்குள் அனைத்து விடயங்களிலும் இலங்கை இந்தியாவின்
தயவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இலங்கையின் அரசில், பொருளாதாரம் என்பவற்றில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மறைமுகத்திட்டத்துடன் இந்தியா செயற்பட்டுக்
கொண்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ஷவின் அரசு அதற்கான பாதையை சீர்ப்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது
எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்ன?யக்கா தெரிவித்தார்
No comments:
Post a Comment