_____________________________வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் டக்ளஸ் வவுனியா நிருபர் 9/7/2008 1:51:22 PM
_____________________________________

கிழக்கு மாகாணத்தில் தற்போது ஜனநாயகம் நிலவுகின்றது. அதேபோன்று வடக்கிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த

நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று - வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் மற்றும் சிகிச்சை பிரிவுகளுக்கான புதிய கட்டிடத் தொகுதி திறப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மகிந்த சிந்தனையின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நிக்கோட் திட்டத்தில் 123.5 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்ததாவது: வடமாகாணத்திலும்கூட கடந்த இரண்டு தசாப்தங்களாக நாங்கள் நம்பி தொலைந்துபோன அந்த ஜனநாயகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் மீட்டுத் தரும் என்று நம்புகிறேன்.

இந்த முயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். பெரும்பான்மையான பிரச்சினைகளுக்கு இன்று தடையாக இருப்பது ஜனநாயகமற்ற தன்மையே. பேச்சுச் சுதந்திரம் - நடமாடும் சுதந்திரம் - தொழில் செய்கின்ற சுதந்திரம் என பல வகையான சுதந்திரங்களை இன்று நாங்கள் இழந்திருக்கிறோம்.
வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி இன்று மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஒத்துழைப்பதென்பது மக்களுக்கு நீண்டகால அடிப்படையில் நன்மையையே ஏற்படுத்தும்.
இந்த நடவடிக்கையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை எம்மிடம்

தெரிவியுங்கள். நாங்கள் அதனை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். வடமாகாண சபையின் அலுவலகம் இந்தப் பிரதேசத்திற்கு உரியது. அந்த அலுவலகத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கான யோசனை இருக்கின்றது. அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும் என நினைக்கிறேன்.
அதேநேரத்தில் அந்த அலுவலகத்தை தற்காலிகமாக வவுனியாவில் அமைக்க இருக்கிறோம். அத்துடன் வடமாகாண செயலணிக்குழுவின் கிளை அலுவலகம் ஒன்றை வவுனியாவில் அமைப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment