Thursday, 15 January 2009

முல்லைத்தீவை நோக்கி முன்னேறும் ஆக்கிரமிப்பு

சிலாவத்தையில் சிறிலங்கா படையினரின் தாக்குதல் முறியடிப்பு: உடலங்களும் படையப்பொருட்களும் மீட்பு [புதன்கிழமை, 14 சனவரி 2009, 06:59 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிலாவத்தை பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளதுடன் அவர்களின் உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சிலாவத்தை பகுதியில் பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை மற்றும் கனரக போர்க்கருவிகளின் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதனை விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதல் நடத்தி முறியடித்தனர். நேரடி மோதலாக இம் முறியடிப்புத் தாக்குதல் நடைபெற்றதாக வன்னியில் இருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதில் படையினரிடம் இருந்து ஆறு வரையான உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏகே.எல்.ஜிக்கள் - 07, பிகே எல்எம்ஜிக்கள் - 02, ஆர்பிஜிகள் - 03, ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 05உள்ளிட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசுவமடு மகாவித்தியாலய சூழலை பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கவும்: மகிந்தவிடம் வேண்டுகோள் [செவ்வாய்க்கிழமை, 13 சனவரி 2009, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி பொது மருத்துவமனையில் இயங்கும் விசுவமடு மகாவித்தியாலய சூழலை பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் மேம்பாட்டு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொதுமருத்துவமனையின் மேம்பாட்டு பேரவை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அவசரமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது வன்னிப் பகுதியில் நடைபெற்று வரும் போரால் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மனிதநேயம் தாண்டிய அவல வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு நாள்தோறும் காயப்பட்டும் இறந்துகொண்டும் இருக்கின்றனர்.
தமது சொந்த இடங்களை விட்டு நகர்ந்து உணவுக்காகவும் இருப்பிடத்திற்காகவும் ஏங்கித் தவிக்கும் நிலையில் தமது உயிர் எந்த நேரத்தில் பறிக்கப்படும் என்ற பயப்பீதிக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளதுடன் அன்றாடம் உயிர்கள் பறிக்கப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் கொண்டிருக்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவமனைகள் தமது சொந்த இடங்களில் இருந்து நகர்ந்து பாடசாலைகளிலும் பொதுக் கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன.
தற்போது கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை விசுவமடு மகா வித்தியாலயத்தில் இயங்கி வருகின்றது.
இந்த மருத்துவமனை மாவட்டத்தின் மருத்துவப் பணியை ஆற்றி வருகின்றது. தற்போதைய நெருக்கடியான சூழலில் எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களினால் கடந்த முதலாம் நாளில் இருந்து இன்று நண்பகல் வரை 28 பேர் இறந்தும் 185 பேர் காயப்பட்டும் ஏனைய வகையில் நோய் வாய்ப்பட்டும் உள்ள மக்களுக்கு மருத்துவம் செய்யும் கிளிநொச்சி மருத்துவமனை சூழலை போரற்ற வலயமாக பிரகடனம் செய்வதுடன் இந்த மருத்துவமனை சூழல் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தி எமது மக்கள் இயல்பான மருத்துவ வசதிகளை பெற ஆவண புரிய வேண்டுகின்றோம் என அதில் தெரிவிக்கப்படடுள்ளது.


முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை 7 தடவைகள் குண்டுத்தாக்குதல்: 12 பேர் காயம் [செவ்வாய்க்கிழமை, 13 சனவரி 2009, 07:11 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று ஏழு தடவைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் இருவர் காயமடைந்துள்ளனர். 12 வீடுகள் சேதமாகின. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் 18 குண்டுகளை வீசியுள்ளன.
இதில்
அனுராச், சிவராசா, தமிழ்ச்செல்வன், கிரிதா, றமா, யோகராசா, பூபதி, கோபாலன், சந்திரன், டெனாட் ஆகியோரின் வீடுகளும் அலெக்ஸ் முன்பள்ளி, செல்வபுரம் யூதாதேயு கோவல், அருட்சகோதரிகள் இல்லம், முல்லைத்தீவு மகா வித்தியாலயம், புனித இராயப்பர் ஆலயம், முல்லை நகர் வணிக நிலையங்கள் ஆகியன சேதமடைந்துள்ளன.
இதேவேளை, கிளிநொச்சி விசுவமடு தொட்டியடி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று மாலை 6:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.
இதில் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
பெருமளவில் இடம்பெயர்ந்த மக்கள் இப்பகுதியில் குடியமர்ந்துள்ள நிலையில் இத்தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர்.

No comments: