இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர். கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் இணைப்பாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள்
சபையின் கொழும்பில் உள்ள வதிவிடப் பிரதிநிதி நீல்புகுணேவை சந்தித்து பேசினர்.
வன்னியில் நடைபெறுகின்ற போரில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமை காயமடைகின்றமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலையும் கண்டனமும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக நீல்புகுணே கூறியுள்ளார்.
போரில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் அவலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை பெற்று வருவதாகவும் நீல்புகுணே தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற இச்சந்திப்பில் அல்லற்படும் மக்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கில் விரைவில் கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் நீல்புகுணே கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இடம்பெயர்ந்து செல்கின்ற மக்கள் மீது படையினர் வேண்டும் என்றே எறிகணைத் தாக்குதல் நடத்துவதாகவும் இதன் காரணமாகவே பெருமளவிலான மக்கள் கொல்லப்படுகின்றனர் என்றும்
நீல்புகுணேக்கு எடுத்து விளக்கியதாக மாவை சேனாதிராஜா கூறினார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்துகள் இல்லை எனவும் எறிகணை, பீரங்கி தாக்குதலில் மருத்துவமனைகள் அனைத்தும் சேதமடைந்து விட்டது என்றும் வதிவிடப் பிரதிநிதி நீல்புகுணேக்கு விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
காயமடைந்த மக்களை வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
மேலும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற ஒன்பது வாகனங்கள் படையினரால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்தும் விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா கூறினார்.
மீண்டும் "செம்மணி" புதைகுழிகள்?: வெளியேறிய 100-க்கும் அதிகமான இளைஞர்கள்- பெண்களை கொன்று புதைத்தது சிறிலங்கா! [புதன்கிழமை, 28 சனவரி 2009, 06:06 மு.ப ஈழம்] [வவுனியா நிருபர்]
சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல் காரணமாக வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்று மகிந்த அரசாங்கம் அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும் பெண்களும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் பற்றைக்காடுகளிலும் மயானங்களிலும் புதைக்கப்படுவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. பெண்கள் பலர் விசாரணைக்காக இரகசிய முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் பலர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனுராதபுரம், பொலநறுவையில் உள்ள மயானங்கள், காட்டுப் பிரதேசங்கள் மற்றும் வவுனியாவில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற பற்றை பகுதிகள் போன்ற இடங்களிலேயே கொல்லப்படும் இளைஞர்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுவதாகவும் பெண்களின் உடலங்கள் எரிக்கப்படுகின்றது என்றும் நேரில் கண்ட சிங்கள தொழிலாளர்கள் அனுராதபுரத்தில் உள்ள பிரதேச
ஊடகவியலாளர்கள் சிலரிடம் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் 25 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்
27 பெண்கள் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர் என்றும் அனுராதபுரம் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
காணாமல் போன அல்லது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவுகள் குறித்து வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கூட முறையிட முடியாது உள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
அப்படி இருந்தும் சில முறைப்பாடுகள் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் ஆணைக்குழு அதிகாரிகளுடன் ஊடகவியலாளர்கள் சிலர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் கருத்துக்கூற மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் வவுனியா நகருக்கு வெளியே செல்ல முடியாதவாறு படையினர் தடை விதித்துள்ளதாக வவுனியா தகவல்கள் கூறுகின்றன.
வவுனியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் நலன்புரி நிலையங்களுக்கு சென்று அவர்களை பார்வையிட முடியாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர் 600-க்கும் அதிகமான இளைஞர்கள், பெண்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு ஒன்று சிறிலங்காவின் உயர் நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தற்போதைய சிறிலங்கா படைத் தளபதி சரத் பொன்சேகா அப்போது யாழ். மாட்ட கட்டளை அதிகாரியாக கடமையாற்றி இருந்தார் என்பதே அதற்கு காரணமாகும்.
யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமராசாமி அரியாலை சந்தியில் உள்ள படையினரின் சோதனைச் சாவடியில் கைதாகி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போதே செம்மணி புதைகுழி விவகாரம் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
300 தமிழர் பலி; பலநூறு பேர் படுகாயம்; கொலைப் பொறியாகும் "பாதுகாப்பு வலயம்": வன்னி மக்களை சிக்க வைத்து சிறிலங்கா படையினர் அகோர பீரங்கித் தாக்குதல் [திங்கட்கிழமை, 26 சனவரி 2009, 08:08 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வல்லிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர். வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு - நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு லட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.
சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45 நிமிடம் முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.
மூங்கிலாறு பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந் திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை இலக்கு பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.
இதேவேளை - உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலனோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர் என "புதினம்" செய்தியாளர் சம்பவ இடத்தில் இருந்து தெரிவிக்கின்றார்.
இன்றைய இனக்கொலைத் தாக்குதல்களில் மட்டும் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவரும் "கியூடெக்" நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் உட்பட பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த கண்மூடித்தனமான இனக்கொலைத் தாக்குதல் பற்றிய இந்தச் செய்திகள் - தமது வன்னிச் செய்தியாளரை மேற்கோள் காட்டி "தமிழ்நெட்" இணையத்தளம் வெளியிட்ட செய்திகளில் இருந்தும், எமது வன்னிச் செய்தியாளர் அனுப்பிய செய்திகளிருந்தும் தொகுக்கப்பட்டவையாகும்.
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் - மிகக் கொடூரமாக பொதுமக்களை நோக்கி அதிகரித்து வருவதால் - இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக அதிகரிக்கலாம் என "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
"மக்கள் எங்கள் மனிதக் கேடயங்களா?... வன்னிக்கு வந்து நிலைமையைப் பாருங்கள்": அனைத்துலக அமைப்புக்களுக்கு நடேசன் பகிரங்க அழைப்பு [செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2009, 03:52 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]
"வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார். "எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை
கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசாங்கம் இதனைச் சொல்கின்றது" என பா.நடேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் புலிகள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கேட்கப்பட்ட போது, "எம் மீது அவர்கள் வைப்பது ஒர் அபாண்டமான குற்றச்சாட்டாகும். எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்" என தெரிவித்த அவர்,
"இவ்வாறாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என அவர்களுக்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டாரா என்பது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், "எமது தலைவர் எங்கும் சென்று விடவில்லை. அவரும், எமது போராட்ட இயக்கமும் எமது மக்களுடனேயே இருந்து போராடுகின்றோம்" என அவர் தெரிவித்தார்.
பெரும் இராணுவப் பின்னடைவைக் கண்டுள்ள நிலையில் புலிகள் இயக்கம் ஏன் ஒரு அரசியல் தீர்வைப் பெறக்கூடாது என்பது தொடர்பான ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், "சுதந்திரமான, கெளரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே நாம் போராடுகின்றோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். எமது மக்களின் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் போராடியே தீருவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment