Saturday 4 April, 2009

வன்னிக் களநிலை பா,நடேசனின் கருத்துரை













வன்னிக் களநிலை பா,நடேசனின் கருத்துரை

வன்னி மக்கள் பேரவலம்; களமுனை; இந்தியா; அனைத்துலக சமூகம்; தமிழக மக்கள்; புலம் வாழ் தமிழர்: பா.நடேசன் விரிவான விளக்கம் [வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2009, 08:49 மு.ப ஈழம்] [ப.தயாளினி]

தற்போதைய அரசியல், இராணுவ நிலவரம், வன்னி வாழ் தமிழர் படும் அவலங்கள், உலகம் எங்கும் நிகழும் தமிழர் போராட்டங்கள், அனைத்துலக சமூகம் இயங்கும் போக்கு, இவை எல்லாவற்றிற்குப் பின்னாலும் இயங்கும் இந்தியா என பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அளித்துள்ளார். அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த வாரம் ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு பா.நடேசன் வழங்கிய சிறப்பு நேர்காணல்:
தாங்கொணா துன்பங்களுக்கு ஊடாக தாயக மக்கள் அவலங்களை நாளாந்தம் சந்தித்து வருகின்றனர். தற்போது மிகவும் ஒரு குறுகிய பிரதேசத்திற்குள் ஒரு பெருந்தொகையான மக்கள் அவலப்படுகின்றனர். அவர்கள் நாளாந்தம் சந்திக்கும் அவலம் என்ன என்பதை உங்களிடமிருந்து நான் முதலில் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்?
தற்போதைய சூழலில் எங்களுடைய மக்கள் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு சிறிய பிரதேசத்திற்குள் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மக்களும் இடம்பெயர்ந்து, நிலங்களில் பதுங்கு குழிகள் அமைத்து முக்கியமாக சிறிலங்கா அரச படைகளுடைய கொடூரமான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு புறம் முகம் கொடுத்த படியும் இன்னொரு புறம் பொருளாதார தடை, உணவுத் தடை, மருந்துத் தடை என பல்வேறு தடைகளுக்கும் முகம் கொடுத்தபடி ஒரு மனித அவலத்தின் உச்சத்தில் எங்களுடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக இரவும் பகலும் சிறிலங்கா இராணுவத்தினுடைய ஆட்லெறி எறிகணை வீச்சுக்கள் கண்மூடித்தனமான முறையில் மக்கள் செறிவாக வாழ்கின்ற குடியிருப்புகள் மீதுதான் இலக்கு வைக்கப்படுகிறது. சராசரி ஒரு நாளைக்கு சிறிலங்கா இராணுவத்தினருடைய ஆட்லெறி அதாவது பீரங்கித் தாக்குதல்கள் மூலம் 50 இல் இருந்து 100 வரையிலான மக்கள் கொல்லப்பட்டும் 200 வரையான மக்கள் காயப்பட்டும் வருகின்றனர்.
இந்த புள்ளி விபரத்தை இங்குள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்ற நடுநிலையான அமைப்புகள் உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல சில சமயம் ஆட்லெறி எறிகணை வீச்சுகள் ஒரு புறம், இன்னொரு புறம் வான்குண்டு வீச்சுகள் கூட மக்கள் குடியிருப்புகள் மீது இலக்கு வைத்து நடத்தப்படுகின்றது.
அதுமட்டுமல்ல இன்றைக்கும் காயப்படுகின்ற மக்களுக்கு உடனடியாக அடிப்படை சிகிச்சைகள் கொடுப்பதற்கு கூட மருந்துகள் இல்லை. இந்த இராணுவ நடவடிக்கை தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை மருந்து தடையை உருவாக்கி மக்களை பெரியதொரு இன அழிப்பு நிலைக்கு தள்ளி இருக்கின்றது.
அதுமட்டுமல்ல உணவு ரீதியாகவும், இன்றைக்கு எங்களுடைய மக்கள் மரக்கறி உணவுகளைச் சாப்பிட்டு மாதக் கணக்காகிறது. உதாரணத்திற்கு நாங்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதாவது வல்லிபுனம், தேவிபுரம் போன்ற பிரதேசத்தில் இருந்துவிட்டு இங்கே வந்த பின்னர் மக்கள் தற்போது சாப்பிடுகின்ற உணவு வெறும் சோறும் பருப்பும் அல்லது சோயா மீற் என்று சொல்லப்படுகின்ற உணவு மட்டுமே.
இலை - குழை அல்லது கீரை வகைகள் என எந்தவொரு சத்து உணவைக் கூட மக்கள் உண்ண முடியாத ஒரு நிலையில் இந்த 21 ஆம் நூற்றாண்டின் அதியுச்ச மனித அவலம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.
எங்களுடைய மக்கள் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு பாரிய இன அழிப்பு யுத்தத்திற்கு, பெரும் சவால்களுக்கு, நெருக்கடிகளுக்கு மத்தியில் முகம் கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்த குறுகிய பிரதேசத்திற்குள் இத்தனை லட்சக்கணக்கான மக்கள், ஏற்கனவே இடம்பெயர்ந்து இப்போது இந்த பிரதேசத்திற்குள் இருக்கின்றார்கள். அவர்கள் எவ்வாறு தமது வாழ்க்கையை, இத்தனை அவலங்களுக்கு மத்தியிலும் நடத்தக்கூடியதாக இருக்கின்றது?
உண்மையில் எங்களுடைய மக்களுக்கு இப்போது தொழில் வாய்ப்புக்கள் இல்லை. வருமானங்கள் இல்லை. அதாவது சேமித்து வைத்த சேமிப்புகள் எல்லாம் செலவழிக்கப்பட்டு விட்டன. இருந்தாலும் எங்களுடைய அமைப்புக்கள் குறிப்பாக தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற அமைப்புக்களும் அதே போன்று நிர்வாக சேவை போன்ற அமைப்புக்களும் எங்களுடைய மக்களுக்குப் போதுமான வரை உதவி செய்கின்றார்கள்.
அதே போன்று எங்களுடைய மக்களுடைய பண்பாட்டு வாழ்க்கை முறை, இருக்கின்றவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்கின்ற ஒரு பண்பாடு இருந்து வருகின்றது. இந்த வகையில் இருப்பவர்கள் தங்களுடைய சேமிப்புகளில் இருந்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்கான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
தமிழர் புனர்வாழ்வு கழகம் போன்ற அமைப்புக்கள், தமிழீழ நிர்வாக சேவை போன்ற அமைப்புக்களும் எங்களுடைய மக்களுக்கு உணவுக் கஞ்சி அதாவது, அரிசியில் கஞ்சி காய்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு தடவை வழங்கி வருகின்றனர்.
எங்களுடைய மக்கள் சொல்லொணா துன்பத்திற்கு, அதாவது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பெரும் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மைய காலங்களில் உலக உணவுத் திட்டத்தால் அனுப்பப்டுகின்ற உணவுகள் மாத்திரம் கப்பல் மூலம் எடுத்து வரப்படுகின்றன. அதிலும் எங்களுடைய மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யக்கூடிய முறையில் உணவுகள் இங்கே வருவதில்லை.
கடந்த காலத்தில் இரண்டு முறை உணவு வந்திருக்கிறது. ஆனால் அரிசி வரவில்லை. அண்மையில் இறுதியாக வந்தக் கப்பலில்தான் அரிசி வந்திருக்கின்றது. அது கூட எங்களுடைய மக்களின் தேவையை நிறைவு செய்யக்கூடிய அளவிற்கு வரவில்லை. பெரியதொரு மனித அவலம் இங்கே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கே உள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கேட்டால் தெரியும். அதுபோல இங்கே இடம்பெறுகின்ற மனித அவலம் இன்றைக்கு முழு உலகத்திற்கும் நன்றாக தெரிய வந்திருக்கின்றது.
தற்போது நீங்கள் இருக்கின்ற குறுகிய பிரதேசத்திற்குள் மக்கள் தங்குவதற்கான போதுமான கூடாரங்கள் இருக்கின்றனவா?
எங்களுடைய மக்களுக்கு இங்கே போதுமான கூடாரங்கள் இல்லை. இருந்தாலும் கடந்த காலங்களில் யுஎன்எச்சிஆர், ஐசிஆர்சி போன்ற அமைப்புக்கள் வழங்கிய கூடாரங்களை வைத்துக்கொண்டு மக்கள் தமது வாழ்க்கையை நடத்துகின்றார்கள்.
அதேபோன்று தற்போது வாழ்கின்ற பிரதேசத்தில் பனைகள் நிறைய இருக்கின்றன. பனை ஓலைகளையும் பயன்படுத்த மக்கள் தொடங்கியுள்ளனர். ஏனென்றால் தற்போது மிகவும் வறட்சியான காலம்; மிகவும் வெப்பமான காலம். அவ்வாறான சூழலில் கூடாரங்களுக்குள் வாழ்கின்ற மக்கள் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க கூடிய ஒரு நிலை தோன்றியுள்ளது. குறிப்பாக, வெப்பத்தினால் ஏற்படுகின்ற கொப்பளிப்பான் போன்ற வருத்தங்கள் தற்போது எல்லா இடமும் பரவத் தொடங்கியுள்ளன. அதேபோன்று வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை கூட தோன்றுவதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. இப்படியாக எங்களுடைய மக்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாத அளவிற்கு இருக்கின்றனர்.
தமிழீழ சுகாதார சேவையை எடுத்துக்கொண்டால் சேவையாளர்களுக்கு "வருமுன் காப்போம் என்ற கோட்பாடு" இருக்கிறது. உண்மையில் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்ற நோய்கள், வருத்தங்கள், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகள் போதிய அளவு எங்களிடம் இல்லை.
ஆகையினால், இந்த வருத்தங்கள், தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கு கருத்துரைகள், கருத்துக்களை மக்கள் மத்தியில் போய் அவர்கள் நாளாந்தம் வீடு வீடாகச் சென்று, மக்களுடைய ஒவ்வொரு குடியிருப்பாக அவர்களுக்கு சுகாதாரம் தொடர்பான கல்வி ஊட்டல்களை தீவிரமாக தமிழீழ சுகாதார சேவையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக ஏராளமான போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல காயப்பட்ட போராளிகள், தமது உறுப்புகளை இழந்த போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டு அந்த போராளிகளோடு சுகாதார தொண்டர்களும் என எல்லாரும் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக மக்கள் வாழிவிடங்களுக்குச் சென்று நோய்களை எவ்வாறு தடுப்பது, எவ்வாறு சுகாதாரத்தைப் பேணுவது, எவ்வாறு தொற்று நோய்கள் வராமல் தடுப்பது என்பது தொடர்பான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இது பெரிய அளவில் எங்களுக்குப் பயன் அளிக்கின்றது. தொற்று நோய்களில் இருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவையும் ஆற்றலையும் பெற்றுச் கொள்கிறார்கள்.
அங்கு மக்கள் பாதுகாப்பு வலயம் உருவாக்கி இருக்கின்றோமென சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்றது. அதில் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் நிலவரம் என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம், யுனிசெஃப், யுஎன்எச்சீஆர் போன்ற அமைப்புக்கள் சுதந்திரபுரத்தில் இருந்தபோது அந்த இடத்தை பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்தி மறுநாளே அந்த இடத்திற்குச் சென்று ஐசிஆர்சி, யுஎன்எச்சீஆர் போன்ற அமைப்புக்கள் வேலை செய்த இடங்களுக்கு ஆட்லறி எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டு அங்குள்ள பணியாளர்களைக் காயப்படுத்தியதுதான் கடந்த கால வரலாறு.
அவ்வாறுதான் தற்போதும் பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்திய, அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக எறிகணை வீச்சுகள் இரவும் - பகலும் இடம்பெற்று வருகின்றன.
மக்கள் கூடாரங்களில் படுத்து, நடு இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற போது திடீரென்று நான்கு புறத்தில் இருந்தும் பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றதன. அப்போது குடியிருப்புக்களில் இருந்து எழும் மரண ஓலங்களைக் கேட்டால் மக்கள் முகம் கொடுத்து வருகின்ற மனித அவலத்தின் உச்சத்தை அங்கே கேட்கின்ற குரல்களின் ஊடாக கேட்கக்கூடியதாய் இருக்கும்.
இந்த மக்களுடைய ஓலங்கள், நாளாந்தம் நிமிடத்திற்கு நிமிடம் அவர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் எந்த அளவில் அந்த மக்களிடையே உளரீதியான பாதிப்பினை குறிப்பாக குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது?
உண்மையில் மக்கள் நாளாந்தம் இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், நீண்டகால போராட்ட வாழ்வில் எம் மக்கள் இதுவரை அடைந்த இழப்புக்களை முன்வைத்து இசைவாக்கம் அடைந்திருக்கும் காரணத்தால் முதியோர் இளையோர் வேறுபாடின்றி இனி எந்த துயர் வந்தாலும் தனிநாடு அமைத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் எம்மோடு நிற்கின்றனர். நீங்கள் இங்கு வந்து கேட்டால் தெரியும். வயது போன அம்மாவைப் பார்த்துக்கேட்டால் கூட சொல்லுவார்கள்; இவ்வளவு தூரம் நாம் இழந்து விட்டோம் இனி எதனை இழந்தாவது ஒரே அடியாக அடித்து எதிரியை வெளியேற்றி நாட்டை மீட்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு மக்களுடைய மனநிலை தற்போது இருக்கின்றது.
அப்படியானால் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த முயற்சிகள் ஒரு எதிர்வினையினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்கிறீர்களா?
மக்களுடைய மனங்களில் எவராலும் மாற்ற முடியாத வைராக்கிய உணர்வொன்று தோன்றியிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. தற்போது இடம்பெறுகின்ற சண்டைகள் கூட அதை பிரதிபலிக்கின்றன. புதிதாக இணைந்துள்ள போராளிகள் கூட மிக ஓர்மத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த காலத்தில் சில அமைச்சர்கள் "The Matter Few Days" என்று கூறியிருந்தனர். ஆனால் நேற்றைய நாள் கோத்தபாய ராஜபக்ச இந்த போரை முடிக்கும் கால எல்லையை கூற முடியாது என்று கூறியிருந்தார்.
ஏன் என்றால் எங்களின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கின்றது, இராணுவம் பாரிய இழப்புகளையும் அழிவுகளையும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றது. இராணுவத்திற்கு சில நெருக்கடிகள் வந்து விட்டது என இராணுவத்திடம் இருந்தே சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
மும்முனைகளில் அனைத்து முனைகளிலும் இறுக்கமான ஒரு நிலையை சிறிலங்கா படையினர் மேற்கொண்டிருக்கின்றனர். இன்னும் குறுகிய காலத்தில் முற்றாக அனைத்தையும் கைப்பற்றி விடுவோம் என்கின்றனர். உண்மையில் அங்குள்ள களநிலவரம் என்ன?
களநிலவரம் தொடர்பான தகவல்களைத் தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. மும்முனைகளிலும் வரும் இராணுவம், எங்களின் சின்னப் பிரதேசத்தில் சூழ்ந்திருக்கின்ற இந்த இராணுவம் மட்டும்தான் சிறிலங்கா இராணுவத்தில் உள்ள சண்டையிடும் ஆற்றல் படைத்த படையணி ஆகும்.
இந்தப் படையணிகள் அண்மைய காலமாக பெரும் பெரும் இழப்புகளைச் சந்தித்த வண்ணம் இருக்கின்றனர். எமக்கு கிடைக்கும் தகவல்படி, முன்னணியில் முன்னேறிக் கொண்டிருந்த படையணிகள் தம்மால் இனி முன்னேற முடியாது என உயர் கட்டளை அதிகாரிகளுடன் முரண்படும் அளவிற்கு எங்களுடைய தாக்குதல்களும் இராணுவத்தின் இழப்புகளும் அதிகமாகி உள்ளன.
அண்மைய இராணுவத்தின் அதிகாரபூர்வ தகவல்களின்படி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 3 நாட்கள் சமரில் 450-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 600-க்கும் அதிகமான இராணுவத்தினர் காயப்பட்டும் களமுனையில் இருந்து ஒட்டுமொத்தமாக 1,000 இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல இதனுடைய பிரதிபலிப்பு மாங்குளம், கனகராயன்குளம் போன்ற இடங்களில் சாதாரண ஊர்க்காவற் படையினரே நிறுத்தியுள்ளனர்.
இராணுவத்தில் இருக்கின்ற சண்டையிடக்கூடிய படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சண்டையின் மூலம் முற்றாக அழியக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதுதான் உண்மையான கள யதார்த்தம். இந்த இடத்தில் நாங்கள் தீவிரமாக, ஓர்மமாக நின்று இச்சண்டையை வெல்வோமானால் எங்கள் போராட்டத்தின் அதியுச்ச விடுதலை விரைவாக கிடைக்கும். இதில் வருகின்ற இராணுவத்தை நாங்கள் வென்றோமானால் மீதியுள்ள பிரதேசத்தில் எங்களுடைய மக்கள் கால்நடையாக நடந்து சென்றே ஆயுதம் இல்லாமலேயே அங்குள்ள இராணுவத்தினரை பிடித்து அடித்து கலைக்கின்ற அளவிற்குத்தான் மற்ற இராணுவத்தினர் இருக்கின்றனர்.
தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக வைத்துள்ளனரா?
உண்மையில் நாங்கள்தான் மக்களுக்கு கவசங்களாக இருக்கின்றோம். இது சிறிலங்காவாலும் சிறிலங்காவிற்கு ஆதரவாக செயற்படுகின்ற நாடுகள் மற்றும் ஊடகங்களாலும் மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரச்சாரமாகும். உண்மையில் மக்களுக்கான கவசங்களாக நின்று, விடுதலையை விரைவாக வென்றெடுக்க வேண்டும் என்ற ஓர்மத்தினால் தொடர்ந்து போராடுகின்றோம்.
ஓர் இனம், அதன் மக்கள் தாம் ஆடியோடி மகிழ்வாக வாழ்ந்த மண்ணை விட்டு அவர்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட வேண்டும் என்று வெளியில் இருப்பவர்கள் அது அனைத்துலக நாடாகவும் இருக்கலாம் சிறிலங்காவாகவும் இருக்கலாம் கூறி வருகின்றனர். அது சரியா?
உண்மையில் இது ஒரு அநீதியான செயலாகும். இது எங்களின் மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளாத, மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை விளங்கிக் கொள்ளாதவர்கள்தான், இவ்வாறான செயற்பாடுகளையும், இவ்வாறான கூற்றுக்களையும் கூறி வருகின்றனர். இது ஒரு பிழையான கணிப்பீடாகும். பிழையான செயலாகும்.
சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த தாக்குதல்களை பார்க்கும் பொழுது எந்த விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்கள் போரியல் குற்றத்தை இழைக்கின்றனர் என்று பார்க்கிறார்கள்?
சிறிலங்கா போரியல் குற்றங்கள் புரிகின்றது என்பதற்கு ஏராளமான சாட்சிகளும் ஆதாரங்கள் மற்றும் சான்றுகளும் நிறைய இருக்கின்றன. உதாரணத்திற்குப் பாதுகாப்பு வலயம் என்று மக்களை வரவழைத்து, லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்ற இடத்தின் மீது செறிவான பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள், வான்குண்டு வீச்சு தாக்குதல்கள் என நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, ஆயிரக்கணக்கான மக்களைக் காயப்படுத்திக் கொண்டிருக்கும் போது, அதற்கு சான்றாக சாட்சியாக இங்கே ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இருந்திருக்கின்றனர்.
அதேபோன்று உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை இராணுவம் போடும் போதும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதனை பார்த்திருக்கின்றனர். பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே போர்க்குற்றம் புரிந்துள்ள சிறிலங்கா அரசிற்கு எதிராக உலக நாடுகள் நீதியான ஒரு விசாரணையை மேற்கொள்ள வரும்போது அதற்கு நடுநிலையான சாட்சிகளும் சான்றுகளும் எங்களிடம் நிறையவே இருக்கின்றன.
அனைத்துலகத்தில் தற்போது ஒரு நல்ல மாற்றம் தென்படுகின்றது. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?
முக்கிய காரணம், எங்களுடைய போராட்டம் தர்மத்தையும் நீதியையும் அடிப்படையாகக் கொண்டது. எங்கள் போராட்டம் மக்கள் போராட்டம். மக்கள் விடுதலைப் போராட்டம். மக்களுடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக நீண்ட காலம் நடக்கும் போராட்டம் என்பதனால், உலகம் எங்களின் பக்கம் எங்களின் விடுதலையின் பக்கம் திருப்புவதங்கான அரசியல் சூழல் உருவாகி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையில் சில முன்னெடுப்புக்கள் நிகழ்த்தும் போது, சில நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு பக்க பலமாக இருந்து அப்படியான செயற்பாடுகளை முடக்கும் வண்ணம் நடந்து கொள்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இப்படியான அனைத்துலக நாடுகளுக்கு என்ன கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றனர்?
ஐக்கிய நாடுகள் சபையில் எங்களுடைய பிரச்சினையை அங்கு கலந்துரையாடலுக்கு எடுப்பதற்காக அனைத்துலக நாடுகள் முன்வருவது இதுதான் முதல் தடவை. எங்களுக்கு எதிரான நாடுகள் வந்தாலும் கூட அமெரிக்கா போன்ற நாடுகளின் கொள்கைகளில் மாற்றம் உள்ளதாக அவதானிக்க முடிகின்றது.
ஏனென்றால், ஐ.நா.விற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியே பாதுகாப்பு சபையில் விவாதிக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இன்றைக்கு இரண்டு பிரிவாக பிளவுபட்டு நிற்கின்றது. எங்களுடைய போராட்டத்தில் இது முதற்தடவை. ஐக்கிய நாடுகள் சபையில் எங்களின் பிரச்சினைகள் குறித்த ஒரு விவாதம் அங்கு உருவாகியிருப்பதே எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்வேன்.
அனைத்துலக நாடுகளைப் பொறுத்த மட்டில் அவர்கள் தமக்கான அரசியல் இராணுவ அல்லது பொருளாதார நன்மையை வைத்துதான் முடிவு எடுப்பார்கள். ஆனால் இப்பொழுது வன்னிப்பெரு நிலப்பரப்பு அல்லது எமது தாயக மண்ணைப் பொறுத்த மட்டில் அவர்கள் எப்படியான, எமக்குச் சாதகமான முடிவுகளை எடுப்பார்கள் என்று கூற முடியுமா?
எங்களுடைய மக்கள் முற்று முழுதாக தங்களுடைய அரசியல் போராட்டத்தை, அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு ஒட்டு மொத்தமாக எல்லா மக்களும் ஒருமித்த ஒரே குரலாக ஒரே உணர்வாக, ஒரே இயக்கமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல இந்த மக்களினுடைய அரசியல் அதாவது அரசியல் அபிலாசையை நிறைவு செய்யக்கூடிய ஒரு தீர்வின் மூலமே இந்த பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வர முடியும் என்ற நிலைப்பாட்டை எடுக்கும் அளவிற்கு உங்களுடைய மக்களுடைய எழுச்சி இன்று எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல உலகம் முழுவதும் முதல் தடவையாக புலம்பெயர்ந்திருக்கின்ற மக்கள், தமிழ் நாட்டில் இருக்கின்ற ஏழு கோடி தமிழ் மக்கள் எல்லாருமே என முழு உலகத் தமிழினமே இன்று ஒருமித்த குரலாக, ஒரே சக்தியாக, ஒரே உணர்வாக எழுச்சிக் கொண்டிருப்பது இதுதான் வரலாற்றில் முதல் தடவை. இதை எல்லா நாடுகளும் உணரத் தொடங்கியிருக்கின்றன. இந்த சக்திக்கு முன்னால் எங்களுடைய அரசியல் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.
தமிழகத்தில் தற்போது அங்குள்ள மக்கள் உணர்ச்சி உச்சத்தில் சென்று கொண்டிருக்கின்றன. அங்கு பல தீக்குளிப்புகளும் இடம்பெறுகின்றன. இதனை நீங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
அவர்கள் எங்களுடைய இரத்தத்தின் இரத்தமாக, எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளாக இருந்து வருபவர்கள். இங்கே எங்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்பட்டால் அவர்களால் அதை பொறுக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி தமிழ் மக்களும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று ஒரே குரலாக, ஒருமித்த குரலாக இருக்கின்றனர்.
இங்கே நடக்கின்ற கொடுமைகள், இங்கே நடக்கின்ற அரச பயங்கரவாத செயல்களை அந்த மக்களால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில்தான் அவர்களுடைய உணர்வுகள் அதியுச்ச நிலையை அடையும்போது அவ்வாறான தீக்குளிப்பு போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியா எந்தவிதமான கொள்கைகளை எடுக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்பார்க்கின்றனர்?
இந்தியாவினுடைய வரலாற்று ரீதியான உண்மையான நண்பர்கள் யார் என்பதை இந்தியா உணர்ந்து கொள்ள இந்த நேரத்திலாவது முன்வர வேண்டும். வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள்தான் இந்தியாவினுடைய நல்ல நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றனர். கடந்த காலத்தில் பல எடுத்துக்காட்டுகளை இதற்கு நாங்கள் எடுத்துக் காட்டலாம்.
இந்தியாவிற்குச் சோதனைகள் ஏற்பட்டிருக்கின்ற போது எல்லாம் இந்தியாவின் பக்கம் நின்று தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளம் குரல் கொடுத்திருக்கின்றார்கள். இந்தியா இதை உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றுதான் நான் நினைக்கின்றேன்.
அப்படியானால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் வழங்கி வரும் இராணுவ ரீதியான உதவிகள் - அண்மையில் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழுவினர் வந்து இறங்கியிருக்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மத்தியில் இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற ஒரு நிலையில்தான் நடவடிக்கைகள் நடக்கின்றன. இதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும்?
நாம் தொடர்ச்சியாக இவ்வாறான உதவிகளைச் செய்ய வேண்டாம் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றோம். இது மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழ் மக்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றார்கள். அது மட்டுமல்ல இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள், அகில இந்திய அரசியல் கட்சிகள் கூட தற்போது வலியுறுத்த தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்ல தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள்ளே எங்களுக்கு ஆதரவான சக்திகள் தோன்றியுள்ளன.
அண்மையில் கூட உங்களுக்குத் தெரியும். தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியன் தமது பதவியில் இருந்து விலகி தமது உணர்வைப் பிரதிபலித்தார். அதேபோல இந்திய மத்திய அரசுக்குள்ளும் இவ்வாறு எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கூடிய சில செயற்பாடுகளை அங்கேயுள்ள அரசியல் கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றன.
வன்னியில் இருந்து பெருமளவிலான மக்கள் தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்து விட்டார்கள் என்று தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது?
அது உண்மையில் ஒரு தீவிரமான பொய்ப்பிரச்சாரமாகும். ஒரு சில மக்கள் இராணுவ நடவடிக்கையின் போது அகப்பட்டுக்கொண்ட காரணத்தினால் அங்கே சென்றிருக்கிறார்கள். அதனை வைத்துக்கொண்டும் மற்றும் காயப்பட்ட மக்கள் கப்பல் மூலம் அங்கே சென்று அவர்களுடைய சிகிச்கை முடிந்தப்பின் அங்கேயுள்ள திறந்த வெளி சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டு வருவதும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவ்வாறான மக்களை வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசு ஒரு பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகின்றது. இங்கேயுள்ள அநேகமாக எல்லோருக்கும் இது தெரியும்.
தென்பகுதியில் தற்போது ஊடகங்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் ஒரு பாரிய அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றது. தாம் எதை எதிர்பார்க்கின்றதோ, தாம் மக்களுக்கு எதைச் சொல்ல விரும்புகிறதோ அந்த செய்திகள் மட்டுமே மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது. இதற்கு எதிர்மறையாக தாயக மண்ணில் ஊடகங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களுக்கான சுதந்திரத்தைப் பேணி அவர்களை இன்று ஊக்கப்படுத்துகிறார்கள். ஏன் குறிப்பாக இந்த கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன் என்றால் இன்று உலகத்திலேயே இத்தனை இடர்களுக்கு மத்தியிலும் ஓயாமல் ஒலிக்கும் ஒரே ஒரு வானொலி புலிகளின் குரல் வானொலி என்பதால் இந்த கேள்வியைக் குறிப்பாக முன்வைக்கின்றேன்.
இங்கே எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் சுதந்திரம் முற்றும் முழுதாக இருக்கின்றது. புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் போன்ற பத்திரிகை வெளிவருகின்றன.
புலிகளின் குரல் வானொலி ஊடாக மக்கள் சகல செய்திகளையும் அறிந்து வருகின்றார்கள். சகல செய்திகளும் எவ்வித மாற்றமும் இல்லாமல் உண்மையான செய்திகளே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இங்கேயுள்ள மக்கள் எல்லாரும் தொடர்ச்சியாக புலிகளின் குரலைக் கேட்டு வருகின்றனர். புலம்பெயர் மக்கள் கேட்டு வருகின்றனர். அதேபோன்று இங்கே வெளியாகின்ற ஈழநாதம் பத்திரிகையும் தொடர்ச்சியாக படித்து வாசித்து அறிந்து வருகின்றனர். நாங்கள் ஊடகங்களில் தலையிடுவதில்லை. ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குகின்றன.
ஊடகச் சுதந்திரம் முற்றும் முழுதாகப் பேணப்படுகிறது. உண்மையான செய்திகள் தான் எங்களது ஊடகங்கள் மூலம் மக்களுக்குப் போய் சேர்கின்றன. அதுமட்டுமல்ல அனைத்துலக ஊடகவியலாளர்களுக்குக் கூட நாம் அழைப்புக்கள் விடுத்திருக்கின்றோம். எங்களுடைய பிரதேசங்களில் வந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளுமாறு இங்கேயுள்ள யுத்த சூழல், மக்களுடைய மனநிலை எல்லாம் அறிந்து கொள்ளுமாறு நாங்கள் அனைத்துலக பத்திரிகையாளர்களுக்குகூட அழைப்பு விடுத்திருக்கின்றோம்.
அதேபோன்று சிங்கள பிரதேசத்தில் உள்ள சில பத்திரிகையாளர்கள் கூட எங்களுடைய உண்மையான செய்திகளை வெளியிட்டு, அங்கே பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்பட்டு அவர்கள் பழிவாங்கப்படுகின்ற சம்பவங்கள் நிறைய இடம்பெற்றதையும் இந்த வேலையில் குறிப்பிட விரும்புகின்றேன்.
பிரித்தானியாவில் இருந்து புலம்பெயர் மக்களால் 'வணங்கா மண்' என்ற கப்பல் தாயக மக்களுக்கான உதவிப் பொருட்களோடு புறப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை தாயக மக்கள் எவ்வாறு எதிர்பார்த்து இருக்கின்றனர்?
தாயக மக்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஏனென்றால் எங்களுடைய மக்கள் புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களுடைய இந்த உறவுகள் தங்களுடைய முயற்சியினால், தங்களுடைய மக்களுடைய பசியை, பட்டினியைப் போக்குவதற்கான எல்லா வீடுகளுக்கும் சென்று உணவுப் பொருட்களைச் சேகரித்து ஒரு கப்பல் மூலம் இங்கே அனுப்பும் போது எங்களுடைய மக்கள் மிக ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.
ஆனால் சிங்கள அரசு அண்மையயில் சில அறிக்கைகள் விட்டிருக்கின்றது. அந்தக் கப்பல் வந்தால் தாங்கள் இங்கே நடவடிக்கை எடுப்போம். அந்தக் கப்பலைத் தாக்கிடுவோம் என்று கூட கூறியிருக்கிறார்கள். இவ்வாறு ஒரு மனிதாபிமான செயலுக்குக் கூட இங்கே இடமில்லாத அளவிற்கு சிங்கள அரசினுடைய அராஜகம் தலைத்தூக்கி இருக்கின்றது. இந்த சூழ்நிலையிலாவது உலக நாடுகள் சிறிலங்கா அரசினுடைய இவ்வாறான பயங்கரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்வர வேண்டுமென நாம் பெரிய ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றோம்.
இன்று புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து எழுச்சி நடவடிக்கைகளிலும் தமிழீழ தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கின்றது. இது எவ்வளவு தூரம் சிறிலங்கா அரசாங்கத்தை விசனத்திற்குள்ளாக்குகின்றது?
முழு உலகத் தமிழினமும் ஒரு குடைக்குள் ஒன்று சேர்ந்து நிற்கின்றது என்பது சிறிலங்கா அரசிற்கு ஒன்று நன்றாகத் தெரிகின்றது. உலகத் தமிழினத்தின் சின்னமாக இந்தப் புலிக்கொடி உலக நாடுகளில் குறிப்பாக உலகத்தில் உள்ள முக்கியமான எல்லா தலைநகரங்களிலும் இந்தக் கொடி பறக்கின்றதைப் பார்க்கும் போது ஒரு அடக்கமுறையாளனுக்கு எங்கள் மீது இனவாதத்திற்குரிய அதியுச்ச உணர்வு கொழுந்துவிட்டு எரிவதை அவர்களுடைய பிரதிபலிப்புகள் மூலம் அறியக்கூடியதாய் இருக்கின்றது.
அனைத்துலக நாடுகளில் எழுச்சி நிகழ்வுகளை அங்குள்ள மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது ஒவ்வொரு வடிவத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அனைத்து வடிவங்களின் ஊடாக அனைத்துலக நாடுகளுக்கும் ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் மக்கள் சொல்ல வேண்டிய முக்கிய விடயம் என்ன?
எல்லா இடங்களிலும் எல்லா நாடுகளிலும் புலம்பெயர்ந்திருக்கின்ற எங்கள் மக்கள் முழு உலகமே உணரச் செய்யும் அளவிற்கு எழுச்சி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அது இன்றைக்கு எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை, ஏனைய நாடுகள் அங்கீகரிக்கும் அளவிற்கு, ஏனைய நாடுகள் எங்கள் போராட்டம் தொடர்பாக போராட்டத்தின் நிலைத்தன்மை தொடர்பாக உணரச் செய்யும் அளவிற்கு அந்த மக்களுடைய எழுச்சி எல்லா இடமும் காணப்படுகிறது.
இதில் குறிப்பாக தற்போது ஐரோப்பிய நாடுகளாக இருக்கட்டும், கனடாவாக இருக்கட்டும் கடந்த வாரம் சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்பேன், வருகின்ற சனிக்கிழமை சிட்னி. இதில் குறிப்பாக இளையோர் அந்த மக்களுக்கு நமது விடயங்களை எடுத்துச் செல்லும் விதமாக வேறு வேறு பல வடிவங்களில் இந்த போராட்டங்களை எடுத்துச் செல்ல தம்மாலான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு பார்க்கின்றார்கள்?
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இதனைப் பார்க்கின்றோம். எங்களுடைய மகிழ்ச்சி மட்டுமல்ல; எங்களுடைய மக்கள்; எங்களுடைய இயக்கம்; எங்களுடைய தலைவர்; எங்களுடைய தளபதிகள் எல்லாருக்கும் எழுச்சியாக இருக்கின்றது.
எங்களுடைய மக்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ள இளைய தலைமுறைகள் மிகவும் எழுச்சியாக கடந்த காலங்களை விட தற்போது இன்னும் மிக மிக எழுச்சியாக எல்லா நாடுகளிலும் வித்தியாசமான எழுச்சி போராட்டங்களை நடத்துவதன் ஊடாக முழு உலகத்தையும் எங்களுடைய போராட்டத்தை அங்கீகரிக்கின்ற அளவிற்கு மக்களுடைய எழுச்சி என்றுதான் நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்.
ஊடகங்களின் ஊடாக மக்களின் எழுச்சியினை நாங்கள் அறியக்கூடியதாய் இருக்கின்றது. எங்களுடைய தேசியத் தலைவர் எப்போதும் புலம்பெயர் இளைய தலைமுறை தொடர்பாக பெரிய நம்பிக்கையோடும் பெரிய எதிர்ப்பார்ப்போடும் இருக்கின்றார்.
இது எந்த வகையில் தாயகத்தில் உள்ள மக்களையும் போராளிகளையும் எழுச்சி கொள்ள வைக்கின்றது?
மக்களுடைய ஒவ்வொரு போராட்டமும் அங்கே உள்ள நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களை, கோட்பாட்டாளர்களை ஈர்க்கக்கூடிய முறையில் அவர்களின் போராட்டம் எழுச்சித் தன்மை உடையதை நாங்கள் உணரக்கூடியதாய் இருக்கின்றது. அந்த வகையில் எமது ஒட்டுமொத்த மக்களும் புலம்பெயர் இளைய தலைமுறையினர் தொடர்பாக பெரிய நம்பிக்கையோடு நாங்கள் இருக்கின்றோம்.
நாங்கள் இப்படியான போராட்டங்களைச் செய்யும்போது, எமக்கான தீர்வு, தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பதை அனைத்துலகத்திற்கு நாங்கள் எவ்வாறு முன்வைக்க வேண்டும்?
எங்களுடைய போராட்டம் எங்களுடைய தீர்வு என்பது முற்றும் முழுதான சுயநிர்ணய உரிமையினை அடிப்படையாகக் கொண்டது. நாம் ஏற்கனவே போராட்டத்தில் கோட்பாடு, போராட்டத்தில் இலக்கு என்பதை எங்களுடைய மக்கள் 77 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஊடாக முழு உலகத்திற்கும் சொல்லியிருக்கின்றார்கள். அதாவது தமிழீழ தனியரசு அமைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இதுதான் எங்களின் தீர்வு. இந்தத் தீர்வின் ஊடாகத்தான் எங்களுடைய மக்கள் நிம்மதியான, அமைதியான, சுதந்திரமான வாழ்வை வாழ முடியும்.
இதிலே புலம்பெயர் ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணி ஒரு பாரிய பணி. எமக்குள் சில கருத்து முரண்பாடுகள் ஊடகங்களுக்குள் இருந்தாலும் நாங்கள் அந்த சந்தர்ப்பத்தில் தாயக மக்களின் அவலங்கள் தொடர்பாக எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் அதனுடைய நியாயத்தன்மை தொடர்பாகவும் நாங்கள் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் எந்த மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எல்லா ஊடகங்களும் இன்று சிங்கள அரச பயங்கரவாதத்தினுடைய செயற்பாடுகளை அந்தந்த நாடுகளில் உள்ள அரசுகள் உணரும் வண்ணம் செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக செய்ய வேண்டும்; அது மட்டுமல்ல எங்களுடைய போராட்டம் கடந்த காலத்தில் எவ்வாறு தோற்றம் கண்டது; கடந்த காலத்தில் எவ்வாறான போராட்டங்களில் இருந்த ஆயுதப் போராட்டமாக இன்று நாம் வளர்ச்சி பெற்றது எப்படி என்பதை எல்லாம் அடுத்து சொல்லி வருகின்றீர்கள். தொடர்ந்து இவ்வாறான பணிகளைச் செய்ய வேண்டும்.
ஊடகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்பது சின்ன விடயம். அதை நாம் பெரிதாக பார்க்கக் கூடாது. எங்கள் மக்களின் அரசியல் இலட்சியம், போராட்டம், எங்களுடைய மக்கள் இதற்காக இவ்வளவு பெரிய தியாகங்களை மேற்கொள்கின்றார்கள் என்பதை நீங்கள் உலகத்திற்குத் தொடர்ச்சியான வலியுறுத்தி வர வேண்டும் என்பதைத் தான் நாங்கள் பெரிய ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றோம்.
இன்று தாயகத்தில் மக்கள் கொடுக்கும் அந்த அதி உச்ச விலை உங்களைத் தனிப்பட்ட ரீதியில் எந்த அளவில் பாதித்திருக்கின்றது?
அதாவது எங்கள் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது மிக விரைவாக வெற்றி கொள்ள வேண்டும் என்பதான உணர்வைத்தான் எங்களுக்குத் தருகின்றது
.

No comments: